அரசியல் கட்சிகளிடையே நாடாளுமன்றத் தேர்தலுக்கான பரபரப்புகள் தொடங்கிவிட்டன. கோவை மாவட்டத்தில் கோவை, பொள்ளாச்சி ஆகிய 2 தொகுதிகள் உள்ளன. கோவை தி.மு.க-வைப் பொறுத்தவரை அமைச்சர் செந்தில் பாலாஜி இருந்தவரை பூத் கமிட்டி பணிகள் வேகமாக நடந்தன.

அவர் இருந்திருந்தால், இந்நேரம் வேட்பாளர் முழுவீச்சில் களத்தில் இறங்கியிருப்பார். ஆனால், தற்போதைய நிலையில் கோவை தி.மு.க தேர்தல் பரபரப்பின்றி அமைதியோ அமைதியாக உள்ளது.
செந்தில் பாலாஜி கைதுசெய்யப்பட்ட பிறகு தி.மு.க-விலுள்ள கட்சிப்பூசல் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், தி.மு.க தலைமை தொகுதி வாரியாக நிர்வாகிகளைச் சந்தித்து வருகிறது. கோவை மற்றும் பொள்ளாச்சி தொகுதிகளின் நிர்வாகிகள் சந்திப்பின்போதும் இந்தப் பிரச்னை குறித்து அதிகம் விசாரித்தார்களாம்.

தொகுதி வாரியாக கட்சியிலுள்ள பிரச்னைகளை ரிப்போர்ட்டாக கையில் வைத்துக்கொண்டு, சம்பந்தப்பட்ட நிர்வாகிகளிடம் விளக்கம் கேட்டுள்ளனர். அப்போதும்கூட கோவை உடன்பிறப்புகள் புகார் வாசிப்பதை விடவில்லையாம்.
கோவை மாநகராட்சி மேயர் கல்பனா மீது மண்டலத் தலைவர்களும், மண்டலத் தலைவர்கள்மீது மேயரும் பரஸ்பரம் புகார் தெரிவித்தார்களாம். கடுப்பான தலைமை, ‘உட்கட்சிப் பூசலை மறந்துவிட்டு ஒன்றிணைந்து வேலை பாருங்கள்’ என்று எச்சரித்து அனுப்பியதாம்.

உட்கட்சிப் பூசல் ஒருபக்கம் விஸ்வரூபம் எடுக்க, மறுபக்கம் கீழ் மட்ட நிர்வாகிகள் கட்சியைவிட்டு விலகும் போக்கும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. செந்தில் பாலாஜி இருந்தவரை, கோவை தி.மு.க-வுக்கு, அ.தி.மு.க, பா.ஜ.க உள்ளிட்ட மாற்றுக்கட்சி நிர்வாகிகளை அதிகம் இழுத்து வந்தார்.
அந்த நிலை மாறி தற்போது நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் தி.மு.க நிர்வாகிகள் அ.தி.மு.க, பா.ஜ.க ஆகிய கட்சிகளுக்கு மாறிக் கொண்டிருக்கிறார்கள். பொதுக்குழு உறுப்பினராக இருந்த மைதிலி வினோ பா.ஜ.க-வுக்கும், ஒத்தக்கால் மண்டபம் பேரூராட்சிச் செயலாளர் பாலுவும், அவரின் மனைவியும், கவுன்சிலருமான ரேவதியும் தி.மு.க-விலிருந்து விலகி அ.தி.மு.க-விலும் இணைந்துள்ளனர்.

அதேபோல திருமலையம்பாளையம், தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகள் அ.தி.மு.க-வில் இணைந்துள்ளனர்.
ஏற்கெனவே கோவை மாவட்டத்துக்கு பொறுப்பு அமைச்சராக உள்ள முத்துசாமி, இந்த உட்கட்சிப் பூசல்களால் சோர்வடைந்துவிட்டதாக, தி.மு.க நிர்வாகிகள் கூறுகின்றனர். தவிர அவருக்கு ஈரோடு தொகுதியையும் கவனிக்க வேண்டிய பொறுப்பு உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் கோவை தொகுதி கூட்டணிக் கட்சிக்கும், பொள்ளாச்சி தொகுதியில் தி.மு.க நிற்கவும் முடிவுசெய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து பொள்ளாச்சி தொகுதிக்கு அமைச்சர் சக்கரபாணியை பொறுப்பாளராக நியமிக்க ஆலோசனை செய்து வருகின்றனர். முக்கியமாக மேற்கு மண்டலம் முழுவதுக்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொறுப்பாளராக இருந்து, தேர்தல் பணிகளை கண்காணிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY
from Tamilnadu News https://ift.tt/Mk6XRGn
