பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் சென்னையில் கடந்த 1-ம் தேதி பா.ம.கவின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் கூடியது. அதில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், ‘தமிழகத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை உடனே நடத்த வேண்டும். 27% ஓபிசி உள் இட ஒதுக்கீடு மற்றும் ரோகிணி ஆணைய அறிக்கையை செயல்படுத்த வேண்டும். 2024 மக்களவைத் தேர்தலில் மாநில நலனிலும், தேசிய நலனிலும் அக்கறை கொண்ட கட்சிகளுடன் கூட்டணி அமைக்க போட்டியிட வேண்டும். கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கு வழங்குவது, வன்னியருக்கான 10.5% இட ஒதுக்கீட்டை தாமதிக்கும் தமிழக அரசுக்கு கண்டனம்” என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மைக் பிடித்த ராமதாஸ், “கடுமையாக உழைத்தால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் 10 இடங்களில் நம்மால் வெற்றி பெற முடியும். சட்டமன்றத்தில் 60 இடங்களை கைப்பற்றி விடலாம். யாருடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பதையெல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக கடுமையாக உழைத்தால் போதும். கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிட்டால் கூட குறைந்தது 7 இடங்களில் நாம் வெற்றி பெற்றாக வேண்டும். ஆனால் உங்கள் விருப்பப்படி அதற்கு நான் இப்போது தயாராக இல்லை. பா.ம.க அடையாளம் கண்டுள்ள 12 மக்களவைத் தொகுதிகளில் பூத் கமிட்டி அமைக்கப்பட்டுவிட்டது. கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்தித்திருந்தால் தமிழகத்தில் இன்று பா.ம.க ஆட்சியில் அமர்ந்திருக்கும். வரும் சட்டப்பேரவை தேர்தலில் இது சாத்தியமாகும்.” என்றார்
தொடர்ந்து பேசியவர், “நான் சிறு விவசாயிக்கு மகனான பிறந்தேன். அங்கேயே சிறு விவசாயியாக வாழந்திருக்கலாமே என நினைப்பது உண்டு. படிக்கவேண்டும் என்ற வைராக்கியத்தால் மருத்துவரானேன். இன்னும் மேல் படிக்கு படித்திருக்க்கலாம். பல மருத்துவமனைகளை உருவாக்கி இருக்கலாம். தமிழ்நாட்டில் மருத்துவ சாம்ராஜ்யத்தையே உருவாக்கி இருக்கலாம். ஆனால் இதையெல்லாம் விட்டுவிட்டு இந்த ஊமை ஜனங்களுக்கு உழைக்க வேண்டும் என்பதற்காக உழைக்கிறேன். எனக்கு வயது 85. தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களில் தந்தை பெரியார் 94 வயது வரையில் பொது வாழ்க்கையில் தன்னை இணைத்துக்கொண்டார். திமுக தலைவராக கலைஞர் 94 வயது வரையில் இருந்தார். மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யா 102 வயதில் இறந்தார். இப்போது நல்லக்கண்ணு 99 வயதில் உயிருடன் இருக்கிறார். திராவிட கழக தலைவர் வீரமணி 91 வயதில் உயிருடன் இருக்கிறார். தேசிய தலைவர்கள் என்று பார்க்கும் பொழுது காங்கிரஸ் மூத்த தலைவர் மகாத்மா காந்தி 80 வயதில் சுட்டு கொல்லபடவில்லை என்றால் இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து இருப்பார். வாஜ்பாய் 80 வயது வரை பிரதமராக இருந்தார். சுர்ஜித் சிங் பர்னாலா 91 வயது வரையில் அரசியலில் இருந்தார்” என நீண்ட பட்டியலை அடுக்கினார், ராமதாஸ்.

மேலும் தொடர்ந்தவர், “எனக்கு 85 வயது தான். ஒரு குறிப்பிட்ட வயதில் ஓய்வு என்பது ஊதியத்துக்காக வேலை செய்பவர்களுக்குத்தான். நான் உதியத்திற்காக உழைப்பவன் அல்ல. ஊமை ஜனங்களுக்காக உழைப்பவன். தமிழ்நாட்டில் ஊமை ஜனங்கள் கல்வியிலும், வேலைவாய்பிலும் முன்னேறி விட்டால் நிம்மதியாக ஓய்வெடுக்க செல்வேன். இன்றைய சூழலில் என்னால் ஓய்வெடுத்து ஒதுக்கியிருக்க முடியாது. நான்கரை ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் எனக்கு முத்து விழா நடத்தினீர்கள். அதில் நான் கூறியதை நினைவுபடுத்த விரும்புகிறேன். முதுமை என்னை வாட்டினாலும், கோலூன்றி நடந்தாலும் இந்த ஊமை ஜனங்களுக்காக, மக்களுக்காக இறுதிவரை போராடி உயிரை விடுவேன் என்று இந்த நேரத்தில் உறுதி அளிக்கிறேன்” என்றார். மேலும் ‘பாரத ரத்னா’ உள்பட எந்த விருதை எனக்கு மத்திய அரசு கொடுத்தாலும், அதை நான் வாங்க மாட்டேன்” என வெடித்தார்.
“2026 நம்முடைய ஆண்டு. அதற்கு முன்னோட்டம்தான் 2024 மக்களவைத் தேர்தல். இதில் வெற்றே ஆக பெற வேண்டும்” என பேச தொடங்கினார் அன்புமணி. “இந்தியாவின் முதன்மை விருதான பாரத ரத்னாவை பீகாரின் முன்னாள் முதல்வர் கர்புரி தாகூருக்கு வழங்கினார்கள். அவர் அந்த விருதுக்கு தகுதியானவர். அவருக்கு அதை வழங்க வேண்டும். 85 வயதில் தமிழ்நாட்டுக்கும், இந்தியாவுக்கும் எவ்வளவோ சாதனைகளை செய்த நம்முடைய மருத்துவர் ஐயாவுக்கு ஏன் வழங்கவில்லை?. கர்புரி தாகூர் முதல்வராக அதிகாரத்தில் இருந்து செய்வது பெரிய விஷயம் இல்லை. ஆனால் எந்த அதிகாரத்திலும் இல்லாமல் தமிழ்நாட்டுக்கும், இந்தியாவுக்கும் செய்வதுதான் பெரிய சாதனை. தமிழ்நாட்டுக்கு 4, இந்தியாவுக்கு 2 என மொத்தம் 6 இட ஒதுக்கீடுகளை பெற்று தந்த ஒரே தலைவர் நமது மருத்துவர் அய்யாதான். எனவே அவருக்கல்லவா விருது அளித்திருக்க வேண்டும்” என மத்திய பா.ஜ.க அரசு மீதான தனது ஆதங்கத்தை கொட்டி தீர்த்தார், அன்புமணி.

