கேரள மாநிலம், கோழிக்கோட்டில் நேஷனல் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி (என்.ஐ.டி) அமைந்துள்ளது. என்.ஐ.டி-யில் படிக்கும் மாணவர் ஒருவர் அயோத்தியில் ராமர் கோயில் பிரதிஷ்டை கொண்டாட்டங்களுக்கு எதிராக சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து அவர் ஓராண்டுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் நடந்தது. மாணவர் சங்கத்தினர் போராட்டத்தை தொடர்ந்து சஸ்பெண்ட் நடவடிக்கை ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் காந்தி நினைவுதினத்தில் கோட்சேவை புகழ்ந்து சமூக வலைதளத்தில் கமென்ட் போட்ட பேராசிரியை மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது. காந்தியடிகள் நினைவுதினத்தில் அட்வகேட் கிருஷ்ணராஜ் என்ற ஃபேஸ்புக் ஐடியில் ஒருபதிவு போடப்பட்டிருந்தது. அதில், கோட்சே போட்டோவை பதிவேற்றம் செய்து, ‘ஹிந்து மகாசபா நிர்வாகி நாதுராம் விநாயக் கோட்சே பாரத தேசத்தில் நிறையபேரின் ஹீரோ’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்தப் பதிவுக்கு என்.ஐ.டி மெக்கானிக்கல் பிரிவு பேராசிரியை ஷைஜா ஆண்டவன் போட்டிருந்த பின்னூட்டத்தில், `இந்தியாவைக் காப்பாற்றிய பெருமை கோட்சேவுக்கு உண்டு’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

இது குறித்து சி.பி.எம் மாணவர் அமைப்பான எஸ்.எஃப்.ஐ ஏரியா செயலாளர் அஸ்வின் என்பவர், குன்னங்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் `தேசப் பிதாவை அவமதித்ததற்கு எதிராக வழக்கு பதிவுசெய்ய வேண்டும்’ எனக் கூறப்பட்டிருந்தது. மேலும், கோட்சே-வை புகழ்ந்து பதிவிட்ட பேராசிரியர்மீது வழக்கு பதிவுசெய்ய வேண்டும் என காங்கிரஸ் மாணவர் அமைப்பான கே.எஸ்.யூ மாவட்ட தலைவர் சூரஜ் என்பவர் நடைக்காவு போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்திருந்தார். இந்த நிலையில் என்.ஐ.டி பேராசிரியர் ஷைஜா ஆண்டவன் மீது குன்னங்குளம் போலீஸார் வழக்கு பதிவுசெய்துள்ளனர். கலவரம் செய்யும் நோக்கத்துடன் செயல்படுதல் உள்ளிட்ட பிரிவுகளில் பேராசிரியர்மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இது குறித்து பேராசிரியர் ஷைஜா ஆண்டவன் கூறுகையில், ” `ஒய் நாதுராம் கில்ட் காந்தி’ என்ற கட்டுரை படித்தேன். அட்வகேட் கிருஷ்ணராஜ் என்ற ஐ.டி-யில் போஸ்ட் செய்யப்பட்ட கோட்சே போட்டோவிற்கு நான் கமென்ட் செய்தேன். அந்த கமென்ட் விவாதம் ஆகும் என நான் கருதவில்லை. இந்த விவாதத்தால் எனக்கு வருத்தம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நான் அந்த கமென்ட்டை டெலிட் செய்துவிட்டேன். எனது வேலை கற்பித்தல் மட்டுமே. எந்த அரசியல் கட்சியுடனும் எனக்கு தொடர்பு இல்லை” என்றார்.
from Tamilnadu News https://ift.tt/RgPq26K
