புனேயில் உள்ள சாவித்ரி பாய் புலே பல்கலைக்கழகத்தில் நடந்த கலைநிகழ்ச்சியின்போது, லலித் கலா கேந்திரா என்ற அமைப்பை சேர்ந்த மாணவர்கள் சிலர், ராமாயாணத்தை நாடகமாக அரங்கேற்றினர். இந்த நாடகம் நடந்து கொண்டிருந்தபோது, அங்கு அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் மாணவர்கள் வந்தனர். அவர்கள் நாடகத்தில் ஆட்சேபனைக்குரிய காட்சிகள் மற்றும் வசனங்கள் இடம் பெற்றிருப்பதாகக் கூறி, குற்றம்சாட்டினர். மேலும் நாடகத்தில் சீதையாக நடித்த ஒரு மாணவர் நாடகத்தில் புகைப்பிடிப்பது போன்ற ஒரு காட்சியும் இடம் பெற்றிருந்தது.

எனவே நாடகத்தை நிறுத்தச் சொல்லி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இரு தரப்பினரும் மோதிக்கொண்டனர்.
இதையடுத்து அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பை சேர்ந்தவர்கள் நாடகத்தில் இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் காட்சிகள் மற்றும் வசனங்கள் இடம் பெற்றிருப்பதாகக் கூறி, போலீஸில் புகார் செய்தனர். அதன் அடிப்படையில் பல்கலைக்கழக பேராசிரியர் பிரவின் மற்றும் ஐந்து மாணவர்கள் கைதுசெய்யப்பட்டனர். அவர்கள் நேற்று மாலையில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். மாணவர்கள் கைது செய்யப்பட்டதற்கு ஆசிரியர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அதோடு இச்சம்பவத்திற்கு காரணமான ஏ.பி.வி.பி பிரமுகர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர். நடந்த சம்பவம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் கமிட்டி ஒன்றை பல்கலைக்கழகம் அமைத்திருக்கிறது. இது குறித்து புனே போலீஸ் கமிஷனர் அமிதேஷ் குமார் கூறுகையில், “இது மிகவும் பதற்றத்தை ஏற்படுத்தக்கூடிய விவகாரம். இரு தரப்பினரையும் அமைதிப்படுத்த முயன்று வருகிறோம். பல்கலைக்கழக வளாகத்தில் எந்த வித அசம்பாவிதமும் நடக்காமல் இருக்க போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இரு தரப்பினர்மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
from Tamilnadu News https://ift.tt/1KOCPUz
