புதுக்கோட்டை மாலையீடு அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஓ.பி.எஸ் அணி சார்பில், அ.தி.மு.க தொண்டர்களின் உரிமை மீட்புக் குழு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஓ.பி.எஸ் சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், “அ.தி.மு.க தொண்டர்களின் இயக்கம். அதனால்தான் பொதுச்செயலாளரை தேர்தல் மூலம் தேர்ந்தெடுப்பதை எம்.ஜி.ஆர் கொண்டுவந்தார். அதை திருத்தம் செய்யவோ, மாறுதல் செய்யவோ கூடாது என்று எம்.ஜி.ஆர் கூறினார். ஆனால், தமிழகத்தை ஆட்சி செய்த எடப்பாடி பழனிசாமி துரோகம் செய்து, அதை காலில் போட்டு மிதித்து, ரத்து செய்துள்ளார். தற்போது கோடிகளைக் குவித்து வைத்துள்ள மிராசுதாரர்கள், கோடீஸ்வரர்கள்தான் பொதுச்செயலாளர் பதவிக்கு வர முடியும் என்ற நிலை உள்ளது. இந்த நிலையை ஏற்படுத்திய எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளர் பதவியில் நீடிக்க விடலாமா… அதற்காகத்தான் தற்போது தர்மயுத்தம் தொடங்கி அனைத்து மாவட்டங்களிலும் தொண்டர்களின் உரிமை மீட்புக் குழு கூட்டம் நடத்தி வருகிறோம். எடப்பாடி பழனிசாமி மறைமுகமான சதி வேலை செய்தார். முதல் தர்மயுத்தம் தொடங்கியபோது தொண்டர்களின் விருப்பப்படி நிபந்தனையின்றி இணைந்தோம். ஆட்சியை எடப்பாடி பழனிசாமியும், கட்சியை நானும் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார்கள். பின்னர், கட்சி விவகாரத்தில் இருவரும் கையொப்பம் இட வேண்டும் என்று குண்டைத் தூக்கிப் போட்டார்கள்.

மேடையில் பேசும் ஓ.பி.எஸ்

கட்சி பிளவுபடக் கூடாது என்பதற்காக அதையும் ஏற்றுக்கொண்டேன். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் முடிந்த சில காலத்திலேயே சமயம் பார்த்த எடப்பாடி பழனிசாமி, கூவத்தூரில் செய்ததுபோல் இங்குள்ளவர்களை தூக்கி, ஒற்றைத் தலைமை வேண்டும் என்று பேச வைத்தார். பின்னர், பொதுக்குழுவைக் கூட்டியதாகக் கூறி ரௌடிகளையும், கேடிகளையும் வைத்துக் கொண்டு, கூட்டத்தை நடத்தினார் பழனிசாமி. அந்தக் கூட்டத்தில் பழனிசாமியின் பல தடைகளைத் தாண்டிதான் நான் கலந்துகொண்டேன். அதில், இதுவரை எந்த அ.தி.மு.க பொதுக்குழுவிலும் நடைபெறாத வகையில் தண்ணீர் பாட்டில்கள் எல்லாம் வீசி அவமரியாதை செய்தார்கள். பின்னர், இரண்டாவது பொதுக்குழுவில் அ.தி.மு.க பொதுச்செயலாளராக ஜெயலலிதா வகித்த பதவியை ரத்து செய்ய வேண்டும் என்று அறிவித்தார். அந்தப் பதவியை ரத்து செய்ய பழனிசாமி யார்… எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்று 8 தேர்தல்களில் தோல்வியைக் கண்டுள்ளார். தான் மட்டுமே தேர்தலில் வெற்றியடைய வேண்டும் என்று நினைத்து தவறான கொள்கை முடிவை எடுத்து, தான் மட்டுமே முதலமைச்சராக வரவேண்டும் என்று எண்ணினார்.

