மாடர்ன் தியேட்டரும் கருணாநிதியும்:
முன்னொரு காலத்தில் தமிழக திரைத்துறை மட்டுமின்றி இந்திய சினிமா துறையில் கொடி கட்டிப் பறந்த நிறுவனம்தான் மாடர்ன் தியேட்டர். இதுவரை பல்வேறு மொழிகளில் 150-க்கும் மேற்பட்ட திரைப்படங்களைத் தயாரித்திருக்கிறது. தென் இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் திரைக்கூடமும் இந்த நிறுவனம்தான். முதல் வண்ணத்திரைப்படம் தயாரித்தும் இதே நிறுவனம்தான். முன்னாள் முதல்வர்களான எம்.ஜி.ஆர், கருணாநிதி போன்றவர்களின் சினிமா வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியதும் இந்த சினிமா நிறுவனம்தான்.

சேலம் ஏற்காடு சாலையில் மாடர்ன் தியேட்டர் நினைவாக நுழைவாயில் இருக்கிறது. கடந்த பிப்ரவரி மாதம் சேலம் சென்ற தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்த நுழைவாயில் முன்பாக புகைப்படம் எடுத்துக்கொண்டார். மேலும், அந்த நிறுவனத்துடன் கருணாநிதியுடனான நினைவுகளையும் பகிர்ந்து கொண்டார். முதல்வர் சேலம் செல்லும்போதே, அந்த நிறுவனத்தைச் சேர்ந்த குடும்பத்தினருடன் அந்த இடத்தில் கருணாநிதிக்குச் சிலை வைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டது.
கருணாநிதிக்குச் சிலை!
இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்று விவரமறிந்த சிலரிடம் பேசினோம், “முதல்வர் பேசியதைத் தொடர்ந்து, சேலம் மாவட்ட ஆட்சியர் மாடர்ன் தியேட்டர் நிறுவனத்தைச் சேர்ந்த குடும்ப உறுப்பினர்களை அழைத்துச் சிலை அமைப்பது குறித்து பேச்சு வார்த்தை நடத்தியிருக்கிறார். கிட்டத்தட்ட ஒன்பது மாதங்களாகச் சிலை அமைப்பது குறித்து பலமுறை பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது. அந்த குடும்ப உறுப்பினர்களும் கலந்தாலோசனை செய்து முடிவு செய்கிறோம் என்று பதில் சொல்லி வந்திருக்கிறார்கள். ஆனால் முடிவை தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில், மாடர்ன் தியேட்டர் நுழைவாயிலுக்கு வந்த அரசு அதிகாரிகள் அந்த நிலத்தை அளவு செய்தனர். அதோடு, அந்த இடம் நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான இடம் என்று சொல்லி மார்க் செய்திருக்கிறார்கள். மேலும், அந்த நுழைவாயில் அருகே இந்த இடம் நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான இடம். அத்துமீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிப்புப் பலகையும் வைத்துவிட்டுச் சென்றுள்ளார். அடுத்தவராம் முதல்வர் சேலம் வரவுள்ள நிலையில் கருணாநிதியின் சிலையைத் திறப்பதற்காக அரசு தரப்பில் கடும் அழுத்தம் கொடுக்கப்படுகிறது” என்றார்கள் விரிவாக.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பேசும்போது, “கடந்த பிப்ரவரி மாதம் சேலம் வந்த முதல்வர் எங்களைச் சந்தித்துப் பேசினார். அந்த இடத்தில் என் தந்தைக்குச் சிலை வைக்கவேண்டும் என்று கோரிக்கையும் வைத்தார். நாங்களும் கொடுப்பதில் கலந்தாலோசனை செய்து முடிவு சொல்கிறோம் என்று கூறினோம். பிறகு இந்த விவகாரம் தொடர்பாகச் சேலம் மாவட்ட ஆட்சியர் எங்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திவந்தார். நாங்களும் எங்கள் தரப்பு கோரிக்கை சிலவற்றையும் வைத்தோம். இந்த சூழலில்தான் இந்த இடத்தை ஆக்கிரமிப்பு என்று அரசு சொல்கிறது.
அந்த நுழைவாயிலில் வர்மா என்று எழுதியிருந்ததையும் கிரேன் வைத்து அகற்றிவிட்டார்கள். இதேபோல எங்களுக்குச் சொந்தமான இன்னொரு பட்டா நிலத்தையும் ஆக்கிரமிப்பு நிலம் என்று சொல்லி எந்த முன்னறிவிப்பும் இல்லாது 20-க்கும் மேற்பட்ட போலீஸாருடன் வந்தனர். இதுபோல வேறு எந்த ஆட்சியிலும் நாங்கள் பாதிக்கப்பட்டது கிடையாது. முதல்வர் தலையிட்டு எங்களுக்கும், எங்கள் குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வழங்கவேண்டும்” என்று பேசியிருந்தார்.

இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் தங்களின் கண்டனங்களை பதிவு செய்துள்ளார்கள். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “பிறருக்குச் சொந்தமான இடத்தில் தனது தந்தையின் சிலையை அமைக்க முயற்சிப்பது, எக்காலத்திலும் அவரது தந்தைக்கோ, அவரின் சிலைக்கோ எந்த வித மரியாதையையும் பெற்றுத் தராது என்பதை தமிழக முதல்வர் ஸ்டாலின் உணர்வது நலம்.” என அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk
from Tamilnadu News https://ift.tt/a18XbUz
