நாடு வளர்ச்சியில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலும், அனைவருக்கும் சமநீதி, சம உரிமை, அதிகாரம் அளித்தல், அடிப்படை அமைப்புகளை பாதுகாத்தல் உள்ளிட்ட சாராம்சம் அடிப்படையிலும் கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கிராமசபை கூட்டங்களை போலவே உள்ளாட்சிப் பகுதிகளில் டவுண் பஞ்சாயத்து மற்றும் நகராட்சி, மாநகராட்சிகளில் மக்கள் பங்கேற்கும் விதமாக ‘ஏரியா சபை கூட்டம்’ நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதைத்தொடர்ந்து, ஏரியா சபைக்கூட்டம் எவ்வாறு நடத்தப்பட வேண்டும். ஒரு வருடத்தில் எத்தனை முறை ஏரியா சபை கூட்டங்கள் நடத்தலாம் என்பன உள்ளிட்ட வழிகாட்டுதல்களோடு விரிவான அரசாணையும் அரசு வெளியிட்டது.

கோயில்

அதன்படி கடந்த ஜனவரி 25-ம் தேதி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஏரியா சபைக்கூட்டம் நடத்தப்பட்டது‌. இதில் தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் பேரூராட்சியில் நடைபெற்ற ஏரியா சபை கூட்டம் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. இதுகுறித்து சமூக ஆர்வலர், சுரேஷ் நம்மிடம் பேசுகையில், “மக்கள் தொகையின் அடிப்படையில், மாநகராட்சிகளில் ஒவ்வொரு வார்டையும் நான்கு முதல் பத்து பகுதிகளாகவும், நகராட்சிகளில் நான்கு பகுதிகளாகவும் மற்றும் பேரூராட்சிகளில் மூன்று பகுதிகளாகவும் பிரித்து, ஒவ்வொரு பகுதிக்கும் ஏரியா சபைகளை அமைக்கவும் மற்றும் ஏரியா சபைகளின் கூட்டங்களை நடத்தவும் வழிமுறை வகுக்கப்பட்டுள்ளன. மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஏரியா சபைகளின் கூட்டங்களை, ஆண்டுதோறும், தேசிய வாக்காளர் தினமான ஜனவரி 25-ம் தேதி, டாக்டர் அம்பேத்கர் பிறந்த தினமான ஏப்ரல் 14-ம் தேதி, பேரறிஞர் அண்ணா பிறந்த தினமான செப்டம்பர் 15-ம் தேதி மற்றும் சர்வதேச மனித உரிமைகள் தினமான டிசம்பர் 10-ம் தேதி ஆகிய நான்கு தினங்களில் நடத்திட வேண்டும்

இந்தக்கூட்டம் தங்கள் பகுதியின் வளர்ச்சித் திட்டங்களில் பங்கேற்கவும், மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகத்தில் மக்கள் பங்கேற்பினை உறுதி செய்யவும், அடித்தட்டு ஜனநாயகத்தை வலுப்பெறச் செய்யவும் ஏதுவாகிறது. ஆனால் கடந்த ஜனவரி 25-ம் தேதி வாசுதேவநல்லூர் பேரூராட்சியில் நடந்த ஏரியா சபை கூட்டமானது முற்றிலும் அரசு விதிகளுக்கு புறம்பாக நடத்தப்பட்டுள்ளது. அரசு வழிமுறைகளின்படி ஏரியா சபை கூட்டம் மத சார்ந்த இடங்களிலோ, மத வழிபாட்டு தலங்களிலோ நடத்தப்படக்கூடாது. ஆனால் வாசுதேவநல்லூர் பேரூராட்சியின் 18-வது வார்டு பகுதியில் உள்ள சிந்தாமணி நாதர் திருக்கோயிலில் வைத்து ஏரியா சபை கூட்டத்தை பேரூராட்சி அலுவலர்களும், வார்டு கவுன்சிலர் இணைந்து நடத்தியிருக்கிறார்கள். அதிலும் கூட பொதுமக்கள் யாரும் பங்கேற்கவில்லை. கோயிலுக்கு அன்னதானம் சாப்பிட வந்த நபர்களை அழைத்து அமரவைத்து கூட்டத்தை நடத்தி முடித்திருக்கிறார்கள்.

