தி.மு.க-வின் 2-வது இளைஞரணி மாநாடு சேலத்தில் நடந்து முடிந்திருக்கிறது. வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க மற்றும் `இந்தியா’ கூட்டணியின் வெற்றியைப் பறைசாற்றும் நிகழ்வென தி.மு.க-வினர் சொன்னாலும், உதயநிதியை முன்னிலைப்படுத்தவே மாநாடு நிகழ்த்தப்பட்டது என விமர்சிக்கின்றன எதிர்க்கட்சிகள்.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய கட்சி உள்விவகாரங்கள் அறிந்த சிலர், “ மாநில உரிமை மீட்பு மாநாட்டை சுமார் 3 லட்சம் பேரைத் திரட்டி நடத்தியிருக்கிறது தி.மு.க. இதில் தமிழ்நாடு முதலமைச்சரின் உரை, வரக்கூடிய மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதை ஆணித்தரமாக வலியுறுத்தும்விதமாக அமைந்தது. மேலும், `உதயநிதி மட்டுமல்ல… நீங்கள் எல்லோருமே என் வாரிசுதான்’ எனப் பேசி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். குறிப்பாக, துணை முதலமைச்சர் பதவி குறித்து ஸ்டாலின் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. நீட் விலக்கு, ஆளுநர் பதவியை நீக்க வேண்டும் உட்பட மத்திய அரசைக் கண்டிப்பதாக அமைந்தது மாநாடு. பேசியவர்கள் அனைவருமே உதயநிதியை வாழ்த்தியிருந்தாலும், பா.ஜ.க எதிர்ப்பை மிகக் கூர்மையாக எடுத்துவைத்திருக்கிறார்கள்.
உதயநிதிக்கு மாநாட்டில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தாலும், அதற்காகவே மாநாடு நடத்தியதுபோல் இல்லை” என்றனர்.

நம்மிடம் பேசிய அ.தி.மு.க-வினர் சிலரோ, “ வாரிசு அரசியலை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்லும் முயற்சியாகத்தான் இந்த மாநாட்டைப் பார்க்க வேண்டும். மாநாட்டுக்கு ஒரு சில நாள்களுக்கு முன்பே,` உதயநிதி துணை முதலமைச்சர்’ என்ற செய்தியைக் கிளப்பிவிட்டது தி.மு.க. பிறகு மாநாட்டில் மூத்த தலைவர் முதல் செய்தித் தொடர்பாளர்கள் வரை எல்லோரையும்வைத்து உதயநிதிக்குப் புகழ்பாட வைத்திருக்கிறார்கள். வரும் நாள்களில், `வரலாற்றுச் சிறப்புமிக்க மாநாட்டை நடத்திவிட்டார்’ என்ற பொய்யைக் கட்டமைத்து, அவரை துணை முதலமைச்சராக்க வேண்டும் எனக் கோரிக்கைவைத்து, அவரை துணை முதலமைச்சராக்கப் போகிறார். இதுதான் நடக்கும். இதில் ஆச்சர்யமென்னவென்றால் முன்பு கருணாநிதி, இப்போது மு.க.ஸ்டாலின், அடுத்து உதயநிதி, அதற்கடுத்து இன்பநிதி என்பதைப் பூடகமாகச் சொல்லிவிட்டார்கள்.
கட்சிக்காக உழைப்பவர்கள் கடைசிவரை இவர்கள் குடும்பத்துக்குப் புகழ்பாட வேண்டும் என்பதைத்தான் இந்த மாநாடு பறைசாற்றுகிறது” என்றனர்.

நம்மிடம் பேசிய பா.ஜ.க-வின் எஸ்.ஆர்.சேகர், “தி.மு.க-வின் இந்த மாநாடு படுதோல்வியைச் சந்தித்திருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வைத் தோற்கடிக்க வேண்டும் என வீராப்பாகப் பேசியிருக்கிறார் ஸ்டாலின். நாடாளுமன்றத் தேர்தல் என்பது பிரதமருக்கான தேர்வு. மோடிக்கு மாற்று எவரும் இல்லை என்பதை யாராலும் மறுக்க முடியாது. மாறாக தி.மு.க ஆட்சி நடத்தும் லட்சணத்தைப் பார்த்து மக்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். எனவே, நாடாளுமன்றத் தேர்தலில் பெரும் தோல்வியை தி.மு.க சந்திக்கும் என்பது உறுதி.

