கடந்த 22-ம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்டது. அதன் இறுதிக் கட்ட கோயில் கட்டுமானம் 2025 டிசம்பரில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், “பா.ஜ.க அரசு மத அரசியல் செய்கிறது. இன்னும் முழுமையாகக் கட்டி முடிக்காத கோயிலை இவ்வளவு அவசரமாகத் திறக்க காரணம் என்ன… பா.ஜ.க-வுக்கு ராமர் மீது பக்தியெல்லாம் கிடையாது. தேர்தலை முன்னிட்டு அரசியல் செய்து வாக்கு அறுவடை செய்கிறது” எனக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன.

சுரண்யா அய்யர் – மணி சங்கர் அய்யர்

அதைத் தொடர்ந்து, காங்கிரஸ் மூத்த தலைவர் மணி சங்கர் அய்யரின் மகள் சுரண்யா அய்யர், ராமர் கோயில் திறப்பு விழா அன்று தனது சமூக வலைதளப் பக்கத்தில், “ `பிராண பிரதிஷ்டை’ விழாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, மூன்று நாள்கள் உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன். இந்த உண்ணாவிரதம் மூலம், சக முஸ்லிம் குடிமக்களுக்கு அன்பையும் எனது வருத்தத்தையும் வெளிப்படுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தார். அவரின் இந்தப் பதிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மணி சங்கர் அய்யர் மற்றும் அவரின் மகளுக்கு, `குடியிருப்பாளர்கள் நலச் சங்கம்’ நோட்டீஸ் அனுப்பியது.

அதில், “ராமர் கோயில் குறித்த விமர்சனப் பதிவுக்கு மன்னிப்புக் கேளுங்கள். மணி சங்கர் அய்யர் தன் மகளைக் கண்டிக்க வேண்டும் அல்லது இந்தக் குடியிருப்பை காலி செய்ய வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதற்கு விளக்கமளித்த மணி சங்கர் அய்யரின் மகள் சுரண்யா அய்யர், “குடியிருப்போர் நலச் சங்கம் அனுப்பிய நோட்டீஸ் எனக்கு வரவில்லை. மேலும், அந்தக் குடியிருப்போர் நலச் சங்கம் தொடர்புடைய வீட்டிலும் நான் வசிக்கவில்லை. பத்திரிகை மூலம் மட்டுமே நோட்டீஸ் குறித்துத் தெரிந்து கொண்டேன்.

இந்தியாவில் தற்போது ஊடகங்கள் நச்சுத்தன்மையையும் குழப்பத்தையும் மட்டுமே பரப்பி வருவதால், ஊடகங்களிடம் பேச வேண்டாம் என்று இப்போதைக்கு முடிவு செய்துள்ளேன்” எனத் தெரிவித்திருந்தார்.

அயோத்தி ராமர் கோயில்

இந்த நிலையில், உச்ச நீதிமன்ற வழக்கறிஞரும் பா.ஜ.க தலைவருமான அஜய் அகர்வால், டெல்லி சைபர் க்ரைம் காவல்துறையிடம் புகார் அளித்திருக்கிறார். அதில், “சுரண்யா அய்யர், ஃபேஸ்புக், யூடியூப் மற்றும் பிற சமூக ஊடக தளங்களில் ஜனவரி 20, 2024-ல் கடுமையான ஆட்சேபனைக்குரிய அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். தயவுசெய்து அவர் மீது பிரிவு 153-A (மதத்தின் அடிப்படையில் வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவிப்பது) உள்ளிட்ட ஐ.பி.சி பிரிவுகளின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

from Tamilnadu News https://ift.tt/HgGEAMJ