புதுச்சேரி, உருளையன்பேட்டையைச் சேர்ந்தவர் கோவிந்தன், கூலித் தொழிலாளர். கடந்த 19-ம் தேதி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவர், கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது கொரோனாவுக்கான அறிகுறிகள் தென்பட்டதால், அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, தனிமைப்படுத்தப்பட்ட சிறப்பு வார்டில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார். அவரின் உடலை அடக்கம் செய்வதற்காக நடவடிக்கைகளை எடுக்காமல், நகராட்சி அதிகாரிகள் காலம் தாழ்த்தியிருக்கின்றனர். அதில் கோபமடைந்த கோவிந்தனின் உறவினர்கள், தொகுதி எம்.எல்.ஏ-வான நேருவுக்குத் தகவல் கூறினர். அதனடிப்படையில் மருத்துவமனைக்கு வந்த எம்.எல்.ஏ நேரு, மாவட்ட ஆட்சியர் வல்லவனையும், மாநகராட்சி ஆணையரையும் செல்போனில் தொடர்பு கொண்டிருக்கிறார்.

மாவட்ட ஆட்சியர் வல்லவனை முற்றுகையிட்ட எம்.எல்.ஏ நேரு

அப்போது அவர்கள் அழைப்பை ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது. அதனால் அலுவலகத்துக்கு வந்த ஆட்சியர் வல்லவனை வழிமறித்து, எம்.எல்.ஏ நேருவும், உயிரிழந்த கோவிந்தனின் உறவினர்களும் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமுலுவை தொடர்பு கொண்ட அவர், ஆம்புலன்ஸை வரவழைத்து கோவிந்தனின் உடலை அடக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுத்தார். அதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இது குறித்துப் பேசிய சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமுலு, “கொரோனா தொற்று கண்டறியப்பட்ட ஆறு பேர் அவர்களின் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனையில் யாரும் சிகிச்சையில் இல்லை” என்று தெரிவித்தார்.

from Tamilnadu News https://ift.tt/zTEaBkR