அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் வரும் 22-ம் தேதி திறக்கப்பட இருக்கிறது. இதற்காக கோயில் கருவறையில் ராமர் சிலை வைக்கப்பட்டு பல்வேறு வகையான யாகங்கள் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது. கோயில் திறப்பு விழாவிற்காக முழுவேகத்தில் அனைத்து வேலைகளும் தயாராகி வருகிறது. கோயில் கட்டுமானப் பணியை முடிக்கும் பணியில் எல் அண்ட் டி நிறுவனம் வேகம் காட்டி வருகிறது.
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட சுப்ரீம் கோர்ட் 2019-ம் ஆண்டு சாதகமாக தீர்ப்பு கொடுத்தவுடன் கோயில் கட்டுவதற்கு நாடு முழுவதும் இந்து அமைப்புகள் நன்கொடை வசூலிக்க ஆரம்பித்தன. அவ்வாறு வசூலித்த நன்கொடைகள் 4 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக கிடைத்ததாகத் தகவல் வெளியானது.
இதில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் வரை 900 கோடி ரூபாய் கோயில் கட்டுமானப்பணிகளுக்காக செலவிடப்பட்டுள்ளதாக ராம் ஜென்மபூமி தீர்த்த ஷேத்ர டிரஸ்ட் செயலாளர் சம்பத் ராய் தெரிவித்தார்.

ஆனால், கடந்த மார்ச் மாதத்தில் இருந்து இதுவரை ஏற்கெனவே கோயிலுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டு இருந்த அனைத்துப் பொருள்களும் வந்துசேர்ந்துள்ளதால் கட்டுமானப் பணிகளுக்கு மேலும் பல நூறு கோடி செலவாகி இருக்கிறது. முழுமையாக 1800 கோடியில் கோயில் கட்டி முடிக்கப்படும் என்று கோயில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனாலும் கோயில் இன்னும் முழுமையாக கட்டி முடிக்கப்படவில்லை. அடுத்த ஆண்டுதான் கோயில் பணிகள் முழுமையாக முடிவடையும். எனினும், அடுத்த மாதம் மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட இருப்பதால், கோயில் முழுமையாக கட்டி முடிக்கப்படும் முன்பாக திறப்பு விழா நடத்தப்படுகிறது.
ஐ.ஐ.டி.யின் துணையோடு கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் நாட்டிலேயே அதிக செலவில் கட்டப்பட்ட கோயில் என்ற பெயரை பெறுகிறது. இதற்குமுன்பு குஜராத்தில் 1000 கோடி ரூபாயில் கோயில் கட்டப்பட்டதுதான் அதிக பொருள் செலவில் கட்டப்பட்டதாக இருந்தது. அதனை இப்போது ராமர் கோயில் முறியடித்துள்ளது.
அயோத்தி ராமர் கோயிலுக்கு 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி கோயில் கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அதனைத் தொடர்ந்து பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது.
15-வது தலைமுறையாக கோயில் கட்டுமானப்பணிகளுக்கு வடிவமைத்து கொடுக்கும் அகமதாபாத்தை சேர்ந்த சந்திரகாந்த் சோம்புரா அயோத்தி ராமர் கோயிலை வடிவமைத்துக் கொடுத்துள்ளார்.

அயோத்தி ராமர் கோயிலைக் கடந்த 1988-ம் ஆண்டே வடிவமைத்து கொடுத்துவிட்டார். தற்போது கோயிலைக் கட்டி வரும் எல் அண்ட் டி நிறுவனத்துடன் கடந்த 15 ஆண்டுகளாக கோயிலைக் கட்டுவது எப்படி என ராம்ஜென்ம பூமி டிரஸ்ட் பேச்சுவார்த்தை நடத்திவந்ததாக அதன் செயலாளர் சம்பத் ராய் குறிப்பிட்டுள்ளார்.
கோயில் கிழக்கு மேற்காக 380 அடியும், அகலம் 250 அடியும், உயரம் 161 அடியும் கொண்டதாக வட இந்திய முறைப்படி கட்டப்பட்டுள்ளது.
அயோத்தி ராமர் கோயிலில் 392 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோயிலைக் குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டி முடிக்கவேண்டும் என்பதற்காக 4,000 தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதில் 400 தொழிலாளர்கள் தூண்களை செதுக்குவதற்கான பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்தக் கோயிலின் பிரதான வாயில் கிழக்குப் பக்கத்தில் இருக்கிறது. கோயிலின் கீழ்தளத்தில் மூலவராக ராமர் குழந்தை வடிவத்தில் இருக்கிறார். முதல் தளத்திலும் ராமர்தான் வீற்றிருக்கிறார்.
கோயில் கட்டுவதற்குக் கற்கள் ராஜஸ்தானில் இருந்தும், மரங்கள் மகாராஷ்டிராவில் இருந்தும், கிரானைட் கற்கள் தெலங்கானாவில் இருந்தும், தச்சர்கள் தமிழகத்தில் இருந்தும், கிரானைட் தொழிலாளர்கள் கர்நாடகாவில் இருந்தும், சிலை செதுக்குபவர்கள் ராஜஸ்தானில் இருந்தும், கற்களை செதுக்குபவர்கள் ஒடிசாவில் இருந்தும் வரவழைக்கப்பட்டு இருந்தனர்.

நிலநடுக்கத்தைத் தாங்கி நிற்கும் வகையில் கோயில் கட்டப்பட்டுள்ளது. மொத்தம் 70 ஏக்கரில் கோயில் வளாகம் அமைந்துள்ளது. இதில் கோயிலின் தென் பகுதியில் சாதுக்கள் மற்றும் ராமாயாணத்தில் வரக்கூடிய தெய்வங்களுக்காக மேலும் ஏழு கோயில்கள் கட்டப்படும். 70 ஏக்கர் பரப்பில் 70% நிலத்தில் மரங்கள் மற்றும் இதர வசதிகள் செய்யப்படும்.
காங்கிரீட் மற்றும் இரும்புகளைத் தவிர்த்து 1000 ஆண்டுகள் நிலைத்து நிற்கும் கற்களைக் கொண்டு இந்தக் கோயில் கட்டப்பட்டுள்ளது. தினமும் இரண்டு லட்சம் பக்தர்கள் ராமரைத் தரிசனம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வரும் 2031-ம் ஆண்டுக்குள் அயோத்தியில் 83 ஆயிரம் கோடி ரூபாய் வரையிலான மேம்பாட்டுப்பணிகளை மேற்கொள்ள உத்தரப்பிரதேச அரசு முடிவு செய்துள்ளது.
from Tamilnadu News https://ift.tt/8IuhQcP
