மிக்ஜாம் புயல் பாதிப்புகளிலிருந்து மீண்டுவிட்டாலும், அதனை சுற்றிய நடக்கும் அரசியல் இன்னும் முடிந்தபாடில்லை. பேரிடரால் ஏற்பட்ட சேதத்தை ஆய்வு செய்ய வந்த மத்திய குழு தி.மு.க அரசின் நடவடிக்கைகளை பாராட்டியது. ஆனால் `மத்திய குழுவின் பாராட்டை ஏற்கவில்லை’ என தடாலடியாக பேசியிருக்கிறார் தமிழ்நாடு பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை. மத்திய அரசின் குழு சொன்ன கருத்தை அண்ணாமலை விமர்சித்திருப்பது சர்ச்சையாகியுள்ளது.

டிசம்பர் 3, 4-ம் தேதி பெய்த பெருமழையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களின் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கின. தி.மு.க அரசு மீட்பு பணிகளிலும் முறையாக கவனம் செலுத்தவில்லை எனக் கடும் விமர்சனங்கள் கிளம்பியது. மிக்ஜாம் புயல் மழை வெள்ளம் குறித்து கருத்துதெரிவித்திருந்த பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, “தமிழக அரசுக்கு பெருமழை பெய்யப்போகிறது என்ற தகவல் வந்திருந்தும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படாமல், ஏதும் புரியாது, செய்வது அறியாது, செயலிழந்து போனது” என சாடியிருந்தார்.
மறுபக்கம், வெள்ள பாதிப்புகளை ஆய்வுசெய்ய சென்னை விரைந்த மத்திய அரசின் 6 பேர் கொண்ட குழு, 2 பிரிவாக பிரிந்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 4 மாவட்ட பகுதிகளில் ஆய்வு செய்தனர். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அதிகாரிகள் “புயல் மற்றும் பெரும் வெள்ளத்தை தமிழக அரசு சிறப்பாக கையாண்டுள்ளது. அவர்களுக்கு எங்களது பாராட்டுகள். பாதிக்கப்பட்ட இடங்களை முழுமையாக ஆய்வு செய்துள்ளோம். நிச்சயம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு உதவும்” என்றனர்.

தமிழ்நாடு பா.ஜ.க, தி.மு.க அரசின் செயல்பாடுகளை கடுமையான விமர்சித்துவரும் நிலையில் மத்திய அரசு அதிகாரிகளை கொண்ட குழு அரசின் நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவித்திருப்பது விவாதத்தை ஏற்படுத்தியது. அதோடு நிற்காமல் `மத்திய அரசு அதிகாரிகள், மாநில அரசு அதிகாரிகளை ஒருபோதும் குற்றம்சாட்ட மாட்டார்கள். அதேபோல மாநில முதல்வர்களையும் குற்றம் சொல்ல மாட்டார்கள். மத்திய குழுவின் பாராட்டை தமிழ்நாடு பா.ஜ.க ஏற்கவில்லை” எனப் பேசி சர்ச்சையை கிளப்பியுள்ளார் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை.
திமுக செய்தி தொடர்பாளர் சல்மா இது குறித்து பேசுகையில், “தி.மு.க அரசு மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து சென்னை மீட்டெடுக்க வேக வேகமாக செயலாற்றியது. உயிர்சேதங்களை தவிர்த்து அக்கறையுடன் மக்களை பாதுகாத்தது. குறிப்பாக முதலமைச்சர் தொடங்கி கவுன்சிலர்கள் வரை களமிறங்கி மக்கள் பணியாற்றினர். இதனை ஒப்புக் கொள்ளும் விதமாக அமைந்தது, மத்திய குழுவின் பாராட்டு. ஆனால் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை இதனையும் ஏற்க மறுப்பதுதான் வேடிக்கை.

மத்தியில் ஆளும் கட்சியை சார்ந்தவர்களே அதிகாரிகளின் கருத்தை மறுப்பதெல்லாம் அவமானம். 4 மாவட்டங்களுக்கும் நேரில் சென்று ஆய்வு செய்த அதிகாரிகள் குழுவினரின் கருத்தை ஏற்க மாட்டேன் எனப் பேசுவதன் மூலமே தெரிகிறது…பேரிடரை வைத்து அரசியல் செய்ய துடிக்கிறார் அவர். முதிர்ச்சியற்ற அரசியல்வாதி என்பதையும் மக்கள் நலன்சார்ந்த அரசியலென்றால் என்னவென அண்ணாமலைக்கு தெரியாதென்பது மீண்டுமொருமுறை உறுதியாகிவிட்டது” என்றார் கொதிப்புடன்.
இதற்கு விளக்கமளித்து பேசிய பா.ஜ.க பொதுச் செயலாளர் கார்த்தியாயினி, “மழை வெள்ளத்திலிருந்து சென்னை மக்களை காப்பதில் கோட்டைவிட்டதோடு, மழைநீர்வடிகால் பணிகள் என ஏப்பம் விட்டிருக்கிறது
தி.மு.க அரசு மேலும் அவரச உதவிக்குக்கூட வராமல் தத்தளித்தார்கள் என்பது கண்கூடு. மழை வெள்ளத்தின்போது பால் விநியோகம் கூட செய்யமுடியாமல் தோற்றுப் போனது தி.மு.க அரசு. இந்நிலையில் தமிழ்நாடு அரசு முறையாக கையாண்டது எனச் சொல்வதை எற்க இயலாது. மத்திய குழுவின் பாராட்டை ஏற்கவில்லை” என்ற தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் கூறிய கருத்தில் உறுதியாக இருக்கிறோம்” என்றார்.

நம்மிடம் பேசிய அரசியல் பார்வையாளர் சிலர், “தமிழ்நாடு பா.ஜ.க-வுக்கு இதுதர்ம சங்கடமான விவகாரம், தி.மு.க அரசு மழை வெள்ளத்தை முறையாக கையாளவில்லை என்பது ஊருக்கே தெரியும். இருந்தாலும் மத்திய குழு தமிழ்நாடு அரசை பாராட்டியது ஏன் என புரியவில்லை.

இதில் 2015-விட நன்றாகவே கையாண்டிருக்கிறது தமிழ்நாடு அரசு என மத்திய அரசின் குழு தெரிவிக்கிறது. இரு பேரிடர்களை ஒப்பீடுவது சரியல்ல என்பதே சூழலியல் நிபுணர்களின் கருத்து. இந்நிலையில் மத்திய குழு பாராட்டியது தமிழ்நாடு பா.ஜ.கவுக்கு பெரும் அதிர்ச்சி. ஒரு முதிர்ச்சியடைந்த அரசியல்வாதியென்றால்.. அதுகுறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்றோ… எதனடிப்படையில் அப்படி சொல்கிறார்கள் என்றோ கூறி இவ்விவகாரத்தை தட்டிக்கழித்திருக்கலாம். ஆனால் பதிலுக்கு மத்திய குழுவின் அறிக்கையை ஏற்க முடியாதென பேசியதால் சர்ச்சையில் சிக்கிக் கொண்டார் அண்ணாமலை” என்கிறார்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk
from Tamilnadu News https://ift.tt/kKbDP3w
