விரைவில் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெற்றிருக்கிறது. கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி தேர்வு உள்ளிட்ட விஷயங்களை மேற்கொள்வதற்காக தமிழக பொறுப்பாளர் அஜோய்குமார் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். சென்னைக்கு வந்திருக்கும் அவர் கடந்த இரண்டு நாள்களாக சத்தியமூர்த்தி பவனில் வார் ரூம் பொறுப்பாளர்கள், கட்டுப்பாட்டு அறை உறுப்பினர்கள், மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய சீனியர் கதர்கள், ” `20-ம் தேதி நடந்த ஆலோசனை கூட்டத்தில்,கடந்த முறை தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 9 இடங்கள் ஒதுக்கப்பட்டன. திருவள்ளூர், கிருஷ்ணகிரி, ஆரணி, கரூர், திருச்சி, சிவகங்கை, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய இடங்களில் வெற்றி பெற்றோம். தேனியில் மட்டும் தோல்வி ஏற்பட்டது. இந்தமுறை ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரையால் மக்களிடத்தில் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் ராகுல் காந்தி பிரதமராக வர வேண்டும் என மக்கள் பலர் நினைக்கிறார்கள். எனவே இந்த முறை கூட்டணியில் 15 தொகுதிகள் கேட்க வேண்டும். குறைந்தபட்சம் 12வது கேட்டு பெற வேண்டும்.
குறிப்பாக திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ஈரோடு உள்ளிட்ட தொகுதிகள் காங்கிரஸுக்கு ஒதுக்கப்படும் பட்சத்தில் அங்கு வெற்றி பெறுவதற்கான அனைத்து அமச்சங்களும் இருக்கிறது. தேர்தல் போட்டியிடுவதற்கு 50 சதவீதம் புதியவர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும்’ என நிர்வாகிகள் பேசினர். அதற்கு பதிலளித்த அஜோய்குமார், ‘உங்களது விருப்பங்களை டெல்லி சென்றதும் மேலிடத்துக்கு தெரிவிக்கிறேன்’ என உறுதி அளித்தார். மேலும் காங்கிரஸ் சார்பில் தொகுதி பங்கீடு பற்றி பேசுவதற்கு மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் 33 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தி.மு.கவின் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை குழுவுடன் விரைவில் பேச தயாராகி வருகிறார்கள்” என்றனர்.

முன்னதாக ராகுல் காந்தியின் இரண்டாவது ஒற்றுமை நீதி பயணத்தை சென்னையில் உள்ள மக்கள் நேரடியாக காணும் வகையில் எல்.இ.டி வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதன் இயக்கத்தை கே.எஸ். அழகிரி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அழகிரி, “அயோத்தியில் ராமர் கோவில் இடத்திலா கோவில் கட்டுகிறார்கள்.. நிச்சயமாக இல்லை. பாபர் மசூதியில் இருந்து மூன்று கிலோ மீட்டருக்கு அப்பால் ராமர் கோவில் கட்டுகிறார்கள். ஏறக்குறைய அயோத்தியில் 3200 ராமர் கோவில் உள்ளன. நீங்கள் கட்டுவது 3201. பழைய ராமர் கோவில் இருந்த இடத்தில் தற்போது கட்டவில்லை. அந்த மசூதியை எடுத்தீர்களே ஒழிய அந்த இடத்தில் ராமர் கோவில் கட்டவில்லை. அதனை இடிப்பதற்கு ராமரை பயன்படுத்தினீர்கள்.
