அயோத்தியில் ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை நிகழ்ச்சி முடிந்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், அடுத்தகட்டமாக ஞானவாபி, மதுரா மசூதி விவகாரம் நீதிமன்றத்தில் விரைவாக விசாரிக்கப்பட்டு வருகிறது. இதில், `ஞானவாபி மசூதி என்பது காசி விஸ்வநாதர் கோயிலின் ஒருபகுதி இடிக்கப்பட்டுக் கட்டப்பட்டது. அதேபோல், அயோத்தி ராம் ஜென்ம பூமி போல, மதுரா கிருஷ்ண ஜென்ம பூமி’ என இந்து அமைப்பினர் தங்களது வாதத்தை முன்வைக்கின்றனர். இத்தகைய சூழலில்தான், ஞானவாபி மசூதியில் இந்துக்கள் வழிபடலாம் என வாரணாசி நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டது.

ஞானவாபி மசூதி

உடனடியாக, இஸ்லாமியர்கள் இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் முறையிட்டனர். இன்னொருபக்கம், இந்துக்கள் பூஜையும் செய்தனர். இவ்வாறிருக்க, ராமர் கோயில் நிர்வாகி கோவிந்த் தேவ் கிரி மகராஜ் நேற்று முன்தினம், ஞானவாபியும், மதுராவும் அமைதியான முறையில் கிடைத்துவிட்டால் அனைத்தையும் மறந்துவிடுவோம் என்றும், அவை ஆக்கிரமிப்பாளர்கள் நடத்திய தாக்குதல்களின் வடு என்றும் கூறியது பேசுபொருளாகியிருந்தது.

இந்த நிலையில், அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் தலைவரும், மக்களவை எம்.பி-யுமான ஒவைசி, டிசம்பர் 6-ஐ அவர்கள் மீண்டும் நிகழ்த்த விரும்பினால் என்ன நடக்கிறதென்று பார்ப்போம் எனத் தெரிவித்திருக்கிறார்.

இந்தியா டுடேவுக்கு அளித்த சிறப்பு பேட்டியில், ஞானவாபி மசூதி விவகாரம் குறித்து பேசிய ஒவைசி, “நாங்கள் எந்த மசூதியையும் கொடுக்கப் போவதில்லை. நாங்கள் நீதிமன்றங்களில் போராடுவோம். அதேசமயம், டிசம்பர் 6-ஐ (பாபர் மசூதி இடிப்பு மற்றும் கலவரம்) அவர்கள் மீண்டும் நிகழ்த்த விரும்பினால், என்ன நடக்கிறது என்று பார்ப்போம். ஒரு முறை நாங்கள் ஏமாற்றப்பட்டோம். எனவே, மீண்டும் நாங்கள் ஏமாற மாட்டோம்.

ஒவைசி

மேலும், நான் திட்டவட்டமாகச் சொல்கிறேன், இந்த ஞானவாபி வழக்கு முடிவடையாது… இருந்தாலும், சட்டரீதியாக நாங்கள் எதிர்த்துப் போராடுவோம். எங்களிடம் இருக்கும் ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்போம். ஞானவாபியில் நாங்கள் தொழுகை செய்துகொண்டு இருக்கிறோம். பாபர் மசூதி விவகாரத்தில், இஸ்லாமியர்கள் அங்கு தொழுகை செய்யவில்லை என்பதுதான் வாதமாக இருந்தது. அப்படியென்றால், 1993 முதல் ஞானவாபியில் எந்த பூஜையும் நடைபெறவில்லை” என்று கூறினார்.

மோடி, அமித் ஷா

மேலும், ஞானவாபி மசூதி அடியில் இந்து மதத்துக்கான கட்டமைப்புகள் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறுவதற்கு, “நாளைக்கே குடியரசுத் தலைவர் மாளிகையைத் தோண்டத் தொடங்கினால், நாங்கள் ஏதாவது ஒன்றைக் கண்டுபிடிப்போம். அந்த இடத்தில் நூற்றாண்டுகளாக நாங்கள் தொழுகை நடத்தி வருகிறோம்” என்று கூறிய ஒவைசி, “எங்களைப் (இஸ்லாமியர்கள்) பொறுத்தவரை பிரதமர் மோடி மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை. ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்துக்காக மட்டுமே பிரதமர் தனது அரசியலமைப்பு கடமைகளைச் செய்துவருகிறார்” என்று குற்றம்சாட்டினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

from Tamilnadu News https://ift.tt/g6xepfD