பின்னர் தி.மு.க பக்கம் திரும்பியவர், “கடந்த 28-ம் தேதி முதல்வரை சந்தித்து பேசினார், மருத்துவர் ஐயா. 35 நிமிடங்கள் நடந்த பேச்சுவார்த்தையில் தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தார். வேறு எதுவும் பேசவில்லை. இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் ஐயாவை கெஞ்ச வைப்பீர்கள். சமூக நீதி என வெற்று மாநாடு நடத்தி பேசிக்கொண்டிருக்கிறீர்கள். முதல்வர் சமீபத்தில் ஒரு மாநாட்டில் மகளிருக்கு மாதம் ரூ.1,000, வெள்ள நிவாரண நிதி ரூ.6,000, பொங்கலுக்கு ரூ.1,000 ஆகியவை திட்டங்கள் என பேசி கொண்டிருக்கிறார். அப்படியென்றால் 108 ஆம்புலன்ஸ் திட்டம், தேசிய சுகாதார திட்டம்’ எல்லாம் சும்மாவா?. சும்மா வசனம் பேசிக்கொண்டிருக்கும் ஆட்சி இது” என கொதித்திருந்தார்.
இதையடுத்து ‘அன்புமணியின் ஆதங்கத்துக்கும், ராமதாஸின் வயது குறித்த பேச்சுக்கும் என்ன காரணம்?’ என்ற கேள்வியுடன் தைலாபுரம் தோட்டத்துக்கு நெருக்கமான சிலரிடம் பேசினோம், “கட்சி ஆரம்பித்ததில் இருந்து கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் ஐயாவுக்கு தான் இருக்கிறது. ஆனால் இந்த முறை, ‘எனக்கும் வேண்டும்’ என அன்புமணி கேட்டிருப்பதாக தகவல் வெளியானது. எனினும் அதற்கு ராமதாஸ் ஒத்துக்கொள்ளவில்லை. எனவேதான் எப்போதும் ஆண்டின் இறுதியில் நடக்கும் கூட்டம் இந்தமுறை தாமதமாக நடந்திருக்கிறது. மீண்டும் மத்திய அமைச்சர் பதவியை எதிர்பார்க்கும் அன்புமணி, பா.ஜ.க பக்கம் செல்லலாம் என நினைக்கிறார். ஆனால் ஐயாவுக்கு இதில் துளியும் விருப்பம் இல்லை. அவர் அ.தி.மு.கவுடன் கூட்டணி வைக்க விரும்புகிறார். அதேநேரத்தில் எடப்பாடி தரப்பு ‘கூட்டணி குறித்து மருத்துவர் முடிவு செய்தால் மட்டுமே பா.ம.கவுடன் கூட்டணி வைப்போம்.

அன்புமணியுடன் நாங்கள் பேச விருப்பமில்லை’ என சொல்கிறதாம். இதனால் வேறு வழியில்லாமல் அன்புமணியும் ஒத்துக்கொள்ளும் சூழல் உருவானது. மேலும் அன்புமணி, சமீப காலமாகவே மருத்துவரின் வயதை காரணம் காட்டி, `நீங்கள் தீவிர அரசியலில் ஈடுபட வேண்டாம்’ என ஐயாவிடம் கூறி வருகிறார். அதற்கு பதிலளிக்கும் வகையில் தான் மேடையிலேயே, ’90 வயது வரை அரசியல் செய்த தலைவர்கள் குறித்த பெயரை பட்டியலிட்டு இருக்கிறார்’ ஐயா. இதன் மூலம் ‘தொடர்ந்து நான் அரசியல் செய்வேன்’ என பதில் சொல்லி இருக்கிறார்” என்றனர் விரிவாக.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY
from Tamilnadu News https://ift.tt/SyDGr3n
