ஆங்கிலேயர்களால் 1928-ல் மதுரை `டு’ போடி ரயில் தடம் அமைக்கப்பட்டது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்திலுள்ள விவசாயபூமியான தேனி மாவட்டத்தில் காய்கறிகள், பழங்கள், ஏலக்காய், இலவம் பஞ்சு உள்ளிட்டவை ரயிலில் கொண்டு செல்லப்பட்டு வியாபாரம் செய்யப்பட்டிருக்கின்றன.

இந்த நிலையில், இந்த ரயில் தடம் 2011-ல் அகல ரயில் பாதையாக மாற்றுவதற்காக, சேவை நிறுத்தப்பட்டது. முதலில் 2015-ம் ஆண்டு பணிகள் முடிக்கப்பட்டு, ரயில் சேவை மீண்டும் தொடங்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது. ஆனால் போதிய நிதி ஒதுக்கப்படாததால், ரயில் தண்டவாளப் பாதை அமைப்பதற்கான முதற்கட்டப் பணிகளையே 2015 வரை முடிக்காமல் இருந்தனர்.
இதனால் கொதிப்படைந்த தேனி விவசாயிகள், வணிகர் சங்கங்களைச் சேர்ந்தவர்கள், அரசியல் கட்சியினர் ரயில் பாதை பணியை விரைந்து முடிக்கக் கோரி, பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இதையடுத்து 2019-ம் ஆண்டு முதல் மீண்டும் ரயில் பாதை அமைக்கும் பணி சூடுபிடிக்கத் தொடங்கியது.

முதற்கட்டமாக மதுரை-உசிலம்பட்டி, இரண்டாம் கட்டமாக உசிலம்பட்டி-ஆண்டிபட்டி, மூன்றாம் கட்டமாக ஆண்டிபட்டி-தேனி எனப் படிப்படியாக பணிகள் முடிக்கப்பட்டு, 11 ஆண்டுகளுக்குப் பிறகு 2022 மே மாதம் முதல் மதுரை-தேனி இடையே ரயில் இயக்கப்பட்டு வருகிறது. நான்காம் கட்டமாக தேனி-போடி இடையே பாதை அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டு, ரயில் இன்ஜின் இயக்கிப் பார்க்கப்பட்டது. அப்போது, மதுரை-போடி ரயில் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்படும் என, ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது.
ஆனால் ரயில் சேவை தொடங்குவதில் தாமதம் நீடித்தது. இந்த நிலையில்தான், நேற்று இரவு 8:30 மணிக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தேனி எம்.பி., ரவீந்திரநாத், போடி எம்.எல்.ஏ ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் போடி `டு’ சென்னை ரயில் சேவையைத் தொடங்கிவைத்தனர்.

தமிழகத்தில் ரயில் சேவை இல்லாத மாவட்டம் என்ற நிலை தேனிக்கு இருந்தது. இந்த நிலையில், 13 ஆண்டுகளுக்குப் பிறகு கிழக்கே போன ரயில் மேற்கு வந்ததால்… தேனி மக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்திருக்கின்றனர். அதை வெளிப்படுத்தும்விதமாக நேற்று காலை முதலே போடி ரயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது. பூக்களாலும், வண்ண வண்ண பலூன்களாலும் அலங்கரிக்கப்பட்ட ரயில் பெட்டிகளை மக்கள் சுற்றிச் சுற்றிப் பார்த்து மகிழ்ந்தனர்.

போடியிலிருந்து மதுரை, திண்டுக்கல், சேலம், காட்பாடி வழியாக சென்னை சென்ட்ரல் செல்லும் இந்த விரைவு ரயில், வாரந்தோறும் ஞாயிறு, செவ்வாய், வியாழன் ஆகிய கிழமைகளில் இயக்கப்படவிருக்கிறது. முன்பதிவு செய்யாத பெட்டிகளில் பயணிக்க ரூ.210, முன்பதிவு பெட்டிகளில் பயணிக்க ரூ.390, முதல் ஏ.சி பெட்டியில் பயணிக்க ரூ.2,390, இரண்டாம் ஏ.சி பெட்டியில் பயணிக்க ரூ.1,430, மூன்றாம் ஏ.சி பெட்டியில் பயணிக்க ரூ.1,020 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ரயில் சேவை தொடக்கியுவுடனே அடுத்த ஒரு மாதத்துக்குப் பெரும்பாலான இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டதாக ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
from Tamilnadu News https://ift.tt/O9jzu8X
