தமிழகம் முழுவதும் நாம் தமிழர் கட்சியின் மாநில நிர்வாகிகள் வீடு மற்றும் அலுவலகங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம், சிவகிரி அடுத்துள்ள ராயகிரியில் நாம் தமிழர் கட்சியின் மாநில நிர்வாகியாக உள்ள மதிவாணன் வீட்டிலும், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர். வீடு, அலுவலகம் உள்ளிட்ட இரண்டு இடங்களிலும் 6 அதிகாரிகள் கொண்ட குழுவினர் காலை 5 மணி முதலே சோதனையில் ஈடுபட்டு வந்தனர். முற்பகல் 11 மணி வரை நடைபெற்ற இந்தச் சோதனையின் முடிவில், மதிவாணன் பயன்படுத்தி வந்த இரண்டு செல்போன்கள் மற்றும் சில புத்தகங்களை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைப்பற்றினர். இது குறித்து மதிவாணனிடம் விசாரணை நடத்திய என்.ஐ.ஏ அதிகாரிகள், தமிழீழம் தொடர்பாகவும் விடுதலைப் புலிகள் அமைப்பு தொடர்பாகவும் அவரிடம் கேள்வி எழுப்பியதாகக் கூறப்படுகிறது.


இது குறித்து நம்மிடம் பேசிய நாம் தமிழர் கட்சியினர், “நாம் தமிழர் கட்சி சார்ந்த விஷயங்களுக்கு வெளிநாட்டு அமைப்புகளிடமிருந்து பணம் பெறப்படுவதாகவும், நாம் தமிழர் கட்சி மாநில நிர்வாகிகள் மற்றும் கட்சி அமைப்பினருக்கு விடுதலைப்புலிகள் அமைப்புடன் தற்போதும் தொடர்பு இருப்பதாகவும் என்.ஐ.ஏ அதிகாரிகளுக்கு எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில், இந்தச் சோதனை நடைபெற்றுள்ளது. சோதனையின்போது கைப்பற்றப்பட்ட புத்தகங்கள், செல்போன்கள் தொடர்பாகவும்… யார்-யாருடன் மதிவாணன் தொடர்பில் இருந்தார், அவர் வைத்திருந்த புத்தகங்கள் எங்கு வாங்கப்பட்டன என்பது தொடர்பாகவும் விசாரணை நடைபெற்றிருக்கிறது.
குறிப்பாக `தமிழ் ஈழ விடுதலை உங்கள் கட்சி கொள்கையில் இருக்கிறதா?’ என கேள்வி எழுப்பியிருக்கின்றனர். மேலும் `தமிழ் ஈழ விடுதலையை ஆயுதத்தின் மூலமாக வாங்கிக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படுகிறீர்களா?’ என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். மேலும் இது தொடர்பான விசாரணைக்கு சென்னையில் உள்ள என்.ஐ.ஏ அலுவலகத்தில் வருகிற பிப்ரவரி 7-ம் தேதி ஆஜராகுமாறு மதிவாணனுக்கு சம்மன் கொடுத்துச் சென்றிருக்கின்றனர்” என்றனர்.
from Tamilnadu News https://ift.tt/IUM14SE
