அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கித் தருவதாக பண மோசடியில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து, கைது செய்யப்பட்டார். இதையடுத்து செந்தில் பாலாஜியிடம் இருந்த இலாகாக்களை அமைச்சர்கள் தங்கம் தென்னரசுவிடமும், முத்துசாமியிடமும் பிரித்துக்கொடுத்த தமிழ்நாடு அரசு அவரை இலாகா இல்லாத அமைச்சராக அறிவித்து அரசு அரசாணை வெளியிட்டது. ஆனால், ஆளுநர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார். ஆனால், என்ன காரணத்தினாலோ அதை உடனடியாக அவரே நிறுத்தியும் வைத்தார்.

இந்தச் சூழலில் செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் நீடிப்பதற்கு எதிராக வழக்கறிஞர் எம்.எல்.ரவி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், “இந்த வழக்கில் நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. செந்தில் பாலாஜி அமைச்சரவையில் நீட்டிக்கலாமா வேண்டாமா என்பது பற்றி முதல்வர்தான் முடிவெடுக்க வேண்டும்” என முடித்து வைத்தது நீதிமன்றம்.

இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் எம்.எல்.ரவி. அந்த மேல்முறையீட்டு மனு ஜனவரி 5-ம் தேதி இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, “அமைச்சரைப் பதவியிலிருந்து நீக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை; ஒருவர் அமைச்சராக நீடிப்பது குறித்து முதல்வர் தான் முடிவு எடுக்க முடியும் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு சரியானது. எனவே இந்த விவகாரத்தில் தலையிட தேவையில்லை’ எனக்கூறி மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

முதல்வர் ஸ்டாலின் – ஆளுநர் ரவி

இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பதில் இருந்த சட்டச் சிக்கல்கள் விலகியிருக்கின்றன. ஏன் இப்படி இலாகா இல்லாத அமைச்சராக தமிழ்நாடு அரசு செந்தில் பாலாஜியை வைத்திருக்கிறது. ஒருவேளை ஜாமீன் கிடைத்தால் செந்தில் பாலாஜிக்கு இலாகா ஒதுக்கும் எண்ணத்தில் இருக்கிறதா? என்ற விசாரணையில் இறங்கினோம்…

“செந்தில் பாலாஜிக்கு தமிழ்நாடு அரசு சார்பில் கொடுக்கும் சப்போர்ட் என்றே தலைமை அதை நினைக்கிறது” என்றபடி பேச்சைத் தொடர்ந்தார் சீனியர் அமைச்சர் ஒருவர். “செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டிருக்கும் வழக்கு அ.தி.மு.க காலத்தில் போடப்பட்டது என்றாலும் இப்போது அவர் தி.மு.க அரசின் அங்கம். தி.மு.க ஆட்சி அமைத்தது முதல் பா.ஜ.க தரப்பிலிருந்து வந்த பல்வேறு விமர்சனங்களைத் தைரியமாக எதிர்த்தவர் செந்தில் பாலாஜி. அதுமட்டுமல்ல, ஈரோடு இடைத்தேர்தல் தொடங்கி, உள்ளாட்சி, நகராட்சி தேர்தல்கள் என அனைத்துத் தேர்தல்களிலும் செந்தில் பாலாஜியின் வேலை அசாத்தியமானது.

அதைத் தி.மு.க தலைமை எப்போதும் மறக்காது. அதுமட்டுமல்ல, அமைச்சரவையிலிருந்து செந்தில் பாலாஜியை நீக்கினால் அவருக்கு நெருக்கடிகள் அதிகமாகும். அது, அரசுக்கும் தி.மு.க தலைமைக்கும் நெருக்கடியை கொடுக்கும் என நினைக்கிறார்கள். எனவேதான் இப்போதும் அமைச்சராக அவரைத் தொடராச் செய்திருக்கிறது தலைமை. அவரின் இலாகாக்களைக் கவனிக்கும் அமைச்சர்களிடமும் செந்தில் பாலாஜி வரும் வரை இதைக் கவனித்துக்கொள்ளுங்கள் என்று சொல்லித்தான் கொடுக்கப்பட்டிருக்கிறது” என்றவரிடம், `அப்போ பொன்முடி?’ எனக் கேள்வியை நாம் முடிக்கும் முன்பே நம்மைத் தடுத்தவர்…

செந்தில் பாலாஜி – அமலாக்கத்துறை

“பொன்முடி விவகாரத்தில அவர் குற்றவாளி என உத்தரவிட்டு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. அதனால்தான் அவருக்கு அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. ஒருவேளை உச்ச நீதிமன்றத்தில் இந்தத் தீர்ப்புக்குத் தடை வாங்கினால் அவருக்கும் அமைச்சர் பொறுப்பு கொடுக்கப்படும். ஆனால், முன்பு கவனித்த பொறுப்பே வழங்கப்படுமா என்பது அப்போதைய நிலையை கருத்தில் கொண்டு முடிவெடுக்க கூடியதாக இருக்கும் ” என முடித்துக்கொண்டார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

from Tamilnadu News https://ift.tt/mGcXAdk