அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா ஜனவரி 22-ம் தேதி நடைபெறவிருக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க அரசு மேற்கொண்டுவருகிறது.

அயோத்தி ராமர் கோயில் (மாதிரி படம்)

அயோத்தியில் ராமர் கோவில் முழுமையாகக் கட்டிமுடிக்கப்படாத நிலையில், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஆதாயம் பெறும் நோக்கத்திலேயே அவசர அவசரமாக ராமர் கோவில் திறப்பு விழாவை நடத்துகிறார்கள் என்று குற்றம்சாட்டுகின்றன எதிர்க்கட்சிகள் .

காங்கிரஸ் கட்சி உட்பட ‘இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகிக்கும் மற்ற தலைவர்களைப் போலவே, மம்தா பானர்ஜியும் ராமர் கோயில் திறப்பு விழாவைப் புறக்கணிக்க முடிவெடுத்திருக்கிறார். நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக ராமர் கோயிலைத் திறப்பது ஒரு தேர்தல் நாடகம் என்று அவர் விமர்சிக்கவும் செய்திருக்கிறார்.

பிரதமர் மோடி

 ‘ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சியை வைத்து, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க ஆதாயம் அடையப் பார்க்கிறது. தேர்தலுக்கான ஜிகினா வேலைதான் ராமர் கோவில் விழா. மதப் பாகுபாட்டை நான் அனுமதிக்க மாட்டேன். பிற மதத்தினரை விலக்கிவைக்கும் விழாக்கள் எதையும் ஆதரிக்க மாட்டேன்’ என்றார் மம்தா பானர்ஜி.

மேற்கு வங்கத்தில், ராமர் கோவில் திறப்பு விழாவை முன்வைத்து பெரும் அரசியல் நடந்துகொண்டிருக்கிறது. பா.ஜ.க தலைவரும், மேற்கு வங்க சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான சுவேந்து அதிகாரி, ‘என்னுடைய தொகுதியான நந்திகிராமலிருந்து ஒவ்வொரு மாதமும் 100 பேர் அயோத்தி ராமர் கோயிலுக்குச் செல்வார்கள். இதன் மூலம் மேற்கு வங்கத்தில் விழிப்புணர்வு ஏற்படும்’ என்று கூறியிருக்கிறார்.

மம்தா பானர்ஜி

பா.ஜ.க-வின் மேற்கு வங்க மாநில செய்தித்தொடர்பாளர் சமிக் பட்டாச்சார்யா, ‘தாஜா அரசியலை முதல்வர் மம்தா பானர்ஜி மேற்கொள்கிறார்’ என்று விமர்சித்திருக்கிறார். மேலும் அவர், ‘ராமருக்கு எதிரான, பகவத் கீதைக்கு எதிரான, இந்தியாவின் கலாசார பாரம்பர்யத்துக்கு எதிரான நிலைப்பாட்டை மம்தா பானர்ஜி எடுத்திருக்கிறார். குறிப்பிட்ட ஒரு சமூகத்தினருக்கு சமிக்ஞை காட்டவே இத்தகைய நிலைப்பாட்டை அவர் எடுத்திருக்கிறார். ஏனெனில், இந்த மக்கள் பா.ஜ.க-வுக்கு எதிராக ஒன்றுசேர்ந்திருக்கிறார்கள். ராமர் எந்தவொரு கட்சியையும் சேர்ந்தவர் அல்ல என்பதால், ராமர் கோவில் திறப்பு விழாவின்போது, முதல்வர் மம்தா பானர்ஜி தனது வீட்டில் விளக்கு ஏற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்’ என்று கூறியிருக்கிறார்.

இந்த சூழலில்தான், ராமர் கோவில் திறப்பு விழா நடைபெறும் நாளில், மேற்கு வங்கத்தில் மதநல்லிணக்கப் பேரணி நடத்தப்படும் என்று முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்திருக்கிறார். ‘தலைநகர் கொல்கத்தாவில் காளி கோவிலில் பூஜை நடத்திய பிறகு, அங்கிருந்து மதநல்லிணக்கப் பேரணி தொடங்கும். ஹசரா முதல் பூங்கா விளையாட்டு மைதானம்வரை பேரணி செல்லும். பின்னர், அங்கு கூட்டம் நடைபெறும்’ என்று மம்தா பானர்ஜி கூறியிருக்கிறார்.

அயோத்தி செல்லும் மெகா மணி.

மேலும், ‘மதநல்லிணக்கப் பேரணி செல்லும் வழிகளில் அமைந்திருக்கும் மசூதிகள், தேவாலயங்கள், குருத்வாராக்கள், கோயில்கள் ஆகியவற்றில் வழிபாடுகள் நடத்தப்படும். இந்தப் பேரணியில் பங்கேற்க வாருங்கள் என்று அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன்’ மம்தா பானர்ஜி கூறியிருக்கிறார்.

அதே நாளில், மேற்கு வங்கத்தில் அனைத்து மாவட்டங்களிலும் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் பேரணி நடத்துவார்கள் என்றும் மம்தா பானர்ஜி தெரிவித்திருக்கிறார். இந்து மதத்தையும், இந்து கடவுள்களையும், இந்துமதச் சடங்குகளையும் தனது தேர்தல் அரசியலுக்காகப் பயன்படுத்துகிறது என்ற விமர்சனம் பா.ஜ.க-வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் முன்வைக்கின்றன.

மம்தா பானர்ஜி

அந்த வகையில், ராம பிரானையும், ராமர் கோயிலையும் தேர்தல் ஆதாயத்துக்காக பா.ஜ.க பயன்படுத்துகிறது என்ற விமர்சனம் தற்போது முன்வைக்கப்பட்டுவருகிறது. இந்த நிலையில்தான், ராமர் கோயில் திறப்பு விழாவைப் புறக்கணித்தால், இந்து விரோதி என்ற பிரசாரத்தை தனக்கு எதிராக பா.ஜ.க கட்டவிழ்த்துவிடும் என்று கருதும் மம்தா பானர்ஜி, இந்துக்கள் மட்டுமின்றி, அனைத்து மதத்தினரையும் மதச்சார்பற்ற கொள்கை கொண்டவர்களையும் தன் பக்கம் திருப்பும் முயற்சியாக மதநல்லிணக்கப் பேரணியை நடத்த முடிவெடுத்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

from Tamilnadu News https://ift.tt/bNma7Gs