உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் ஓ.பி.சி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டுவருகிறது. அதற்கான போராட்டங்களும் நடைபெற்றிருக்கின்றன.

இடஒதுக்கீடு

உதாரணமாக, உள்ளாட்சித் தேர்தலில் ஓ.பி.சி பிரிவினருக்கு இடஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி மத்தியப் பிரதேசத்தில் மாநிலம் தழுவிய முழு அடைப்புப் போராட்டம் கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்றது.

தற்போது நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் ஓ.பி.சி பிரிவினருக்கு இடஒதுக்கீடு அதிகரிக்கப்படுமா என்ற கேள்வி மாநிலங்களவையில் எழுப்பப்பட்டது. தி.மு.க-வைச் சேர்ந்த வில்சன், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸைச் சேர்ந்த ரியாக கிருஷ்ணய்யா, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் வந்தனா சவான் ஆகியோர் எழுப்பிய கேள்விக்கு, மத்திய பஞ்சாயத்துராஜ் இணை அமைச்சர் கபில் மோரேஷ்வர் பாட்டீல் பதிலளித்தார்.

வில்சன்

அப்போது, ‘உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது. அந்த ஒதுக்கீட்டின் கீழ் ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி ஆகிய சமூகங்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கலாம். அதே நேரத்தில், ஓ.பி.சி-க்கு இடஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு உரிமை இருக்கிறது’ என்றார் மத்திய இணையமைச்சரான கபில் மோரேஷ்வர் பாட்டீல்.

மேலும், ‘அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 243 டி.ன் கீழ் மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீடு ஓ.பி.சி-க்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஆனாலும், 21 மாநில அரசுகள் 50 சதவிகிதம்வரை இடஒதுக்கீட்டை அதிகரித்திருக்கின்றன. இந்த நிலையில், மக்கள்தொகை அடிப்படையில் ஓ.பி.சி இடஒதுக்கீடு அதிகரிக்கப்படுமா என்று உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். ஆனால், அது தொடர்பான ஆலோசனை எதுவும் மத்திய அரசிடம் இல்லை’ என்று கபில் மோரேஷ்வர் பாட்டீல் கூறினார்.

கபில் மோரேஷ்வர் பாட்டீல்

‘உரிய தரவுகள் இல்லாமல் 50 சதவிகிதத்துக்கு மேல் இடஒதுக்கீட்டை அதிகரிக்கக்கூடாது’ என்று உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

பல்வேறு மாநிலங்களில், உள்ளாட்சித் தேர்தலில் ஓ.பி.சி பிரிவினருக்கு இடஒதுக்கீட்டை அதிகரிப்பதற்கான முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன. உத்தரப்பிரதேச மாநில அரசு, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஓ.பி.சி ஒதுக்கீட்டுக்கான கணக்கெடுப்பை நடத்துவது குறித்து ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட ஆணையத்தை அமைத்தது. அந்த ஆணையம் தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்திருக்கிறது.

குஜராத்தில், பஞ்சாயத்து மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் ஓ.பி.சி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை10 சதவிகிதத்திலிருந்து 27 சதவிகிதமாக அந்த மாநில அரசு சமீபத்தில் உயர்த்தியது. மத்தியப்பிரதேசத்தில், உள்ளாட்சித் தேர்தலில் ஓ.பி.சி-க்கு இடஒதுக்கீடு வழங்க 2022-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

உள்ளாட்சி

மகாராஷ்டிராவில் ஓ.பி.சி பிரிவினருக்கு இடஒதுக்கீடு இல்லாமல் உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பாணையை வெளியிடுமாறு கடந்த ஆண்டு மே மாதம் மகாராஷ்டிரா மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆகையால், உள்ளாட்சித் தேர்தலில் ஓ.பி.சி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படாததால், தங்களுக்கு அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் ஓ.பி.சி சமூகத்தினர் கவலை தெரிவித்தனர்.

மகாராஷ்டிராவில் வார்டுகளை மறுவரையறை செய்வதற்கான மசோதாவை மாநில அரசு நிறைவேற்றியது. அதன் மூலம், ஓ.பி.சி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டு உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான முயற்சி மாநில அரசால் மேற்கொள்ளப்பட்டது. அதற்கு எதிராக சிலர் நீதிமன்றம் சென்றனர். அதைத் தொடர்ந்து, ஓ.பி.சி இடஒதுக்கீடு இல்லாமல் உள்ளாட்சித் தேர்தலை நடத்துமாறு மாநில அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

மோடி

இந்த நிலையில்தான், உள்ளாட்சித் தேர்தலில் ஓ.பி.சி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை அதிகரிப்பதற்கான யோசனையோ, திட்டமோ மத்திய அரசிடம் இல்லை என்று மத்திய இணையமைச்சர் தெரிவித்திருக்கிறார். சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று நாடு தழுவிய அளவில் குரல்கள் எழுந்துவரும் சூழலில், உள்ளாட்சியில் ஓ.பி.சி-க்கு இடஒதுக்கீடு அதிகரிக்கப்படாது என்ற மத்திய அரசின் முடிவு தேசிய அரசியலில் பேசுபொருளாகியிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

from Tamilnadu News https://ift.tt/hdKSnc4