நாகப்பட்டினம் மாவட்டம், கீழையூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட இறையான்குடி கிராமத்தில், அடிப்படை வசதிகளைச் செய்து தரக் கோரி பொதுமக்களுடன் இணைந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திடீர் சாலைமறியல் போராட்டம் நடத்தினர். அப்போது தகவலறிந்து பேச்சுவார்த்தைக்காக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார் கீழையூர் வட்டார வளர்ச்சி அலுவலர் வெற்றிச்செல்வன்.

பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய அவரிடம், பள்ளிக்கூடத் தெருவைச் சேர்ந்த லட்சுமி என்ற பெண்மணி தன்னுடைய குறைகளைக் கொஞ்சம் கறாராகச் சொல்லி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
“எனக்கு அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டி, கீழையூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்குப் பலமுறை நடையாக நடந்தேன். ஆனால், எனக்கு யாரும் எதுவும் செய்து கொடுக்கவில்லை. ஒரு படிக்காத பெண்ணாக இருப்பதால்தான், என்னை மிரட்டினீர்கள் அல்லவா… நான் ஆணாக இருந்தால் சல்யூட் அடித்திருப்பீர்கள்தானே” என ஆவேசமாகப் பேசினார்.
தன்னிடம் வாதிட்ட பெண்ணைக் கண்ட வட்டார வளர்ச்சி அலுவலர் வெற்றிச்செல்வன், அமைதியான முறையில் அந்தப் பெண்ணுக்கு சல்யூட் அடித்துவிட்டு, `இப்போது சல்யூட் வைத்துவிட்டேன். சிறிது நேரம் அமைதியாக இருங்கள், பொதுப் பிரச்னை குறித்துப் பேசுவோம்’ என்று கிராமத்துப் பிரச்னை குறித்து விசாரித்தார்.

அப்போதும் அந்தப் பெண், “ஏழை மக்களைக் கொஞ்சம் பாருங்கள், அதற்காகத்தான் நீங்கள் பணியில் இருக்கிறீர்கள். இறையான்குடி ஊராட்சி சம்பந்தமான அனைத்து ஊழல்களையும் நான் விசாரித்து வைத்திருக்கிறேன். எங்கு கொண்டுசென்று கொடுத்து பிரபலமாக வேண்டும் என்பது எனக்குத் தெரியும். அங்கு சென்று நான் பிரபலமாகி விடுவேன்” என எச்சரித்த பெண்ணை அனைவரும் வியப்போடு பார்த்தனர்.
ஒரு வழியாக கிராம மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து அந்தப் பெண்ணைச் சமாதானம் செய்தனர். ஒரு கிராமத்துப் பெண், வட்டார வளர்ச்சி அலுவலரை வாக்குவாதம் செய்து திணறச் செய்த வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது.
from Tamilnadu News https://ift.tt/x69qLfm
