கோவை மாவட்டம், ஆனைமலையில் அமைந்திருக்கும் மாசாணி அம்மன் கோயிலில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாகவும், டார்கெட் நிர்ணயித்து பணம் வசூல் செய்வதாகவும், அம்மனுக்குச் சாற்றப்படும் புடவைகளைக் கோயில் கணக்கில் வரவு வைக்காமல், வெளியில் விற்பதாகவும், அறநிலையத்துறை அதிகாரிகள் கண்டும் காணாமல் இருப்பதாகவும் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் ஏற்கெனவே குற்றம்சாட்டி வந்தனர்.

இந்தச் சூழலில் தற்போது அங்கு நடைபெற்ற வருடாபிஷேக விழாவிலும், சர்ச்சை வெடித்திருக்கிறது. பொள்ளாச்சி ஆனைமலை மாசாணியம்மன் திருக்கோயிலில் நவம்பர் 20, 21 ஆகிய தேதிகளில் வருடாபிஷேக விழா நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நடந்த கலசாபிஷேக விழாதான், மக்கள் மத்தியில் பெரும் அதிருப்திக்கும், விமர்சனத்துக்கும் உள்ளாகியிருக்கிறது.

மாசாணியம்மன்

மாசாணி அம்மன் கோயில் நிர்வாகத்தின்மீது எழும் புகார் குறித்து விசாரணையில் இறங்கினோம்…

இது குறித்து நம்மிடம் பேசிய மாசாணி அம்மன் கோயில் உதவி அர்ச்சகர்கள் சிலர், “மாசாணி அம்மன் கோயிலின் உதவி ஆணையாளர் விஜயலட்சுமி, இந்தக் கோயிலின் தலைமை அர்ச்சகர் சோமுவுக்குத் தனிப்பட்ட முறையில், நிறைய சலுகைகளை வழங்கி வருகிறார். கோயில் பணிகளில் குழந்தைத் தொழிலாளர்களைப் பயன்படுத்தக் கூடாது என சென்னை உயர் நீதிமன்ற உத்தரவும் மீறப்பட்டிருக்கிறது. கோயில் ஆகம விதிப்படி நடக்கும் உள் வேலைகளுக்கு, வெளியிலிருந்து ஆட்களைக் கொண்டுவந்து, கோயிலில் பூஜைகளை செய்யக் கூடாது எனவும் மிகத் தெளிவாக சட்ட அறிவுறுத்தல் இருக்கிறது. கோயிலில் தகுதிவாய்ந்த உதவி அர்ச்சகர்கள் இருந்தும், அவர்களையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, கோயிலின் தலைமை அர்ச்சகர் சோமு தன்னுடைய 17 வயது மகனை உதவி அர்ச்சகராக நியமித்து, வருடாந்திர கலசாபிஷேக பூஜையை நடத்த வைத்திருக்கிறார். பள்ளியில் படிக்கும் மாணவரைப் பணியில் அமர்த்தியது, வெளியாட்களைக் கோயில் பணியில் ஈடுபடுத்தியது, அச்சகர்களிடம் கலந்தாலோசிக்காமல் கோயில் விவகாரங்களில் தன்னிச்சையாக முடிவெடுப்பது, தலைமை அர்ச்சகர் சோமுவுக்கு மட்டும் சிறப்புச் சலுகை கொடுப்பது என ஆணையர் விஜயலட்சுமிமீதும் புகார் வாசிக்கிறார்கள்.

மாசாணி அம்மன் கோவில் வருடாபிஷேகம்

புகார்கள் அறங்காவல் குழு வரை செல்ல… தலைமை அர்ச்சகர் சோமுவைக் கோயில் உட்பிரகாரத்திலுள்ள சிறு கோயிலில் பூஜை செய்ய நியமித்து உத்தரவிட்டார் ஆணையர் விஜயலட்சுமி. இதேபோல மாலைகளைப் பக்தர்களுக்குக் கொடுக்காமல் மீண்டும் கடைகளுக்கே அனுப்பிவைப்பது, சேலைகளைக் கடைகளுக்குத் திருப்பிக் கொடுப்பது எனப் பல்வேறு சர்ச்சைகள் கோயிலைச் சுற்றுகின்றன” எனப் புகார் வாசித்தனர்.