ஆனால், ராமருக்கு கோவில் கட்டுகிறபோது பாபர் மசூதியில் இருந்து 3 கிலோமீட்டர் தள்ளி கோவில் கட்டி இருக்கிறீர்கள். அந்த அளவுக்கு நீங்கள் தொடை நடுங்கியாக இருக்கிறீர்கள். உங்களுக்கு லட்சியம் கிடையாது. மாத்தி பேசுகின்ற கும்பல் நீங்கள். எனவே நீங்கள் ராமருக்கு பெருமை சேர்க்கவில்லை. இந்தியர்களுக்கும் பெருமை சேர்க்கவில்லை. இந்துக்களுக்கும் பெருமை சேர்க்கவில்லை, மோடிக்கு பெருமை சேர்க்க நினைக்கிறீர்கள். ஆனால் அதற்கு தகுதியான ஆள் மோடி இல்லை அவர் நிச்சயமாக வீழ்வார், வீழ்த்தப்படுவார். தமிழகத்தில் காங்கிரஸ், தி.மு.க கூட்டணி வலிமையாக இருக்கிறது. எங்களது வெற்றி மகத்தான வெற்றியாக இருக்கும்.

தமிழ்நாட்டை பொறுத்தவரையில் நீட் தேர்வு சரியாக இருக்காது. தமிழகத்தில் பா.ஜ.கவால் வெற்றி பெற முடியாது. மோடியும் ஆளுநர் ஆர்.என்.ரவியும் இருக்கும் வரை எங்களுடைய வெற்றி உறுதி. தமிழகத்தில் ஆன்மிகம் உண்டே தவிர மத வெறிகிடையாது. ஆன்மிகம் என்பது வேறு மதம் என்பது வேறு. ஆன்மிகம் என்ற பெயரில் மதவெறிகளை எழுப்பி விடுகிறார்கள், பாஜகவினர். அதே நேரத்தில் மத வெறியை நாங்கள் எதிர்க்கிறோம். அதுதான் எங்கள் கொள்கை. தமிழகத்தில் காங்கிரஸ் தி.மு.க கூட்டணி வலிமையாக இருக்கிறது எங்களது வெற்றி மகத்தான வெற்றியாக இருக்கும்” என்றார்.
முன்னதாக பேசிய அஜோய் குமார், “தி.மு.க காங்கிரஸ் கூட்டணி உறுதியாக உள்ளது. தமிழகம், பாண்டிச்சேரியுடன் சேர்த்து 40 தொகுதிகளையும் எங்கள் கூட்டணி வெற்றி பெறும். இந்தியா கூட்டணியில் மு.க.ஸ்டாலின் வலிமையான தலைவராக இருக்கின்றார். அவர் இந்தியா கூட்டணியை தமிழகம், புதுச்சேரியில் வழி நடத்துவார். நமக்கு ஒரு பிரதமர் கிடைத்திருக்கிறார். அவர் பிரதமராக இல்லாமல் பாபாவாக ஆகும் முயற்சியில் இருக்கிறார். அவர் பாபாவாக இருந்து மக்களை ஏமாற்றிக் வருகிறார். ஆனால் அவர் பாபா ராம் ரஹீம் ரேப் குறித்து எந்த பதிலும் செல்லாமல் மௌனமாக இருக்கிறார். ராமரை பின்பற்ற வேண்டும் என்று பிரதமர் சொல்கின்றார். ஆனால் பா.ஜ.கவில் பிரிஜ் பூஷன் போன்றவர்கள் இருப்பது அவமானமாக இல்லையா?.

கடவுளின் பெயரால் மத்திய பிரதேசத்தில் ஏராளமான ஊழல்கள் நடைபெற்று வருகிறது. இதற்கு முன் பா.ஜ.க ஆட்சி நடந்த அஸ்ஸாம் மற்றும் கர்நாடக மாநிலங்களிலும் கடவுளின் பெயரால் ஊழல் நடந்தது. இந்திய மக்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும். எப்பொழுது ஒரு அரசியல்வாதி கடவுளையும் மதத்தையும் வைத்து அரசியல் ஆதாயம் தேடுகின்றாரோ அப்பொழுதே அவர் மக்களை ஏமாற்றுகிறார் என்பது உறுதியாகிவிட்டது. இது அரசியல் சாசன சட்டத்திற்கும் ஜனநாயக விதிகளுக்கும் எதிரான செயல். ராகுல் காந்தியின் யாத்திரையில் தாக்குதல் நடந்துள்ளது. இதனை வன்மையாக கண்டிக்கின்றோம். தமிழகம் 50 ஆண்டுகளுக்கு முன்பே சட்டபூர்வமாக முன்னேறியுள்ளது.
