முதலீடுகளைக் கொண்டுவரவும், முக்கியத் துறைகளில் இரு தரப்பு ஒத்துழைப்புப் பெறவும் வெளிநாடுகளுக்குச் செல்வதை கேரளா முதல்வர் பினராயி விஜயன் வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அந்த வகையில், தற்போது அவர் அமெரிக்காவுக்கும் கியூபாவுக்கும் பயணம் மேற்கொண்டிருக்கிறார். இரு நாடுகளுக்கும் எட்டு நாள் பயணமாக சென்றிருக்கும் பினராயி விஜயன் தலைமையிலான குழுவில் முக்கிய அமைச்சர்களும், உயர் அதிகாரிகளும் இடம்பெற்றிருக்கிறார்கள்.
கேரளாவிலிருந்து கடந்த வாரம் அமெரிக்காவுக்குப் புறப்பட்ட பினராயி விஜயன் தலைமையிலான குழுவில், மாநில நிதியமைச்சர் கே.என்.பாலகோபால், சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், மாநில திட்டக்குழு துணைத் தலைவர் வி.கே.ராமச்சந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ், தலைமைச்செயலாளர் வி.பி.ஜாய் உள்ளிட்டோர் இடம்பெற்றிருக்கின்றனர்.
அமெரிக்கா சென்ற பினராயி விஜயன் தலைமையிலான குழுவினர், வாஷிங்டனில் உலக வங்கி அதிகாரிகளைச் சந்தித்தனர். அங்கு, அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் சந்துவை பினராயி விஜயன் சந்தித்தார். அது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘முதலீடுகள் குறித்தும், கேரளாவின் முன்னேற்றத்துக்கான கூட்டு செயல்பாடுகள் குறித்து விவாதித்தோம். சுற்றுலா, சுகாதாரம், மருந்து, விண்வெளி போன்ற துறைகளில் இருக்கக்கூடிய வாய்ப்புகள் குறித்தும் விவாதித்தோம்’ என்று பினராயி விஜயன் கூறியிருக்கிறார்.
பினராயி விஜயன் தலைமையிலான குழுவினர், வாஷிங்டனிலிருந்து ஜூன் 14-ம் தேதி கியூபாவுக்கு புறப்பட்டுச் சென்றனர். அவர்களை, ஹவானாவிலுள்ள ஜோஸ் மாட்ரி சர்வதேச விமான நிலையத்தில் கியூபாவுக்கான இந்தியத் தூதர் ஜானகிராமன் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனர்.
ஹவானாவில் இரு தரப்பினரும் பல்வேறு விவாதங்களில் ஈடுபட்டனர். ‘பயோ கியூபா ஃபார்மா’வுடன் இணைந்து கேரளாவில் தடுப்பூசி உற்பத்தி ஆலை ஒன்றை தொடங்குவது குறித்து கேரளா பிரதிநிதிகள் கியூபா அதிகாரிகளிடம் ஆர்வம் தெரிவித்தனர். இது குறித்து ஆலோசிப்பதற்காக இரு தரப்பு அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்படவிருக்கிறது. பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிப்பதற்காக கியூபாவிலிருந்து பிரதிநிதிகள் குழு கேரளாவுக்கு வருகைதர வேண்டும் என்கிற வேண்டுகோளையும் கேரளா பிரதிநிதிகள் முன்வைத்தனர்.
கியூபா தேசிய விளையாட்டு நிறுவத்தின் அதிகாரிகளை கியூபா பிரதிநிதிகள் சந்தித்தனர். அப்போது, வாலிபால், ஜூடோ, தடகளம் உள்ளிட்டவற்றில் விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கு தங்கள் நாட்டு பயிற்சியாளர்களை அனுப்பவும் கியூபா சம்மதம் தெரிவித்தது. மேலும், கேரளா விளையாட்டு வீரர்களை பயிற்சிக்காக கியூபாவுக்கு அனுப்பவும் கேரளா தரப்பினர் ஆர்வம் தெரிவித்தனர். காணொளி வாயிலாக செஸ் பயிற்சி அளிப்பது பற்றியும் இரு தரப்பினரும் ஆலோசித்தனர்.
கியூபா ஜனாதிபதி மிகுவெல் டயஸ் கெனலை பினராயி விஜயன் சந்தித்தார். அப்போது, கியூபாவும் கேரளாவும் பல்வேறு நடவடிக்கைகளில் கூட்டாக செயல்படுவது பற்றி இரு தலைவர்களும் விவாதித்தனர். சுகாதாரம், விளையாட்டு, உயிரிதொழில்நுட்பம் ஆகியவற்றில் கேரளாவுக்கு கியூபா ஒத்துழைப்பை நல்கும் என்று பினராயி விஜயனிடம் கியூபா ஜனாதிபதி உறுதியளித்தார்.
இரண்டு கம்யூனிஸ்ட் தலைவர்களின் சந்திப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பாக்கப்படுகிறது. கியூபா ஜனாதிபதியாக இரண்டாவது முறையாக தேர்வுசெய்யப்பட்டதற்காக மிகுவெல் டயஸ் கெனலுக்கு வாழ்த்து தெரிவித்த பினராயி விஜயன், கியூபாவின் புகழ்பெற்ற தலைவர்கள் சேகுவேரா, பிடல் காஸ்ட்ரோ ஆகியோர் மீதான கேரளாவின் அன்பு குறித்து எடுத்துரைத்திருக்கிறார். சில மாதங்களுக்கு முன்புதான், புரட்சியாளர் சேகுவேராவின் மகள் கேரளாவுக்கு வந்துசென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
‘அடுத்த முறை இந்தியாவுக்கு வரும்போது, கட்டாயம் கேரளாவுக்கு வருகிறேன்’ என்று பினராயி விஜயனிடம் கியூபா ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார்.
from Tamilnadu News https://ift.tt/EqSRyiO