குற்றச்சாட்டுகள் குறித்து அறங்காவலர் குழு நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். “அர்ச்சகர்கள் சொல்லும் புகார் குறித்து நாங்கள் விசாரணை நடத்தினோம். உண்மை எனத் தெரிய வந்தபிறகுதான், அவரைக் கோயில் வளாகத்துக்குள்ளேயே இருக்கும் வேறொரு கோயிலில் அர்ச்சகராக நியமித்தோம். ஆனால், நியமித்தது முதல் இன்றுவரை அவர் வேலைக்கே வரவில்லை. அர்ச்சகர் சோமு தான் செய்ததுதான் சரி என்கிறார். தான் தலைமை அர்ச்சகர் என்ற ஈகோ இருக்கிறது. அறங்காவலர் குழுவையே மதிப்பதில்லை. அவருக்கு ஆணையரும் சப்போர்ட்டாக இருக்கிறார். ஆணையரும் எல்லோரையும் அனுசரித்துச் செல்ல வேண்டும். ஆனால், அவருக்கு வேண்டியவர்களுக்கு ஆதரவாகச் செயல்படுவது சரியல்ல. அது கோயில் நிர்வாகத்தைத்தான் பாதிக்கும்.

மாசாணி அம்மன் கோயில்

அம்மனுக்குச் சாற்றப்படும் மாலைகளும் சேலைகளும் திரும்பவும் கடைகளுக்கே செல்வதாகப் புகார் சொல்லப்பட்டது. அறங்காவலர் குழு அமைத்து ஒன்பது மாதங்களில் அதையெல்லாம் மாற்றியிருக்கிறோம். அம்மனின் கழுத்தில் 8 மாலைகளுக்குமேல் இருக்கக் கூடாது. அனைத்து மாலைகளையும் பக்கதர்களுக்கே கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறோம். சேலைகளை ஆதரவற்றவர்களுக்கும் அண்ணா நினைவுநாள், சுதந்திர தினம், தீபாவளி போன்ற நாள்களில் ஏழை எளிய மக்களுக்கும் கிடைக்கும்படிச் செய்கிறோம்.

அர்ச்சகர் சோமு மாற்றல் உத்தரவு

இதுவரை ‘நானே ராஜா நானே மந்திரி’ என இருந்தவர்கள், அறங்காவலர் குழு அமைத்தபிறகு தன் போக்குக்கு இருக்க முடியவில்லையே என்ற எண்ணம் இருக்கிறது. இதெல்லாம் மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கோயில் நிர்வாகத்தைச் சீர் செய்து, சிறப்பான நிர்வாகத்தைக் கொடுக்க வேண்டும் என்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்” என்றனர்.

புகார்கள் குறித்து மாசாணி அம்மன் கோயில் உதவி ஆணையாளர் விஜயலட்சுமியைத் தொடர்புகொண்டு பேசினோம். “புகாரளித்தவர்கள் யார்?” எனக் கேட்டவர், பிறகு, “அப்படி எந்த ஆகம விதிமீறல்களும் நியமனங்களும் சட்டத்துக்குப் புறம்பான விஷயங்களும் நடைபெறவில்லை. எல்லாம் வதந்தி. தவறான, பொய்ப் புகார்களைச் சொல்கிறார்கள்” எனச் சுருக்கமாக முடித்துக்கொண்டார். தொடர்ந்து மாசாணி அம்மன் கோயில் நிர்வாகத்தின்மீது புகார்கள் எழுந்தவண்ணம் இருக்கின்றன. உண்மை என்ன என்பதைக் கண்டறிந்து, அறநிலையத்துறை சார்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் அந்தப் பகுதி மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

from Tamilnadu News https://ift.tt/zkxB4gd