`ஜி.எஸ்.டி வரி நடைமுறைக்கு வந்தபிறகு மத்திய அரசுக்குக் கிடைக்கும் வரி வருவாயை மாநிலங்களுக்குப் பிரித்துத் தருவதில் நியாயமற்ற வகையில் நடந்துகொள்கிறது’ என தமிழகம், கேரளா உள்பட பல மாநிலங்களின் (பா.ஜ.க ஆட்சி செய்யாத) நிதி அமைச்சர்கள் புலம்பி வருகின்றனர். ஆனால், `எங்களுக்குக் கிடைக்கும் வரியில் பெரும்பகுதியை மாநில அரசாங்களுக்குத் தருகிறோம்’ என்றே பிரதமர் நரேந்திர மோடியும், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் மற்றும் பா.ஜ.க-வினரும் தொடர்ந்து சொல்லிவருகிறார்கள்.
இந்நிலையில், `பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசாங்கமானது வரிப் பங்கீட்டை நேர்மையாக மேற்கொள்ளவில்லை என்பதே உண்மை’ என்கிற உண்மை தற்போது வெளியாகி, நாடு முழுக்க அதிர்ச்சி கிளப்பியுள்ளது. அந்த ‘புண்ணியத்துக்கு’ச் சொந்தக்காரர், ‘நிதி ஆயோக்’ அமைப்பின் சி.இ.ஒ.வாக இருக்கும் பி.வி.ஆர் சுப்பிரமணியம்தான். இது தொடர்பாக சுப்ரமணியம் கடந்த ஆண்டில் ஒரு நிகழ்ச்சியில் எதார்த்தமாகப் பேசிய பேச்சு, இன்று இந்தியாவைக் கடந்து உலகமே பேசும் பேச்சாக வைரலாகி இருக்கிறது.
யார் இந்த பி.வி.ஆர் சுப்பிரமணியம்?
நிதி ஆயோக் அமைப்பின் சி.இ.ஓ-வாக இருக்கும் பி.வி.ஆர் சுப்பிரமணியம், 40 ஆண்டு காலம் ஐ.ஏ.எஸ் பதவி வகித்த அனுபவம் கொண்டவர். இவர் இதற்குமுன் பிரதமர் அலுவலகத்திலும் முக்கியமான பொறுப்பு வகித்திருக்கிறார். மன்மோகன் சிங், நரேந்திர மோடி ஆகிய இருவரின் ஆட்சிக் காலத்திலும் இவர் பிரதமர் அலுவலக அதிகாரியாக பதவி வகித்துள்ளார்.
கடந்த ஆண்டு சி.எஸ்.இ.பி (CSEP-Centre for Social and Economic Progress) என்கிற அமைப்பு நடத்திய மத்திய அரசின் நிதிநிலை அறிக்கைகள் தொடர்பான கருத்தரங்கு ஒன்றில் பி.வி.ஆர் சுப்பிரமணியம் பங்கேற்று பேசினார். அப்போது, மத்திய அரசாங்கமானது நிதிநிலை குறித்த அறிக்கைகளை வெளியிடுவதில் கையாளும் தந்திரங்களை அவர் தனது பேச்சில் புட்டுப்புட்டு வைத்திருக்கிறார். மத்திய அரசாங்கமானது, மாநிலங்களுக்குத் தரவேண்டிய நிதிப் பகிர்வைக் குறைப்பதற்கு பிரதமர் மோடி மேற்கொண்ட முயற்சிகள் பற்றியும் அவர் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.

பி.வி.ஆர் சுப்பிரமணியம் என்ன பேசியதன் சாரம்சம் என்ன என்று பார்ப்போம்.
2014-ம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்தது. அதற்கு சுமார் ஒர் ஆண்டுக்குமுன், காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக் காலத்தில் 14-ம் நிதிக் குழு (Finance Commission) அமைக்கப்பட்டது. ‘மத்திய அரசின் வரி வருவாயில் 42 சதவிகிதத்தை மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்க வேண்டும்’ என 14-ம் நிதிக் குழு பரிந்துரைத்தது (மோடி முதல்வராக இருந்த குஜராத் உள்பட பல்வேறு மாநில அரசுகளின் கோரிக்கையின் அடிப்படையில்). இது முந்தைய 13-ம் நிதிக் குழு பரிந்துரைத்ததைவிட 10 சதவிகிதம் அதிகம்.