நான், ‘வேண்டாம். வெற்றியடைந்தவுடன் பார்த்துக் கொள்வோம்’ என்றேன். ஆனால், அதைக் கேட்காததால் அவரையே முதலமைச்சர் வேட்பாளர் என்று அறிவித்து, அந்தப் பாவத்தை நான்தான் செய்தேன். சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வியடைந்து ஆளுங்கட்சியாக இருந்த அ.தி.மு.க எதிர்க்கட்சியாக வர ஒரே காரணம் எடப்பாடி பழனிசாமி என்ற தனிமனிதன்தான். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் படுதோல்வி அடைய காரணம், பழனிசாமி தான். தொடர்ந்து 9 தேர்தல்களில் தோல்வியடைந்த எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு சதவிகிதம்கூட மக்களிடம் ஆதரவு இல்லை. கூட்டணி சேர்வதற்கு எந்தக் கட்சியும் தயாராக இல்லை. அ.தி.மு.க-வோடு போட்டிப் போட்டு, கூட்டணி பேசிய காலம் போய்… தற்போது கூட்டணி சேர்வதற்கு ஆளில்லை. காலை முதல் மாலை வரை காவல் காத்துக் கொண்டு உட்கார்ந்துள்ளனர். வெளியே சென்று பார்த்தால் கூட்டணிக்கு வருவதற்கு கட்சித் தலைவர்கள் யாரும் வரவில்லை. ஐஸ் விற்கிறவர்கள்தான் இருக்கிறார்கள். அந்த அளவிற்கு அ.தி.மு.க கட்சியை பாழ்படுத்திவிட்டார். ஆனால், தொண்டர்கள் விட மாட்டார்கள். தொண்டர்களுக்கும், இயக்கத்திற்கும் துரோகம் செய்தால் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆன்மாக்கள் சும்மாவிடாது.

நிகழ்ச்சியில் ஓ.பி.எஸ்

கட்சிக் கொடியை, வேட்டியைப் பயன்படுத்தக் கூடாது, பேனர் வைக்கக் கூடாது என்று கூறுகிறார்கள். ஆனால், நாங்கள் அ.தி.மு.க தொண்டர்கள். எங்களிடம் ஓடுவது அ.தி.மு.க ரத்தம். அந்த ரத்தத்தை உறிஞ்சிவிட்டு வேறு ரத்தம் பாய்ச்ச முடியாது. அதனால், மீண்டும் தொண்டர்கள்தான் எல்லாம் என்ற நிலை வரும். பழனிசாமி பொதுச்செயலாளர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டும். இல்லை என்றால் தொண்டர்கள் அடித்து விரட்டுவார்கள். கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில், ‘குறற்வாளிகள்மீது 3 மாதங்களில் நடவடிக்கை எடுப்பேன்’ என்று கூறி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்து 36 மாதங்களாகியும், நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால், அனைவரிடமும் சந்தேகம் வருகிறது. ஒரு படத்தில், ‘சாமி எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்’ என்று சொல்வதைப்போல வேறு எங்கும் இல்லாத வகையில், ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் கூட்டணி வைத்துள்ளார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கு முதலமைச்சர்தான் பதில் கூற வேண்டும்” என்றார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பி.எஸ், “எடப்பாடி பழனிசாமியை, தொண்டர்கள் விரட்டியடிப்பார்கள். கூட்டணிப் பேச்சுவார்த்தையை, பத்திரிகையாளர்களிடம் சொல்லிவிட்டுத்தான் நடத்துவோம். தலைசிறந்த ஆட்சியை நடத்திக் காட்டிய பெருமை, பிரதமர் மோடியை சாரும். அதற்காகத்தான் 200 வளர்ந்த நாடுகள் மோடியின் நிர்வாகத் திறமையைப் பாராட்டுகின்றன. தமிழ்நாட்டிலேயே, இந்தியாவிலேயே சிறுபான்மை மக்களுக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை. அசம்பாவிதங்கள், கொடுமைகள் நடக்கவில்லை. உத்தரப்பிரதேசத்தில்கூட சிறுபான்மையின மக்கள் நம்பிக்கை வைத்து அவர்களை வெற்றியடைய வைத்ததுதான் வரலாறு. நாடாளுமன்றத் தேர்தலை பொறுத்தவரை இந்திய நாட்டை யார் ஆள வேண்டும் என்பதுதான், அதன் முடிவாக இருக்கும். இந்திய அளவில் தேசிய கட்சியாக தனிப் பெரும்பான்மையுடன் வரக்கூடிய நிலைமை பா.ஜ.க-வுக்கு மட்டுமே உள்ளது. அதனால், நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய கட்சிதான் தலைமை வகிக்கும். எனவே, பா.ஜ.க தலைமையிலேயே நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திப்போம். சட்டமன்றத் தேர்தலில்தான் மாநில கட்சித் தலைமை வகிக்கும். அதன்படிதான் இந்த தேர்தலைச் சந்திக்க உள்ளோம். பொதுவாக, தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் அங்கம் வகிக்கின்றோம். இரண்டு தொகுதிகளில் டி.டி.வி.தினகரன் போட்டியிடுவதாக கேட்டுள்ளதாகச் சொல்கிறார்கள்.

