அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் இருக்கும் 2 இலாகாக்களுமே மிக முக்கியமானவை. அதில் அமைச்சர் முத்துசாமியிடம் மதுவிலக்கு துறையும், அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் மின்சாரத்துறையும் கூடுதலாக வழங்கப்பட ஆளுநருக்கு பரிந்துரை அனுப்பப்பட்டது. இரண்டுமே சர்ச்சைகளும், நெருக்கடிகளும் நிறைந்த துறை. செந்தில் பாலாஜியும் அத்தகைய சர்ச்சைகளுக்கும், நெருக்கடிகளுக்கும் தப்பவில்லை.
எனவே அமைச்சரவை ரீதியாக செந்தில் பாலாஜி இடத்தை மற்றவர்கள் நிரப்புவார்களா இல்லையா என்பதை, செயல்பாடுகளைப் பொறுத்தே மதிப்பிட இயலும். ஆனால் கட்சி ரீதியாக செந்தில் பாலாஜி இடத்தை வேறொருவர் நிரப்புவது என்பது திமுகவுக்கு மிகுந்த சவாலான ஒன்றுதான் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
இதுதொடர்பாக திமுக உடன்பிறப்புகள் சிலரிடம் விசாரித்தோம். “எம்ஜிஆர் காலத்தில் இருந்தே கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டையாகவே கருதப்பட்டு வந்தது. கடந்த சட்டமன்ற தேர்தலில் கூட அதிமுகவுக்கு அதிகப்படியான இடங்களில் வெற்றி கிடைத்தது கொங்கு மண்டலத்தில்தான். ஆனால் கரூர் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் திமுகவை வெற்றி பெறச் செய்ததில் செந்தில் பாலாஜிக்கு முக்கிய பங்கு உள்ளது. கோவையின் பொறுப்பு அமைச்சராக செந்தில் பாலாஜி நியமிக்கப்பட்ட பிறகு, அம்மாவட்டத்திலும் திமுக-வின் கொடி உயரப் பறக்கத் தொடங்கியிருக்கிறது. குறிப்பாக கோவையில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஒரு தொகுதியில் கூட திமுக வெற்றி பெறவில்லை. ஆனால் உள்ளாட்சித் தேர்தலில் திமுக-தான் பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு செந்தில் பாலாஜியின் உழைப்பும் மிக முக்கியமானது.
அதேபோல ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலிலும் செந்தில் பாலாஜியின் களப்பணிகள் வெகுவாகப் பேசப்பட்டன. கோவையில் செந்தில் பாலாஜி மேற்கொள்ளும் யுத்திகளால், அதிமுக மட்டுமின்றி பாஜகவுக்கும் லேசான அச்சம் இருக்கத்தான் செய்தது. ஏனெனில் தமிழ்நாட்டில் கன்னியாகுமரிக்கு அடுத்து பாஜக-வுக்கு கணிசமான வாக்கு வங்கி இருக்கும் ஒரே மாவட்டம் கோவைதான்.

அதுமட்டுமல்ல சிறிய பொதுக்கூட்டம் என்றாலே மாநாடு போல நடத்துவதிலும் கைதேர்ந்தவர் செந்தில் பாலாஜி. எனவே நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள செந்தில்பாலாஜியின் இருப்பு அவசியமானது. பாஜக-வின் 9 ஆண்டுகால ஆட்சியில் அடிப்படை முகாந்திரமே இல்லாமல்தான் அமலாக்கத்துறையும், சிபிஐ-யும் வழக்குப்பதிந்து கைது செய்திருக்கிறது. பொய் வழக்குகளை வைத்து அதிகபட்சம் 6 மாதங்கள் கூட அவர்களால் சிறையில் வைத்திருக்க முடியாது. செந்தில் பாலாஜி இவ்வழக்கில் இருந்து விரைவில் மீண்டுவந்து வழக்கம்போல, தனது பணியைச் செய்வார். 2-ஜி வழக்கையே பார்த்தவர்கள் நாங்கள்” என்றனர்.
இதுதொடர்பாக மூத்த பத்திரிகையாளர் பிரியனிடம் பேசினோம். “கொங்கு மண்டலத்தில் காலப்போக்கில் திமுக செல்வாக்கை இழந்துகொண்டே வந்தது. காரணம், திமுகவுக்கு சொல்லிக்கொள்ளும்படி ஒரு தலைவர் அங்கே இல்லை. கோவ ராமநாதன், தண்டபாணி, கண்ணப்பன் போன்ற தலைவர்கள் முன்பு இருந்தார்கள். அவர்களுக்கு பிறகு யாரும் இல்லாததால், அதிமுக-வின் செல்வாக்கு அதிகரித்தது. 2021 தேர்தலில் கூட கோவையில் திமுக வெற்றி பெற முடியவில்லை. அப்படிப்பட்ட கோவையில் திமுக-வுக்கு நிரந்தரமான வாக்கு வங்கியை உருவாக்கவே, செந்தில் பாலாஜியை பொறுப்பு அமைச்சராக நியமித்தார்கள். கோவை மட்டுமின்றி, சுற்றியுள்ள மாவட்டங்களிலும் சேர்த்து திமுகவின் கட்டுமானத்தை வலுப்படுத்தியவர் செந்தில் பாலாஜி.

அதிமுக உள்ளிட்ட மாற்று கட்சிகளை சேர்ந்த பலர், செந்தில் பாலாஜியால் திமுக-வில் இணைந்தனர். இப்படியே விடக்கூடாது என அதிமுக, பாஜகவுக்கு பயம் வந்துவிட்டது. அதுவும் இந்த கைதுக்கு ஒரு காரணம். இப்போது செந்தில் பாலாஜி அளவுக்கு பலமான நிர்வாகிகள் அங்கு இல்லை. இது நிச்சயம் திமுகவுக்கு தொய்வை உண்டாக்கும். வேகமான வளர்ச்சி நிறுத்தப்பட்டிருக்கிறது. செந்தில் பாலாஜி எப்போது வெளியே வருவார் எனத் தெரியாது. கோவை மாவட்டத்துக்கு வேறொரு பொறுப்பு அமைச்சரை நியமிக்க வேண்டிய கட்டாயம் திமுக தலைமைக்கு ஏற்பட்டிருக்கிறது. கோவையின் பொறுப்பு அமைச்சராக உதயநிதியை நியமிப்பது பயன்தரக்கூடும்.” என்றார்.
from Tamilnadu News https://ift.tt/AJ6z9vU
