இந்தியாவின் முன்னாள் துணைப் பிரதமரும், பா.ஜ.க-வின் மிக முக்கிய மூத்த தலைவர்களில் ஒருவருமான எல்.கே.அத்வானிக்கு, பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு நாட்டின் உயரிய விருதான `பாரத ரத்னா’ விருதை இன்று அறிவித்திருக்கிறது. இவர், துணைப் பிரதமராக மட்டுமல்லாமல், 1970 முதல் நாடாளுமன்றத்தில் மக்களவை, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை, உள்துறை, நிலக்கரி மற்றும் சுரங்கங்கள் துறை ஆகிய துறைகளுக்கு மத்திய அமைச்சராகப் பதவி வகித்திருக்கிறார். இருப்பினும், 1990-ல் அத்வானி மேற்கொண்ட ரத யாத்திரையும், அதனால் உண்டான தாக்கங்களுமே அவருக்கான முக்கிய அடையாளமாக மாறியது.

பிரதமர் மோடி – எல்.கே.அத்வானி

இன்றைக்கு, அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா கண்டிருக்கிறதென்றால் அதில் அத்வானியின் ரத யாத்திரைக்கு முக்கிய இடமுண்டு. இவ்வாறிருக்க, மக்களவைத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையில், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு பீகாரின் `மக்கள் நாயகன்’ என்று அழைக்கப்படும் மறைந்த முதல்வர் கர்பூரி தாக்கூருக்கு மோடி அரசு பாரத ரத்னா அறிவித்ததைத் தொடர்ந்து, தற்போது அத்வானிக்கு `பாரத ரத்னா’ விருது அறிவித்திருக்கிறது. பிரதமர் மோடி முதல் மத்திய அமைச்சர்கள் எனப் பலரும் அத்வானிக்கு வாழ்த்து தெரிவித்தவண்ணம் இருக்கின்றனர். காங்கிரஸ் கமிட்டி தலைவர் கார்கேவும் இதனை வரவேற்பதாகத் தெரிவித்திருக்கிறார். இந்த நிலையில், 1990-ல் ரத யாத்திரை சமயத்தில் ஆனந்த விகடனுக்கு அத்வானி அளித்த சிறப்புப் பேட்டியை இங்கு காணலாம்…

“பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால், இந்தியா ‘இந்து நாடு’ என்று அறிவிக்கப்பட்டு விடுமோ?”

“ஒரு பிரிட்டிஷ்காரரிடம், ‘பிரிட்டன் ஒரு கிறிஸ்தவ நாடாக ஆக்கப்படுமா?’ என்று கேட்டால், அப்படிக் கேட்டவரைக் பார்த்து அவர் சிரிப்பார். பிரிட்டன் கிறிஸ்தவ நாடாக மாற்றப்படவில்லை. ஆரம்பத்திலிருந்தே அது கிறிஸ்தவ நாடாகவே இருந்து வந்திருக்கிறது. ஆனால், இந்தியாவை ஒரு இந்து நாடு என்று சொன்னால், சிலர் பதறிப்போகிறார்கள். இந்தியா, இந்தியாவாக இருப்பதற்குக் காரணமே, அது இந்து நாடு என்ற காரணத்தினால்தான். அதேசமயம், இந்துக்கள் அல்லாதவர்களும் நமது தேசத்தின் வளர்ச்சிக்குத் துணை புரிந்திருக்கிறார்கள் என்பதை நான் ஏற்கிறேன்.

எல்.கே.அத்வானி

டொனால்ட் ஈகின் ஸ்மித் என்பவர் ‘India as a secular state’ என்ற புத்தகத்தில், ‘இந்தியா ஒரு மிக்ஸட் ஸ்டேட் என்று கூறுபவர்கள், இந்தியாவுக்கு இந்து மதம் வழங்கியுள்ள கலாசாரத்தைக் குறைத்துக்காட்டவே விரும்புகிறார்கள்’ என்று கூறுகிறார். ‘இந்தியாவில் பல மதங்கள், பல இனங்கள் இருக்கின்றன… ஆனால், இந்து மதத்தைப் போல நீண்ட சரித்திரம் எதற்கும் இல்லை. இந்து மதம் இல்லையெனில், இந்தியா ஒரு இடுகாடு!’ என்று டாக்டர் அன்னிபெசன்ட் கூறியதையும் இந்த இடத்தில் நான் கூற விரும்புகிறேன்.”

“இந்தியாவில் இந்துக்கள் அல்லாதவர்கள் இரண்டாம்தரக் குடிமக்களாக நடத்தப்பட வேண்டும் என்பதுதான் பாரதிய ஜனதாவின் கொள்கையா?”

“1947-க்குப் பின்பு, இந்து – முஸ்லிம் என்று மதங்களின் அடிப்படையில்தான் நாடு பிளவுபட்டது. அப்போது பாகிஸ்தான் தன்னை ஓர் இஸ்லாமிய நாடு என்று பிரகடனப்படுத்திக் கொண்டது. முஸ்லிம்களை முதல்தரக் குடிமக்கள் என்றும், முஸ்லிம் அல்லாதவர்களை இரண்டாம்தரக் குடிமக்கள் என்றும் அறிவித்தது. அதனால் நூற்றுக்கணக்கில் இந்துக்கள் அங்கே கொல்லப்பட்டார்கள். பல லட்சம் பேர் வீடுகளை இழந்தார்கள். இருந்தாலும், அப்போது இந்தியா தனது அரசியல் சட்டத்தை அறிவித்தபோது, தன்னை மதச்சார்புள்ள நாடாக அறிவித்துக்கொள்ளவில்லை.

எல்.கே.அத்வானி

மக்களையும் அவர்களின் மத நம்பிக்கையையும் வைத்து உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்று இந்தியா ரகம் பிரிக்கவில்லை. ஆகையால், இந்தியா 1947-லேயே வேண்டாம் என்று தள்ளிய முறையை நாங்கள் ஒருபோதும் கொண்டுவர மாட்டோம். அதே சமயம், மதச்சார்பின்மை என்ற பெயரால் சிறுபான்மையினருக்கு மட்டும் தனியாக அதிகச் சலுகைகளைக் கொடுப்பதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில், மதச்சார்பின்மையில் அனைவரும் சமம்!

“தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி வேரூன்றுமா?”

“தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஓட்டுகள் தி.மு.க., அ.தி.மு.க என்று இரண்டு பக்கங்களில் மட்டுமே பிரிகின்றன. ஆகையால் ஒரு மூன்றாவது கட்சி உள்ளே நுழைவது கடினமாக இருக்கிறது. காங்கிரஸ் போன்ற பெரிய கட்சிகள்கூட ஏதாவது ஒரு திராவிடக் கட்சியின் பின்னால் நிற்கும் நிலைதான் இங்கே இருக்கிறது. கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய தென்மாநிலங்களில் எங்கள் கட்சிக்கு ஆதரவு பெருகி வருகிறது. விரைவில் தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி வேரூன்ற நிறைய சாத்தியங்கள் உள்ளன.

எல்.கே.அத்வானி, தம்பிதுரைக்கு புதிய பதவி!

“உருவ வழிபாட்டில் உங்களுக்கு நம்பிக்கை உண்டா?”

“நான் உருவ வழிபாடு செய்வது கிடையாது. பூஜை, சடங்குகளும் செய்வதில்லை. ஆனால், இவற்றில் தவறு இருப்பதாகவும் எனக்குப் படவில்லை!”

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

from Tamilnadu News https://ift.tt/ZuanMmC