செய்தியாளர்களை சந்தித்த ஓ.பி.எஸ்

ஆனால், அது ஆதாரபூர்வமாக உண்மையா என்று எனக்கு தெரியவில்லை. அண்ணா நினைவு தினத்தன்று சசிகலாவை சந்தித்தது மரியாதை நிமித்தமாகத்தான். அதில் எந்த ஒரு அரசியலும் பேசவில்லை. இரட்டை இலை சின்னம் கிடைக்காது என்ற நிலை வரும்போது, அந்த சூழலில் எந்த சின்னத்தில் நிற்பது என்று பார்த்துக் கொள்ளலாம். பத்தாண்டுக்காலம் சிறப்பாக ஆட்சி செய்ததால் மோடிதான் ஆட்சிக்கு வர வேண்டும் என்று அனைவரும் எண்ணுகின்றனர். மோடியா, லேடியா என்று பத்தாண்டுகளுக்கு முன்பு ஜெயலலிதா கூறியதை தற்போது பேச முடியுமா… ஓ.பி.எஸ், டி.டி.வி.தினகரன், சசிகலா ஒன்றிணைய வேண்டும் என்று அ.தி.மு.க தொண்டர்கள் விரும்புகின்றனர். கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் நடந்தபோது தர்மயுத்தம் நடத்திக் கொண்டிருந்தோம்.

அதற்காக, அப்போது கண்டன அறிக்கையும் விட்டிருந்தோம். அப்போது, எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்ததால், அப்போது அவரை உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் உரிமைகளை மீட்கின்ற குழுவாக எங்கள் குழு வெற்றி பெறும். பொதுமக்கள் பா.ஜ.க-வுக்குத்தான் வாக்களிப்பார்கள். 5 இடங்களா, அல்லது 10 இடங்களா, 30 இடங்களா என்று செய்தியாளர்களிடம் சொல்லிவிட்டுத்தான் கேட்போம். எதிர்க்கட்சித் தலைவர் பதவி மட்டுமே சட்டமன்ற விதிகளின்படி உள்ளது. எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி என்பது விதியின் படி கிடையாது.

செய்தியாளர்களை சந்தித்த ஓ.பி.எஸ்

அதனால் தற்பொழுது நான் அந்தப் பதவியிலும் இல்லை. சட்டமன்றத்தில் எனக்கு தரப்பட்டுள்ள இருக்கை, முன்னாள் முதலமைச்சர் என்ற அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க வேட்டியைக் கட்ட முடியவில்லை என்ற மன வருத்தம் உள்ளதுதான். 45 ஆண்டுகள் இந்த இயக்கத்தில் அடிப்படை உறுப்பினராக இருந்து வந்துள்ளேன். விசுவாசத்திற்கு எந்த நிலையில் இருந்து ஒரு தொண்டன் பாடுபட வேண்டுமோ அந்த நிலையில் இருந்துதான் கட்சிக்காகப் பாடுபட்டேன். தலைவர் என்ற நிலையில் இல்லை. தொண்டன் என்ற நிலையிலேயே இருந்தேன். அனைத்து பதவிகளும் ஜெயலலிதா பார்த்து கொடுத்ததுதான். நானாக குறுக்கு வழியில் சென்று எந்த பதவியையும் பெறவில்லை. முதல் தர்மயுத்தம் நடத்தினேன்தான். ஆனால் இன்று இருக்கக்கூடிய சூழல் யாரை எதிர்த்து தர்மயுத்தம் நடத்தினோமோ, அவர்கள் அனைவரும் மனம் விட்டு அ.தி.மு.க-தான் முக்கியம் என்ற நிலைப்பாட்டிற்கு வந்துள்ளோம். நாடாளுமன்ற தேர்தலில் உறுதியாக இரட்டை இலை சின்னத்தில் தான் நிற்போம்” என்றார்.

from Tamilnadu News https://ift.tt/1Z2Y54b