வரும் தேர்தலில் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு செய்து கொள்வதற்காக டி.ஆர்.பாலு தலைமையில் குழு அமைத்திருக்கிறது, தி.மு.க. அவர்கள் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். அதன் ஒருபகுதியாக கடந்த 29-ம் தேதி சிவகங்கை, விருதுநகர் தொகுதி திமுக நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் பேசிய மாவட்ட நிர்வாகிகள், “கார்த்தி சிதம்பரத்துக்கு மீண்டும் சீட் கொடுக்க கூடாது. சொந்த கட்சியினரையும் மதிப்பதில்லை, தி.மு.கவையும் மதிப்பதில்லை. அனைத்திற்கும் கோபப்படுகிறார். நீட் தேர்வை நாம் எதிர்த்து வருகிறோம். ஆனால் அவர் ஆதரிப்பதாக பேட்டி கொடுக்கிறார். இதேபோல் ராகுல் காந்தி, முதல்வர் ஸ்டாலின் குறித்து விமர்சனம் செய்கிறார். எனவே அவருக்கு மீண்டும் சீட் கொடுத்தால் தோல்வி நிச்சயம்” என பேசியிருக்கிறார்கள்.

அண்ணா அறிவாலயம்

முன்னதாக சிவகங்கை மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தியை நீக்கிவிட்டு தனது ஆதரவாளர் சஞ்சய் காந்தியை கொண்டுவந்தால் பெரும் சர்ச்சை வெடித்தது. சமீபத்தில் மோடிக்கு நிகரான தலைவராக ராகுல் காந்தியை பார்க்க முடியாது என கார்த்தி சிதம்பரம் தொலைக்காட்சியில் பேட்டி கொடுத்திருக்கிறார். எனவே அவரை கட்சியை விட்டு நீக்க வேண்டும் என வலியுறுத்தி சிவகங்கையில் சீனியர் கதர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்களும் கார்த்தி சிதம்பரத்துக்கு மீண்டும் சிவகங்கையில் சீட் கொடுக்க கூடாது என வலியுறுத்தினர். இதையடுத்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கார்த்தி சிதம்பரத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் தி.மு.கவினரும் கார்த்திக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருப்பது தேர்தல் அரசியலில் கவனம் பெற்றிருக்கிறது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய சீனியர் கதர்கள், “கார்த்தி பல காலமாக தலைமைக்கு எதிராக பேசி வருகிறார். குறிப்பாக மாநில தேர்தல்களில் காங்கிரஸ் பின்னடைவை சந்தித்த போது கேம் விளையாடுவது போன்று ட்விட்டரில் பதிவிட்டார். மேலும் மூத்த நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் என யாரையும் மதிப்பதில்லை. எனவேதான் தி.மு.கவினர் அறிவாலயத்தில் நடந்த கூட்டத்தில் கொதித்திருக்கிறார்கள். இவ்வாறு கார்த்தி சிதம்பரம் மீது கடும் அதிருப்தி நிலவி வருவதால் சீட் கொடுக்கலாமா வேண்டாமா என தி.மு.க தலைமை யோசித்து வருகிறது. இது கார்த்திக்கும் தெரியும். எனவேதான் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவி கேட்டார். அதுவும் அவருக்கு கிடைக்கவில்லை. இருப்பினும் கடைசி நேரத்தில் காட்சிகள் மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது” என்றார்.

தமிழ்நாடு காங்கிரஸ் அலுவலகம்

கார்த்தி சிதம்பரம் ஆதரவாளர்கள் பேசுகையில், “தலைவர் பார்க்காத பிரச்னையே இல்லை. அரசியல் எதிரிகள் ஒவ்வொரு முறையும் தேர்தலின் போது கார்த்தி சிதம்பரத்துக்கு சீட் கிடைக்காது என வதந்திகளை பரப்புவார்கள். அப்படி தான் இப்போதும் பேசி வருகிறார்கள். யார் தடுத்தாலும் தனது வழக்கமான டெல்லி லாபி மூலமாக சீட் பெற்று வெற்றி பெறுவார்” என்கின்றனர் கூலாக.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

from Tamilnadu News https://ift.tt/X7KxcO9