தி.மு.க-வில் தற்போது அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி, கடந்த அ.தி.மு.க ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது போக்குவரத்துத்துறையில் வேலைவாங்கித் தருவதாகக் கூறி பணமோசடி செய்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அமலாக்கத்துறை அவர் மீதான விசாரணையைத் துரிதப்படுத்தியிருக்கிறது. இதில் நேற்று முன்தினம் அமலாக்கத்துறை அவருடன் விசாரணை மேற்கொண்டிருந்தபோது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக, அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மேலும், செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள்.

இவையெல்லாம் ஒருபக்கமிருக்க, தி.மு.க-வும், அதன் கூட்டணிக் கட்சிகளும் இது பா.ஜ.க-வின் பழிவாங்கல் அரசியல் எனச் சாடிவருகின்றன. முதல்வர் ஸ்டாலின்கூட பா.ஜ.க-வை விமர்சித்து, எச்சரித்து வீடியோ வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், `அ.தி.மு.க-விலிருந்த செந்தில் பாலாஜி தி.மு.க-வில் சேர்ந்ததும் புனிதராகிவிட்டாரா?’ எனக் கேள்வியெழுப்பி, `பிரதமர் மோடி ஆட்சியில் ஊழல்வாதிகள் ஒருபோதும் தப்பிக்க முடியாது’ என அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
அந்த அறிக்கையில், “2011 முதல் 2015 வரை அ.தி.மு.க ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தபோது, ஓட்டுநர், நடத்துனர் உள்ளிட்ட பணி நியமனங்களில் முறைகேடுகள் நடந்ததாக, அப்போது எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க குற்றம்சாட்டியது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி இந்த வழக்கை விசாரித்த அமலாக்கத்துறை, அமைச்சர் செந்தில் பாலாஜியைக் கைதுசெய்திருக்கிறது. இதே குற்றச்சாட்டுக்காக செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.
மத்தியில் வெளிப்படையான, நேர்மையான நிர்வாகத்தை நடத்திவரும் பா.ஜ.க அரசு, சட்டத்தின்படியே அனைத்தையும் செய்துவருகிறது. அதன்படிதான், அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்திருக்கிறது. ஆனால், இதில் பழிவாங்கும் நடவடிக்கை எனப் பழிசுமத்தி, ஊழல் ஒழிப்பு நடவடிக்கையைத் திசைதிருப்பும் முயற்சியில் தி.மு.க., அதன் கூட்டணிக் கட்சிகள் ஈடுபட்டிருக்கின்றன. இது கடும் கண்டனத்துக்குரியது. அ.தி.மு.க-வில் இருந்தபோது ஊழல்வாதியாக இருந்த செந்தில் பாலாஜி, தி.மு.க-வில் சேர்ந்து அமைச்சரானதும் புனிதர் ஆகிவிட்டாரா?

தி.மு.க-வின் முதல்வர் குடும்பத்தினருக்கு நெருக்கமானவர் என்பதால், செந்தில் பாலாஜி குற்றமற்றவராகி விடுவாரா… செந்தில் பாலாஜி மீது தவறில்லையென்றால் அதை நீதிமன்றங்கள் மூலம் நிரூபிக்க அவருக்கு வாய்ப்பிருக்கிறது. அதைவிடுத்து, நாங்கள் என்ன வேண்டுமானாலும் அட்டூழியம் செய்வோம். நடவடிக்கை எடுக்கக் கூடாது. அப்படி நடவடிக்கை எடுத்தாலும் தடுப்போம் என்றால் அதை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு அனுமதிக்காது. ஊழல்வாதிகள் ஒருபோதும் தப்பிக்க முடியாது. மக்கள் அனைத்தையும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களை ஏமாற்ற முடியாது என்பதை தி.மு.க., அதன் கூட்டணிக் கட்சிகள் உணர வேண்டும்” என்று வானதி சீனிவாசன் கூறியிருக்கிறார்.
from Tamilnadu News https://ift.tt/ZDEHn5g