கண்துடைப்புக்காக நடத்தப்பட்ட கூட்டத்தால் மக்களுக்கு எந்த பலனும் இல்லை. ஏரியா சபை கூட்டத்தை மத வழிபாட்டுத் தலமான கோயிலில் வைத்து நடத்துவதற்கு பேரூராட்சி எப்படி முடிவு செய்தது? அறநிலையத்துறை எப்படி அதற்கு இடமளித்தது என்பது தெரியவில்லை. இது உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதா? என்பதையும் கேள்வி எழுப்ப வேண்டியிருக்கிறது. கோயிலில் வைத்து கூட்டம் நடத்தப்பட்டதற்கு தகுந்த ஆதாரங்கள் இருக்கின்றன. கூட்டம் நடத்தப்பட்ட விஷயம் கோயிலில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. ஆகவே இதுபோன்ற செயல்கள் உள்ளாட்சி அமைப்புகளை பலவீனப்படுத்தும் முயற்சியாகும். அதே சமயம் உள்ளாட்சி அமைப்புகளில் மக்கள் பங்களிப்பு இருக்க வேண்டும் என அரசு வெளியிட்டுள்ள அரசாணைக்கு முரணான செயலாகவும் பார்க்க வேண்டியிருக்கிறது. ஆகவே இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி அரசு அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்வரும் காலத்திலாவது முறையான அறிவுப்புடன், சரியான இடத்தில் ஏரியா சபைக்கூட்டம் நடத்தப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்” என்றார்.

பேரூராட்சி

புகார் குறித்து பேரூராட்சி செயல் அலுவலரிடம் பேசினோம், “கோயிலில் வைத்து ஏரியா சபை கூட்டம் நடந்தது குறித்து விசாரணை நடத்தி இருக்கிறோம். அவசர கதியில் நடந்த கூட்டம் என்பதாலும் நிழல்பாங்கான இடத்தில் நடத்த வேண்டும் என்ற எண்ணத்தின் பேரிலும் அந்தக் கூட்டம் கோயிலில் நடத்தப்பட்டதாக தெரியவருகிறது. இனி இது போன்ற தவறுகளுக்கு இடம் அளிக்க கூடாது என அலுவலர்களுக்கு எச்சரிக்கை வழங்கி இருக்கிறோம்” என்றார்.

அறநிலையத்துறை அதிகாரிகளிடம் கூறுகையில், “ஏரியா சபை கூட்டம் நடந்த தினமன்று கோயில் நிர்வாக பொறுப்பில் இருந்தவர்கள் வெளிவேலை காலம் காரணமாக சென்றுவிட்டனர். எனவே அன்றைய தினம் கோயிலில் அலுவலக பணியில் பணியாளர்கள் மட்டுமே ஈடுபட்டு ஈடுபட்டிருந்தனர். கோயிலுக்குள் ஏரியா சபை கூட்டம் நடத்துவது தொடர்பாக அறநிலையத்துறையிடம் பேரூராட்சி எந்த முன் அனுமதியும் வாங்கவில்லை. அதேசமயம் மத வழிபாட்டு தலங்களில் கூட்டம் நடத்தப்படக்கூடாது என்ற அரசாணைக்கு எதிராக அறநிலையத்துறையும் அனுமதி வழங்காது. அறநிலையத்துறையிடம் முறையான தகவலோ, அனுமதியோ பெறாமல் நடத்தப்பட்ட கூட்டம் என்பதால் விளக்கம் கேட்டு பேரூராட்சிக்கு கடிதம் எழுதி இருக்கிறோம். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

from Tamilnadu News https://ift.tt/ks0n6WI