உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் கட்டப்பட்டு வந்த ராமர் கோயிலில், பிரதமர் மோடி முன்னிலையில் `பால ராமர் பிராணப் பிரதிஷ்டை’ இன்று நடைபெற்று முடிந்தது. இதற்கிடையில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை நிகழ்ச்சியை தமிழ்நாட்டு கோயில்களில் நேரலை செய்யவும், சிறப்பு பூஜைகள் செய்யவும் மாநில அரசு தடை போட்டிருப்பதாக நேற்று பரபரப்பை ஏற்படுத்தினார். பின்னர், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அவ்வாறான எந்த உத்தரவும் போடப்படவில்லை என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

இத்தகைய சூழலில், இன்று காலை காஞ்சிபுரம் காமாட்சி கோயிலுக்கு சென்ற நிர்மலா சீதாராமன், ராமர் கோயில் நிகழ்ச்சியை நேரலை செய்ய வைக்கப்பட்டிருந்த எல்.இ.டி திரைகளை போலீஸார் அகற்றியதாக வீடியோவுடன் குற்றம்சாட்டினார். முறையான அனுமதி இல்லாததால் அவ்வாறு செய்யப்பட்டது என போலீஸ் தரப்பில் விளக்கமும் அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் இதுதொடர்பான மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், “ராமர் கோயில் நிகழ்வை தனியார் கோயில்கள் மற்றும் திருமண மண்டபங்களில் நேரலை ஒளிபரப்பு செய்யவோ, பூஜைகள் செய்யவோ போலீஸார் அனுமதி தேவையில்லை” எனத் தீர்ப்பளித்தார். அதன்பின்னர், அதே காஞ்சிபுரம் காமாட்சி கோயிலில் மீண்டும் எல்.இ.டி திரை பொருத்தப்பட்டு, ராமர் கோயில் நிகழ்ச்சி நேரலை செய்யப்பட்டது. அதையடுத்து, கோயில் பஜனையில் கலந்துகொண்ட நிர்மலா சீதாராமன் வழிபாடு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த நிர்மலா சீதாராமன், “எவ்வளவு சொல்லியும், செய்யும் முறையை மாற்றிக்கொள்ளாமல், இன்று காலை நாங்கள் இங்கு வரும் வரைக்கும், நிறைய மக்களைக் கஷ்டப்படுத்துகிறார்கள் என்று செய்தி வந்துகொண்டே இருந்தது. இந்த நேரத்தில் இந்து மக்களின் வழிபாட்டு முறையை, எங்களின் உரிமையை நிலைநிறுத்திய, உச்ச நீதிமன்றத்துக்கும், சென்னை உயர் நீதிமன்றத்துக்கும் மனதார நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். எத்தனை பேருக்கு நீதிமன்ற உத்தரவு சரியான நேரத்தில் சேர்ந்ததென்று தெரியவில்லை. தனியார் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறைக்கு அதிகாரம் இல்லை.

ஆனால், இங்கேயும் தங்களின் அதிகாரத்தைக் காட்ட முயன்றார்கள். எல்.இ.டி திரை வைத்து வியாபாரம் செய்யும் சிறு வியாபாரிகள் கஷ்டப்பட்டார்கள். சில இடங்களில், எல்.இ.டி திரைகளை போலீஸார் பறிமுதல் செய்துவிட்டனர். அதை அவரவர்க்குத் திருப்பியளிக்க வேண்டும். அரசு அதை வைத்திருந்தால் அவர்களின் தொழில் என்னவாவது… ஏற்கெனவே அவர்களுக்குப் பயத்தைக் கிளப்பிவிட்டீர்கள். இந்த நாட்டில் இந்து மக்களின் உரிமைகளைப் பறிக்க முயற்சி நடந்தால் சட்ட ரீதியாக நீதிமன்றத்துக்குச் செல்வோமே தவிர, சாலையில் கல்லெறிந்து சண்டை போடுகின்றவர்கள் நாங்கள் இல்லை” என்று கூறினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY
from Tamilnadu News https://ift.tt/duWaQKr