ஆனால், வரி வருவாயில் 42 சதவிகிதத்தை மாநிலங்களுக்கு வழங்குவதற்கு பிரதமராகிவிட்ட மோடிக்கு விருப்பமில்லை. 32 சதவிகிதம் அளவுக்கு மட்டுமே வரி வருவாயை மாநிலங்களுக்குத் தரவேண்டும் என பிடிவாதமாக இருந்தார் நரேந்திர மோடி.
இந்த நிலையில், இது தொடர்பாக என்ன முடிவு எடுக்க வேண்டும் என ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் வேணுகோபால் ரெட்டி தலைமையில் அமைக்கப்பட்ட குழுவானது, வரி வருவாயில் 42 சதவிகிதத்தை மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கும்படி 14-ம் நிதிக் குழுவுக்கு பரிந்துரை செய்தது. இதற்கான பேச்சுவார்த்தையில் பிரதமர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் வேணுகோபால் ரெட்டி, பிரதமர் மோடி, பி.வி.ஆர் சுப்பிரமணியம் ஆகிய மூவரும் கலந்துகொண்டு பேசினார்கள். நிதி அமைச்சகத்தை சேர்ந்த அமைச்சரோ அல்லது அதிகாரிகளோ யாரும் இந்தக் கூட்டத்திற்கு அழைக்கப்படவில்லை. அப்போது, மாநிலங்களுக்கான வரி வருவாய் பகிர்வை 42 சதவிகிதமாக ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும் என்று வலியுறுத்தினார் வேணுகோபால் ரெட்டி.
பிறகு ஒரு சந்தர்ப்பத்தில், இந்த முடிவை ஏற்றுக்கொள்வதைத் தவிர, பிரதமர் மோடிக்கு வேறு வழி இல்லை என்றும் வேணுகோபால் ரெட்டி, சுப்பிரமணியத்திடம் திட்டவட்டமாக எடுத்துச் சொன்னார்.

மாநிலங்களுக்கு வரி வருவாய்ப் பகிர்வை 32 சதவிகிதத்துக்கு மேல் தரக்கூடாது என்பதில் பிரதமர் மோடி உறுதியாக இருந்தார். நிதிக் குழு செய்த பரிந்துரையை ஏற்றுக்கொள்ளாமல் காலம் தாழ்த்தி வந்தார்.
ஆனால், 2015-ம் ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு இரண்டு நாள்களுக்குமுன்பு மாநிலங்களுக்கான வரி வருவாயை 42 சதவிகிதமாகத் தரும் முடிவை வேறு வழியில்லாமல் எடுத்தார். மிகமிக காலதாமதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதால், பல மாதங்களாக தயார் செய்யப்பட்ட பட்ஜெட்டை வெறும் இரண்டே நாள்களில் மாற்றி எழுதவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
அவசர அவசரமாக தயார் செய்யப்பட்ட அந்த அவசர பட்ஜெட்டில் மகளிர், குழந்தைகளுக்கான நலத்திட்டங்களுக்கு செய்யப்பட்ட நிதி ஒதுக்கீடு பாதிக்குப் பாதியாகக் குறைக்கப்பட்டது என்றெல்லாம் பி.வி.ஆர் சுப்பிரமணியம் பேசியதுதான் இப்போது பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது.
அதாவது 42% பகிர்ந்துகொடுக்கும் பட்சத்தில், ஏற்கெனவே மாநில அரசுகளுக்குக் கொடுத்து வரும் நிதி அதிகமாகிவிடும் என்பதால், மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீட்டு அளவை பாதிக்குப் பாதியாகக் குறைத்துள்ளார். எடுத்துக்காட்டாக, மகளிர், குழந்தைகளுக்கான நலத்திட்டங்களுக்கு முன்பு 36,000 கோடி ரூபாய் வழங்கியிருந்தால், அது 18,000 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இத்தனைக்கும் மத்திய அரசாங்கமானது, மாநில அரசாங்கங்களுக்கு அதிக வரியைத் தரவேண்டும் என்று பேசியவர் மோடி. அவர் குஜராத் மாநில முதல்வராக இருந்தபோது, மாநிலங்களுக்கான வரி வருவாய் பகிர்வை 50 சதவிகிதமாக உயர்த்த வேண்டும் என குரல் எழுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
2015-ம் ஆண்டு பட்ஜெட் கூட்டத் தொடரில், பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் பேசியபோது, “நிதிக் குழுவின் பரிந்துரை ஏற்று, மாநிலங்களுக்கு 42% வரியை அளித்திருக்கிறோம். இதன் மூலம் வரி வருவாயை சில மாநிலங்களால் கற்பனைகூட செய்துபார்க்க முடியாது. அவர்களின் மொத்த பட்ஜெட்டைவிட அதிக பணம் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதுதானே கூட்டாட்சியை வலுப்படுத்தும் முறை?
