வேலூர் மாவட்டத்தில், தி.மு.க-வினர் மண் – மணல் கொள்ளையில் ஈடுபடுவதாகக் குற்றஞ்சாட்டி, அணைக்கட்டுப் பேருந்து நிலையம் அருகே முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தலைமையில் அ.தி.மு.க-வினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் பேசிய கே.பி.முனுசாமி, ‘‘சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவது, தி.மு.க-வினருக்குக் கைவந்த கலை. ‘தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற ஒன்றரை ஆண்டிலேயே ஸ்டாலின் மகனும், மருமகனும் சேர்ந்து முப்பதாயிரம் கோடி ரூபாய் கொள்ளையடித்துவிட்டார்கள்’ என்று அவர்கள் அமைச்சரவையில் நிதித்துறை அமைச்சராக இருந்தவரே சொல்லியிருக்கிறார். சட்டத்துக்குப் புறம்பாக செயல்படும் போதுதான் இப்படி கொள்ளையடிக்க முடியும். மணல் ஒரு அமுத சுரபி. பொன் முட்டையிடும் வாத்து போன்றது. பாலாற்றுப் படுகையில், நாளொன்றுக்கு ஆயிரம் லோடு மணல் அள்ளிவிட்டு, அரசுக்கு 100 லோடுதான் கணக்குக் காட்டுவார்கள்.

ஆட்சியாளர்களுக்கு ஒரு எச்சரிக்கை. பெரியத் தவறு செய்துகொண்டிருக்கிறார்கள். மணல் கொள்ளையடிப்பது, மண் கொள்ளையடிப்பதுதான் திராவிட மாடல் அரசு. மக்களை ஏமாற்றுவதற்காக மத்தியில் இருக்கின்றவர்களை எதிர்ப்பதைபோல எதிர்த்து, பின்பக்கத்தில் சென்று அவர்களின் காலிலேயே விழுந்து சரணாகதி அடையும் ஆட்சிதான் தமிழ்நாட்டில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இன்று இவர்கள். நாளை நாங்கள். அடுத்து வேறு யார் வேண்டுமானாலும் ஆட்சிக்கு வரலாம். ஆனால், மாவட்ட ஆட்சித்தலைவர் என்பவர் ஆட்சியாளர்களுக்குக் கைப்பாவையாக மாறிவிடக் கூடாது. கைப்பாவையாக மாறிவிட்டீர்கள் என்றால், அந்த மாவட்டத்தில் சட்டம் – ஒழுங்கு பாதிக்கப்படும். அந்த நிலை வரும்போது மாவட்ட நிர்வாகம்தான் பொறுப்பேற்க வேண்டும்.
இந்திய துணைக் கண்டத்திலேயே, பொய்ச் சொல்வதில் மிகத் திறமையான முதலமைச்சர் யாரென்றால், ஸ்டாலினைத் தவிர வேறு யாரையும் சொல்லிவிட முடியாது. அவ்வளவுத் தவறுகளைச் செய்திருக்கிறார். இந்த ஆட்சி எல்லா வகையிலும் தோல்வியடைந்துவிட்டது. இன்று அவர் மகனை துணை முதலமைச்சராக்கி விட்டு… விரைவாக முதலமைச்சராக்க வேண்டும் என்பதுதான் ஸ்டாலினின் ஆசை. அந்தக் காரணத்தினால்தான் சேலத்தில் மாநாடு நடத்தி, அதன்மூலம் மகனை துணை முதலமைச்சராக்குவதற்காக முயற்சி செய்துகொண்டிருக்கிறார். ஏதோ, ஒரு சூழ்நிலை நேற்றைய தினம் அவர் அறிவிக்கவில்லை. ஆனால், விரைவில் அறிவிப்பார்.

உங்கள் மகன் முதலமைச்சராக இருக்கட்டும் அல்லது இந்த மாவட்டத்தின் அமைச்சர் அண்ணன் துரைமுருகனை முதலமைச்சராகப் போடுங்கள். யாரை முதலமைச்சராகப் போட்டாலும், 2026 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடியாரைத்தான் மக்கள் மீண்டும் முதலமைச்சராகக் கொண்டுவருவார்கள். எங்களை அடிமைகள் என்று சொன்ன முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மறைமுகமாக பிரதமரிடம் அப்பாயின்மென்ட் வாங்கிக்கொண்டு தனியாகப் பேசுகிறார். ‘நீங்களும் அடிமைகள்’ என்று நாங்களும் சொல்லலாமா?. ஆனால், நாங்கள் சொல்ல மாட்டோம். ஏனென்று சொன்னால், மத்திய அரசுடன் இணக்கமாகச் செயல்பட்டால்தான் மாநில உரிமைகளையும், நிதிகளையும் பெற நல்வழியாக இருக்கும். அதன் அடிப்படையில் நீங்கள் பிரதமரைச் சந்தியுங்கள். மாறாக, உங்களைக் காப்பாற்றிக்கொள்வதற்காக நரேந்திர மோடியிடம் கையேந்தி, மண்டியிட்டு, பிச்சையெடுக்காதீர்கள். அந்தச் சூழல் வந்துகொண்டிருக்கிறது. அதை தவிர்த்துவிட்டு, மக்களுக்காகப் பணியாற்றுங்கள்’’ என்றார் காட்டமாக.
from Tamilnadu News https://ift.tt/qx0Hm8G
