சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஒப்புதலளிக்காமல், வேண்டுமென்றே ஆளுநர் அவற்றைக் கிடப்பில் போடுகிறார் என்ற குற்றச்சாட்டுடன் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆளுநரும், முதலமைச்சரும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு அறிவுறுத்தியது. இருப்பினும், சமீபத்தில் ஏற்பட்ட சென்னை வெள்ளம், தென்மாவட்ட வெள்ள பாதிப்புகள் காரணமாக, ஆளுநருடனான முதலமைச்சரின் சந்திப்பு நடைபெறாமல் இருந்தது.

முதல்வர் ஸ்டாலின் – ஆளுநர் ஆர்.என்.ரவி

இந்த நிலையில், இன்று மாலை ஆளுநர் ஆர்.என்.ரவியை, முதலமைச்சர் ஸ்டாலின் ஆளுநர் மாளிகையில் நேரில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின்போது, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராஜ கண்ணப்பன், துரைமுருகன், ரகுபதி ஆகியோர் ஸ்டாலினுடன் சென்றனர்.

சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “ஆளுநரால் திருப்பியனுப்பப்பட்டு மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்கள் உட்பட மொத்தம் 20 மசோதாக்கள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டிருக்கின்றன. வேளாண் விளைபொருள் சட்ட முன்வடிவு மட்டும் ஆளுநரிடம் நிலுவையில் இருக்கிறது. முன்னாள் அமைச்சர்கள் கே.சி.வீரமணி, விஜயபாஸ்கர் ஆகியோர்மீது விசாரணை நடத்த அனுமதி கோரி அனுப்பப்பட்ட கோப்புகள் மீது ஒப்புதல் தருமாறு கோரியிருக்கிறோம். அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு கைதிகளின் முன் விடுதலை தொடர்பாக அனுப்பப்பட்ட 112 கோப்புகளில் 70 கோப்புகள் எங்களுக்கு அனுப்பப்பட்டன. அதில், 68 பேரின் விடுதலை மட்டும் அனுமதிக்கப்பட்டிருக்கிறது.

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி

42 கோப்புகள் ஆளுநரிடத்தில் இருக்கிறது. மேலும், நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி பரிசீலிக்குமாறு கூறப்பட்ட ஏழு கோப்புகள் உட்பட மொத்தமாக 49 கோப்புகள் ஆளுநரிடத்தில் நிலுவையில் இருக்கிறது. அதற்கும் விரைந்து ஒப்புதல் தருமாறு கோரிக்கை வைத்திருக்கிறோம். தமிழ்நாடு சர்வீஸ் கமிஷனில் 11 உறுப்பினர்கள் இருக்க வேண்டும். ஆனால், நீண்ட காலமாக நான்கு உறுப்பினர்கள்தான் இருக்கிறார்கள். அதற்கான விளக்கங்களைக் கூறி, அதன்மீதான ஒப்புதல்களை விரைந்து தருமாறு கோரிக்கை வைத்தோம். இந்த மொத்த கோரிக்கைகளையும் மனுவாக ஆளுநரிடம் முதல்வர் ஸ்டாலின் தந்திருக்கிறார். இந்தச் சந்திப்பு சுமுகமாக இருந்து. விடை எப்படி வரும் என்பதை நீதிமன்றத்தில்தான் பார்க்க வேண்டும்” என்று கூறினார்.

from Tamilnadu News https://ift.tt/mqN0rC4