நிதிக் குழுவின் 42 சதவிகித வரிப் பகிர்வு பரிந்துரையை நாங்கள் ஏற்றுக்கொண்டோம். நிதிக் குழுவிலேயே இதற்காக பிரச்னை ஏற்பட்டது. நாங்கள் அதை சாதகமாக பயன்படுத்தி இருக்கலாம். ஆனால், நாங்கள் செய்யவில்லை. மாநிலங்களின் நலனுக்கான எங்களை அர்ப்பணித்துள்ளோம். ஆகவே, நாங்கள் 42 சதவிகிதம் கொடுக்கிறோம். இது ஒன்றும் சிறிய தொகை அல்ல. நாங்கள் கொடுக்கும் பணத்தை வைப்பதற்கு சில மாநிலங்களில் பெரிய கஜானாகூட இல்லை” என்று பேச, நாடாளுமன்றத்தில் பா.ஜ.க உறுப்பினர்கள் ஆர்வாரம் செய்து வரவேற்றனர்.
இது மட்டுமல்லாமல், ஜி.எஸ்.டி வரி முறை அமல்படுத்தப்பட்ட பிறகு மாநிலங்கள் சுயமாக வருவாய் ஈட்டுவதற்கான வாய்ப்புகள் குறைக்கப்பட்டுவிட்டதாகவும் பி.வி.ஆர் சுப்பிரமணியம் தெரிவித்திருக்கிறார். இது மாநிலங்களை ஆளும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முன்வைக்கும் குற்றச்சாட்டு என்பதும் குறிப்பிடத்தக்கது.

பி.வி.ஆர் சுப்பிரமணியம் சி.எஸ்.இ.பி (CSEP-Centre for Social and Economic Progress) அமைப்பு நடத்திய கருத்தரங்கில் பேசியது, அந்த அமைப்பின் இணையத்தில் வீடியோவாக இருந்தது. அது, பல மாதங்களாக அங்கே இருந்தாலும்கூட சில நூறு பேர் மட்டுமே பார்த்திருந்தனர். பி.வி.ஆர் சுப்பிரமணியம் பேசிய இந்த வீடியோவை ஆதாரமாக கொண்டு ‘த ரிப்போர்ட்டர் கலெக்ட்டிவ்’ என்கிற அமைப்பைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் ஶ்ரீகிரிஷ் ஜலியல், நிதின் சேத் பல கேள்விகளை எழுப்பி, பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பினார்கள். இந்தக் கேள்விகள் பிரதமர் அலுவலகத்திற்குப் போய் சேர்ந்த அடுத்த இரண்டு மணி நேரத்துக்குள், பி.வி.ஆர். சுப்பிரமணியம் பேசிய அந்த வீடியோ பதிவு அழிக்கப்பட்டு இருக்கிறது.
இந்தப் பிரச்னையை விளக்கமாக எடுத்துச் சொல்லும் வீடியோவை இப்போது ‘அல் ஜசீரா’ ஊடகம் வெளியிட, பெரும் சர்ச்சை கிளம்பி இருக்கிறது.
”பொருளாதார ரீதியில் மோடி தலைமையிலான மத்திய அரசாங்கம் செய்திருக்கும் ஒரு மோசடித் திருவிளையாடல் மட்டுமே இப்போது வெளிவந்திருக்கிறது. இன்னும் எத்தனை திருவிளையாடல்கள் வெளியே வராமல் மறைந்து கிடக்கின்றனவோ? தோண்டிப்பார்த்தால்… இன்னும் எத்தனை பூதங்கள் வெளியே வருமோ?” என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் பேச ஆரம்பித்துள்ளனர்.
from Tamilnadu News https://ift.tt/qsIgUYf
