சென்னை கோட்டூர்புரம், பாரதி அவென்யூவைச் சேர்ந்தவர் தேவி. இவர் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில், “நான் மேற்கண்ட முகவரியில் என்னுடைய தங்கை ஆண்டாள் என்பவருடன் வசித்து வருகிறேன். என்னுடைய தங்கை ஆண்டாள், பி.ஜே.பி-யில் மாவட்ட துணைத் தலைவராக இருந்து வருகிறார். கடந்த 19-ம் தேதி சென்னைக்கு பிரதமர் மோடி வந்தபோது சித்ரா நகரிலிருந்து ஆட்கள் அழைத்து வருவது தொடர்பாக என்னுடைய தங்கை ஆண்டாளுக்கும், பா.ஜ.கவைச் சேர்ந்த நிவேதா என்பவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்தத் தகவல் எனக்குத் தெரியாது. இந்த நிலையில் கடந்த 21-ம் தேதி இரவு 8:15 மணியளவில் என்னுடைய வீட்டில் நானும் என் தங்கை ஆண்டாளும் இருந்தோம்.
அப்போது அமர் பிரசாத் ரெட்டியின் டிரைவர் ஸ்ரீதர், நிவேதா, கஸ்தூரி உட்பட சிலர் அங்கு வந்தனர். அவர்கள் அமர் பிரசாத் ரெட்டியின் பெயரைச் சொல்லி என்னையும் என் தங்கை ஆண்டாளையும் அடித்தனர். ஸ்ரீதர், என்னை அடிக்கும்போது நான் அணிந்திருந்த பேன்ட்டை அவிழ்த்து, தகாத வார்த்தைகளால் திட்டினார். அதோடு `என்னுடைய பங்கு வரவில்லை என்றால், குடும்பத்தோடு கொலை செய்துவிடுவேன்’ என்று மிரட்டினார். என்னை தாக்கும்போது என் கைகளை கஸ்தூரி பிடித்துக் கொண்டார். இந்தத் தாக்குதலில் எனக்கு மண்டை உடைந்தது. அதனால் தி.நகர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். உயிருக்கு பயந்து இரண்டு நாள்களாக வெளியில் வரவில்லை. எனவே என் வீட்டுக்கு வந்து என்னையும் என் தங்கையையும் தாக்கியவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்தப் புகாரின்பேரில் போலீஸார், பா.ஜ.க மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி தலைவர் அமர் பிரசாத் ரெட்டி, அவரின் கார் டிரைவரான சைதாப்பேட்டை கிழக்கு மண்டல பா.ஜ.க துணைத் தலைவர் ஸ்ரீதர், நிவேதா, கஸ்தூரி உள்ளிட்டோர்மீது மொத்தம் 9 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவுசெய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் சைதாப்பேட்டை கிழக்கு மண்டல பா.ஜ.க துணைத் தலைவர் ஸ்ரீதர் கைதுசெய்யப்பட்டார். மற்றவர்களை போலீஸார் தேடிவருகிறார்கள்.

இது குறித்துப் பேசிய கோட்டூர்புரம் போலீஸார், “தேவி என்பவர் கொடுத்த புகாரின்பேரில், பா.ஜ.க விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாநிலத் தலைவர் அமர் பிரசாத் ரெட்டி, அவரின் டிரைவரும் சைதை கிழக்கு மண்டல பா.ஜ.க துணைத் தலைவருமான ஸ்ரீதரன், சைதை கிழக்கு மண்டல மகளிரணியின் தலைவி நிவேதா, சைதை கிழக்கு மண்டல மகளிர் சிறுபான்மை அணி துணைத் தலைவி கஸ்தூரி மற்றும் அடையாளம் தெரியாத மூன்று பேர்மீது ஐ.பி.சி பிரிவுகள் 147, 452, 323, 324 ,354, 427, 109 & 506(i) IPC r/w 4 of TNPHW Act-ன் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டு, ஸ்ரீதரனைக் கைதுசெய்திருக்கிறோம்.

பா.ஜ.க-வின் உட்கட்சி விவகாரம் தொடர்பாக இந்த தகராறு நடந்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இந்தச் சம்பவத்தில் அமர் பிரசாத் ரெட்டியின் பெயரைச் சொல்லி தாக்குதல் நடத்தப்பட்டதாக தேவி புகாரளித்ததால்தான் அமர் பிரசாத் ரெட்டி மீது வழக்கு பதிவுசெய்திருக்கிறோம்” என்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY
from Tamilnadu News https://ift.tt/gfOVj3l
