டிசம்பர் 13-ம் தேதியன்று, நாடாளுமன்ற மக்களவையில் இரண்டு இளைஞர்கள் திடீரென பார்வையாளர்கள் மாடத்திலிருந்து அவைக்குள் குதித்து, மஞ்சள் நிறப் புகையைப் பரப்பிய சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் தொடர்பாக ஐந்து பேரை காவல்துறை கைதுசெய்து விசாரணை நடத்திவருகிறது. இத்தகைய சம்பவம் நடந்த நாளிலிருந்து எதிர்க்கட்சி எம்.பி-க்கள் பலரும், `பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் அறிக்கை வெளியிட வேண்டும்’ என நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் வலியுறுத்திவருகின்றனர்.

எதிர்க்கட்சிகள் போராட்டம்

நாடாளுமன்றத்திலிருந்து கனிமொழி, சு.வெங்கடேசன், டெரிக் ஓ பிரையன் உட்பட மக்களவை, மாநிலங்களைவை எதிர்க்கட்சி எம்.பி-க்கள் 141 பேர் குளிர்காலக் கூட்டத்தொடரிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இவ்வாறு சஸ்பெண்ட் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, காங்கிரஸ் எம்.பி கே.சி.வேணுகோபால், “மக்களைப் பற்றியும், பாதுகாப்புப் பற்றியும் கேள்வியெழுப்பும் எதிர்க்கட்சி எம்.பி-க்களின் குரலை நசுக்குவது, அவர்களை சஸ்பெண்ட் செய்வது என்ற நோக்கத்துடன் அவை செயல்படுகிறது. விவாதங்களுக்காகவோ, கலந்துரையாடலுக்காகவோ அல்ல” என்று கூறினார்.

மேலும், மற்றொரு காங்கிரஸ் எம்.பி ரஞ்சித் ரஞ்சன், “எதிர்க்கட்சியே இல்லாமல் அவை செயல்பட வேண்டுமென பா.ஜ.க அரசு விரும்புகிறது. கேள்வி கேட்கவும், தங்களின் தவறுகளைச் சுட்டிக்காட்டவும் எந்தவோர் எதிர்க்கட்சி எம்.பி-யும் வரக் கூடாது என அவர்கள் விரும்புகிறார்கள். ஹிட்லரைப்போல ஆட்சியை நடத்துவதே அவர்களின் ஒரே நோக்கம்” என்று பா.ஜ.க-வைச் சாடினார். இந்த நிலையில், எதிர்க்கட்சி எம்.பி-க்கள் நாடாளுமன்ற அவைக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

எதிர்கட்சிகள் போராட்டம்

இந்தப் போராட்டத்தின்போது, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி கல்யாண் பானர்ஜி மாநிலங்களவை தலைவர் ஜக்தீப் தன்கர் போல மிமிக்ரி செய்து, கிண்டல் செய்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது. அந்த வீடியோவில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சேர்ந்து சிரிப்பது போலவும், அதை தனது செல்போனில் படம் பிடிப்பதுபோலவும் தெரிகிறது.

இந்த வீடியோவைப் பகிர்ந்த பா.ஜ.க, “எதிர்க்கட்சி எம்.பி-க்கள் ஏன் இடைநீக்கம் செய்யப்பட்டனர் என்று நாடு யோசித்துக்கொண்டிருந்தால், காரணம் இதுதான்… திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி கல்யாண் பானர்ஜி மாண்புமிகு குடியரசு துணைத் தலைவரைக் கேலி செய்தார். ராகுல் காந்தி அவரை ஆவலுடன் உற்சாகப்படுத்தினார்” எனத் தெரிவித்திருக்கிறது.

https://platform.twitter.com/widgets.js

இந்த வீடியோ குறித்து ராஜ்ய சபா தலைவர் ஜக்தீப் தன்கர், “ஒரு எம்.பி என்னைக் கேலி செய்வதையும், மற்றொரு எம்.பி அதை வீடியோ எடுப்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதுவொரு வெட்கக்கேடான செயல்” எனத் தெரிவித்திருக்கிறார்.

from Tamilnadu News https://ift.tt/BneM5Zu