ஏதோ தேர்தல் வெற்றியைக் குறிவைத்து தி.மு.க., மாநாடு நடத்துவதுபோல் காட்டிக்கொண்டாலும் உதயநிதியை ஃபோகஸ் செய்துதான் இந்த மாநாட்டையே திட்டமிட்டிருக்கிறார் மு.க.ஸ்டாலின். ஆனால் அதில்கூட, பரிதாபமாகத் தோற்றுப்போயிருக்கிறது தி.மு.க. தீர்மானம் என்கிற பெயரில் கருணாநிதி காலத்துக் கோரிக்கைகளை வாசிக்க வைத்திருக்கிறார்கள். இளைஞரணி மாநாடு எனக் கூறி 60 முதல் 70 வயது முதியவர்களுக்குப் பணம் கொடுத்து அழைத்து வந்திருக்கிறார்கள்.
உதயநிதி பேசும்போது பாதிக்குமேல் சேர்கள் காலி. அவர் ஒரு பக்கம் பேசினால் இன்னொரு பக்கம் சீட்டாட்டம் நடக்கிறது. உதயநிதியைப் புகழ்ந்து பேசுங்கள் என அழைத்துவரப்பட்ட ஆட்கள்கூட குறிப்பிட்ட மதம், சாதி குறித்தெல்லாம் அவதூறு பரப்பி மக்களின் கோபத்தைச் சம்பாதித்துக் கொடுத்துவிட்டுப் போயிருக்கிறார்கள். சொல்லப்போனால் மக்களவைத் தேர்தலுக்கும் சரி, உதயநிதியை வளர்க்கவும் சரி… எதற்குமே இந்த மாநாடு கைகொடுக்காது” எனச் சாடினார்

நம்மிடம் பேசிய தி.மு.க செய்தித் தொடர்பாளர் சல்மா, “தி.மு.க-வின் மாநாடு பெரும் வெற்றிபெற்றிருப்பதால் வயிற்றெரிச்சலில் ஏதேதோ பிதற்றிக்கொண்டிருக்கிறார்கள் அ.தி.மு.க-வினரும் பா.ஜ.க-வினரும். பிரதமர் மோடியை அழைத்து வந்தால்கூட இப்படியான கூட்டத்தை அவர்களால் கூட்ட முடியாது என்பது கடந்தகால வரலாறு. என்னைக் கேட்டால் மாநாட்டின் நோக்கம் தேர்தல் வெற்றிக்கும் அப்பாற்பட்ட ஒன்றாக, மாநில உரிமைகளை மீட்பதுதான். அதை மையமாக வைத்தே சூளுரைத்திருக்கிறார்கள் தி.மு.க-வின் முக்கியப்புள்ளிகள். இந்த உரிமை மீட்பு மாநாட்டில் முதலமைச்சர் பேசியதுபோல் மாநில உரிமைகளைப் பறிக்கும் பாசிச பா.ஜ.க-வை மக்கள் புறக்கணிப்பார்கள். இந்த மாநாட்டின் விளைவாக தி.மு.க தமிழ்நாட்டிலும், தேசிய அளவில் `இந்தியா` கூட்டணியும் வெல்லும்.

அதற்கான அடித்தளம்தான் இந்த மாநாடு. மேலும் மாநாட்டில் உதயநிதிக்கும் முக்கியத்துவம் என்கிறார்கள். நடப்பது இளைஞரணி மாநாடு… நடத்துவது இளைஞரணி… அப்படியென்றால் இளைஞரணிச் செயலாளரின் பெயரை எப்படிப் புறக்கணித்துவிட்டு உரையாற்ற முடியும்… துணை முதலமைச்சர் என்பது செய்தியல்ல, வதந்தி என உதயநிதியும் முதலமைச்சரும் தெளிவுபடுத்திவிட்ட பின்பும் அதையே பிடித்துத் தொங்குவது அரசியல் காழ்ப்புணர்ச்சியேயன்றி வேறில்லை” என்றார் கொதிப்புடன்!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY
from Tamilnadu News https://ift.tt/y5RXUqs
