சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் கடந்த 9-ம் தேதி மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிமுக சார்பில் நிவாரண பொருள்கள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நிவாரண பொருள்கள் வழங்கப்பட்டன.

நிவாரணம் பொருள் வழங்கும் எடப்பாடி

அப்போது தண்டையார்பேட்டை கருணாநிதி நகர் மூன்றாவது தெருவை சேர்ந்த சொக்கம்மாள் – வடிவேலு தம்பதியின் முத்த மகளான 14 வயது சிறுமி யுவஶ்ரீ கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தார். சிறுமியின் உடலில் காயம் இருந்ததாக, அவரது உறவினர்கள் சென்னை மாவட்ட ஆட்சியரிடம் புகாரளித்தனர்.

இதையடுத்து, சிறுமி உயிரிழந்த சம்பவத்தை ஆர்.டி.ஓ. விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த சம்பவம் நடைபெற்று நான்கு நாட்கள் கடந்தும் எவ்வித முன்னேற்றமும் நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து சிறுமியின் உறவினர்கள் சிலரிடம் பேசினோம். “யுவஶ்ரீ உடல் காயங்கள் ஏற்பட்டுதான் உயிரிழந்து இருக்கிறார். நாங்கள் மறியல் போராட்டம் செய்தப்பின்னர்தான் வழக்கே பதிவு செய்யப்பட்டது.

உயிரிழந்த சிறுமி

ஆனால், நான்கு நாள்கள் கடந்தும் சிறுமி உயிரிழந்த வழக்கில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. அரசும் மெளனமாக இருப்பது எங்களுக்கு உண்மையாகவே அதிர்ச்சியாக இருக்கிறது. இதனாலேயே, சிறுமி மரணத்தில் ஏதோ தவறு இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது.” என்றனர்.

இதுதொடர்பாக ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ எபினேசரிடம் பேசினோம். “ஆர்.கே.நகர் தொகுதிகளில் வெள்ளப் பாதிப்புக்கு உள்ளான பகுதிகளில் ஒருவாரத்துக்கு மேலாக நிவாரண பொருள்களை திமுக சார்பில் வழங்கி வருகிறோம். ஆனால், எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிவாரண பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சியை, அவர்களது கட்சி நிகழ்ச்சிபோல, காசு கொடுத்து ஆட்களை கூட்டி நடத்தி இருக்கிறார்கள். இதனால்தான், கூட்ட நெரிசல் ஏற்பட்டு சிறுமி உயிரிழந்துவிட்டார். இதுதொடர்பாக விசாரணை நடக்கிறது. விசாரணையின் முடிவில்தான் உண்மை தெரியவரும்.

உயிரிழந்த சிறுமியின் பெற்றோருடன் ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ எபினேசர்

ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ என்ற முறையில் எனது சொந்த நிதியில் இருந்து ஒரு லட்சம் ரூபாய் அக்குடும்பத்துக்கு கொடுத்து இருக்கிறேன். அக்குடும்பத்துக்கு இந்த பணம் ஆறுதலை தருமா என்றால் நிச்சயம் தராதுதான். எனவே, யுவஶ்ரீயின் சகோதரனின் கல்வி செலவை பார்த்து கொள்வதாக பெற்றோரிடம் வாக்கு கொடுத்து இருக்கிறேன். ஆனால், நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த அ.தி.மு.க தரப்பில் இருந்து அக்குடும்பத்துக்கு எந்த உதவியையும் செய்யவில்லை. ” என்றார் காட்டமாக.

இதுகுறித்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த அதிமுக வடசென்னை தெற்கு மாவட்ட செயலாளர் ராஜேஷிடம் பேசினோம். “சிறுமி உயிரிழந்த சம்பவம் ஒரு துர்தஷ்டமான ஒரு நிகிழ்வு. யாருடைய குடும்பத்திலும் இதுபோன்ற நிகழ்வு நடக்கக்கூடாது. ஆனால், இதை வைத்து தி.மு.க அப்பட்டமான அரசியல் செய்கிறது. நிவாரணம் பொருள்களை வாங்க சிறுமியின் உறவினர் ஒருவர் வரிசையில் நின்று இருக்கிறார். அவரை நோக்கி சிறுமி நடந்துவரும்போது மயக்கமடைந்து கீழே விழுந்து இருக்கிறார். இந்த காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி, ராஜேஷ்

தற்போது ஆர்.டி.ஓ விசாரணையில் இருப்பதால் அதை வெளியிட முடியாது. கீழே விழுந்த சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றதே நாங்கள்தான். ஆனால், சிறுமியை காப்பாற்ற முடியவில்லை. சிறுமி நான்கு நாட்களுக்கு மேலாக ஒழுங்காக சாப்பிடாததே மயக்கமடைய காரணமென்று மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள். மழை நின்று நான்கு நாட்கள் ஆகியும் அப்பகுதிக்கு ஆட்சியாளர்கள் யாரே செல்லவில்லை. அப்பகுதியினர் பசியில் வாடியிருக்கிறார்கள். நாங்கள்தான் அங்கு முதலில் நிவாரணம் வழங்கினோம். நிலைமை இப்படியிருக்க இறப்பை வைத்து கேவலமான அரசியலை தி.மு.க செய்கிறது. விசாரணை முடிந்து இறுதி அறிக்கை வரும்போது, உண்மை தெரியவரும்.” என்றார் சூடாக.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

from Tamilnadu News https://ift.tt/YOfCxvt