மற்ற மாநில மக்களும் தமிழகத்தை பார்த்து உணர தொடங்கியுள்ளனர். இந்தியாவுக்கு எந்த திட்டம் தொடங்கப்பட்டாலும் அது தமிழகத்தை முன்னோடியாக கொண்டு தொடங்கப்பட்ட திட்டமாகவே இருக்கும். தமிழகத்திற்கும் தமிழக தலைவர்களுக்கும் நான் மரியாதை செலுத்த கடமைப்பட்டிருக்கின்றேன். தமிழக மக்கள் வெள்ள பாதிப்பினால் 30 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக தங்களது சொத்துக்களை இழந்துள்ளனர். ஆனால் ராமர் பெயரை வைத்து பாஜகவினர் பல்லாயிரம் கோடி கொள்ளை அடித்து வருகின்றனர் ஆகவே தமிழக மக்கள் அவர்களை புறக்கணிக்க வேண்டும். இந்தியாவில் செல்வாக்கு மிக்க ஒரு சதவீத முதலாளிகள் இந்தியாவின் 76 சதவீத சொத்துக்களை வைத்துள்ளனர். ஆனால் 50 சதவீத மக்கள் இந்தியாவிலேயே இரண்டு சதவீதத்திற்கும் குறைவான சொத்துக்களையே வைத்துள்ளனர்.

கடந்த 9 ஆண்டுகளில் இந்தியாவில் தனிமனித வருமானம் என்பது வங்காளதேசத்தை விட குறைந்துள்ளது. ஒரு சதவீத முதலாளிகள் வைத்திருக்கும் பணத்தை மீட்டெடுத்தாலே இலங்கை மற்றும் பாகிஸ்தானின் பொருளாதார அளவிற்கு பணம் நம்மிடம் கிடைக்கும். இதற்கு காரணம் மோடியும் அவரின் பணக்கார நண்பர்களும்தான். தமிழகத்தில் உள்ள ரயில் தொழிற்சாலை, நிலக்கரி தொழிற்சாலை உள்ளிட்ட பொது சொத்துக்களை விரைவில் தனியாருக்கு விற்று விடுவார்கள். வஞ்சகர்கள்தான் கடைசியாக கடவுளின் பெயரால் அரசியல் செய்வார்கள். தற்போதுள்ள பாரதிய ஜனதா கட்சி கடவுளின் பெயரால் ஆட்சி செய்யும் ஒரு மாஃபியா கும்பல்.
பிரதமர் மோடி தமிழகத்தை மாற்றான் தாய் பிள்ளை போல் தான் பாவிக்கின்றார். தமிழகத்திற்கு வருகிறார் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு செல்கின்றார். ஆனால் தேவையான நிதியை கொடுக்க மறுக்கின்றார். ஜனாதிபதி ஒரு பழங்குடியின பெண் என்பதால் அவரை ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு மோடி அழைக்கவில்லை. அவர்கள் ராமரையும் மதத்தையும் வைத்து அரசியல் செய்கின்றார்கள். நாங்கள் பா.ஜ.கவின் மோசடியையும் ஏமாற்று வேலைகளையும் சொல்லி அரசியல் செய்வோம்.
பிரதமர் மோடி ஒவ்வொரு முறை தமிழகத்திற்கு வரும்போதும் பா.ஜ.கவின் வாக்கு வங்கி சரிந்து வருகின்றது. ஆகவே அவர் எவ்வளவு முறை வந்தாலும் அடுத்த அடுத்த முறை பா.ஜ.கவின் வாக்கு வங்கி சரிந்து விடும். பா.ஜ.க தலைவர்களே பிரதமரை தமிழகத்திற்கு வர வேண்டாம் என்று கூறும் நிலை வரும். ஆகவே பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருவதை நாங்கள் விரும்புகின்றோம்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY
from Tamilnadu News https://ift.tt/myZK6I3
