டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மதுபானக் கொள்கை தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி, அமலாக்கப் பிரிவு பல முறை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து அமலாக்கப் பிரிவு இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. தற்போது பா.ஜ.க தங்களது கட்சி எம்.எல்.ஏ-க்கள் 7 பேரை தங்களது பக்கம் இழுக்க முயற்சி செய்வதாக, அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியிருந்தார். இது தொடர்பாக விளக்கம் கொடுக்கும்படி கூறி, டெல்லி போலீஸார் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நேற்று சம்மன் கொடுத்துள்ளனர். அந்த நோட்டீஸுக்கு நாளைக்கு கெஜ்ரிவால் பதிலளிக்கவேண்டும் என்று போலீஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். இது தவிர இன்று டெல்லி அமைச்சர் அதிஷிக்கும் டெல்லி போலீஸார் நேரில் சென்று சம்மன் கொடுத்துவிட்டு வந்தனர்.

போலீஸார் சென்றபோது வீட்டில் அமைச்சர் இல்லை. ஆனால் சம்மனை வீட்டில் கொடுத்துவிட்டுச் செல்லும்படி போலீஸாரிடம் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தொடர்ந்து எதாவது ஒரு வழியில் பா.ஜ.க அரசு நெருக்கடி கொடுத்துக்கொண்டே இருக்கிறது. இது குறித்து கெஜ்ரிவால் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ”என்னை பா.ஜ.க-வில் சேரச்சொல்கிறார்கள். ஆனால் நான் ஒருபோதும் சேரமாட்டேன்.
அவர்கள் என்னவேண்டுமானாலும் செய்யட்டும். ஆனால் அவர்களுக்கு நான் அடிபணியமாட்டேன். எங்களிடம் வந்துவிடுங்கள். உங்களுக்கு தொந்தரவு கொடுக்கமாட்டோம் என்று சொல்கிறார்கள். ஆனால் நான் அவர்களுடன் சேரமாட்டேன். எங்களை அவர்கள் மன்னிக்க நாங்கள் என்ன தவறு செய்தோம். நாங்கள் பள்ளி மற்றும் மருத்துவமனைகளை மேம்படுத்த பாடுபடுகிறோம். அதில் என்ன தவறு இருக்கிறது” என்று தெரிவித்தார். கடந்த மாதம் 27-ம் தேதி அரவிந்த் கெஜ்ரிவாலும் அமைச்சர் அதிஷியும் அளித்திருந்த பேட்டியில், ”எங்களது கட்சி எம்.எல்.ஏ-க்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.25 கோடி தருவதாகவும், அடுத்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுப்பு கொடுப்பதாகவும் குறி பா.ஜ.க. தங்களது பக்கம் எம்.எல்.ஏ-க்களை இழுக்க பார்க்கிறது” என்று குற்றம்சாட்டி இருந்தனர்.

ஆனால் பா.ஜ.க இக்குற்றச்சாட்டை மறுத்துள்ளது. அதோடு ஆதாரங்களை வெளியிட முடியுமா என்றும் பா.ஜ.க சவால் விட்டுள்ளது. எந்த எம்.எல்.ஏ-க்களையெல்லாம் பா.ஜ.க அணுகியது என்பது குறித்து தெரிவிக்கும்படி டெல்லியில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் டெல்லி போலீஸார் ஆம் ஆத்மி கட்சி தலைவர்களுக்கு சம்மன் அனுப்பியிருக்கின்றனர். தங்களுக்கு வந்த புகாரின் அடிப்படையில்தான் விசாரித்து வருவதாக டெல்லி போலீஸார் தெரிவித்துள்ளனர்.
from Tamilnadu News https://ift.tt/Z5pVzhR
