தி.மு.க அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத்துறை விசாரணையை, பா.ஜ.க-வின் பழிவாங்கல் நடவடிக்கை என திமுக தரப்பிலிருந்து விமர்சனங்களும், கண்டனங்களும் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், அமலாக்கத்துறையின் இத்தகைய நடவடிக்கைக்கு பா.ஜ.க-வை விமர்சித்து, எச்சரித்து வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில்,”பா.ஜ.க-வின் பாணி. ஒரே ஸ்கிரிப்ட்டைத்தான் வேறு வேறு மாநிலங்களில் டப்பிங் செய்து வருகிறார்கள்.

ஆனால் உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், குஜராத்தில் ரெய்டு நடக்காது. ஏனென்றால், அங்கு ஆட்சியில் இருப்பது உத்தமபுத்திரன் பா.ஜ.க. ரெய்டுகளுக்குள்ளானவர்கள் பா.ஜ.க-வில் சேர்ந்த பின்னர் புனிதர்கள் ஆகிவிடுகிறார்கள். அதிமுக போல நாங்கள் யாருக்கும் அடிமை இல்லை. எங்களை மிரட்டிப் பணிய வைக்க நினைத்தால், குனிய மாட்டோம். நிமிர்ந்து நிற்போம். தி.மு.க-வை சீண்டிப் பார்க்காதீர்கள். எங்களுக்கும் எல்லா அரசியலும் தெரியும். இது மிரட்டல் அல்ல, எச்சரிக்கை” எனப் பேசியிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக முன்னாள் முதல்வரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், “செந்தில் பாலாஜி விவகாரத்தில் அ.தி.மு.க.வையும் என்னையும் முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். அமலாக்கத்துறை விசாரணையின் போது செந்தில் பாலாஜி முழு ஒத்துழைப்பு வழங்கவில்லை என சம்மந்தப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். முதல்வர் ஸ்டாலின் பேசும்போது பதற்றத்துடன் பேசுவதை பார்த்தேன்.

அமைச்சர் பி.டி.ஆர் ஆடியோ முலம் ரூ. 30 ஆயிரம் கோடி கிடைக்கப்பட்டது வெளி வந்தது. அந்தப் பணம் செந்தில் பாலாஜி மூலம் கிடைத்தது என்பது பத்திரிகை மூலம் தெரியவந்தது. இது தொடர்பாக அவர் அமலாக்கத்துறையிடம் ஏதாவது சொல்லிவிட்டால் தனக்கும், தனது ஆட்சிக்கும் பாதிப்பு என அஞ்சுகிறார். அதனால்தான் முதலமைச்சர் இவ்வளவு பதற்றமாக பேசுகிறார். இதற்கு முன்னால் கனிமொழி, ஆ.ராசா ஆகியோரின் ரெய்டுகளின்போதும், கைது செய்யப்பட்ட போதும், திகார் சிறையில் அடைக்கப்பட்டபோதும் மு.க.ஸ்டாலின் மௌனம் காத்தது ஏன்?
போலி மதுபானக் கடைகள், அதில் வந்த வருமானம் முதல்வர் குடும்பத்துக்குத் தான் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதனால் தான் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதுபோல் நாடகமாடும் செந்தில் பாலாஜியை ஓடிச் சென்று முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள் சந்தித்து ஆறுதல் கூறுகிறார்கள். 2 ஆண்டுகளில் ரூ.30,000 ஆயிரம் கோடிக்கு மேல் ஊழல் செய்துள்ளார் செந்தில் பாலாஜி. ரூ. 4000 கோடி நெடுஞ்சாலைத்துறையில் ஊழல் செய்ததாக என் மீது வழக்கு தொடுத்தார் ஆர்.எஸ்.பாரதி. என் மீதான வழக்குகளை துணிச்சலோடு எதிர்கொண்டு வருகிறேன்.

மடியில் கனமில்லை… அதனால் வழியில் பயமில்லை. ஆனால், கடந்த இரண்டு நாள்களாக நாடே தமிழ்நாட்டை பார்த்து சிரிக்கிறது. உங்களுக்கு தில் இருந்தால் இந்த வழக்கை எதிர்கொண்டு நிரபராதி என நிரூபிக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு ஸ்டாலின் செந்தில் பாலாஜி நல்லவர் என மக்களிடம் நிறுவ பார்க்கிறார். இந்த ஊழலுக்கு கூட்டணிக் கட்சிகள் துணைப்போக வேண்டாம்.
அதிமுக பா.ஜ.க-வின் அடிமை எனக் கூறினார். அதிமுக எப்போதும் யாருக்கும் அடிமையல்ல. நாங்கள் சொந்தக்காலில் நிற்கிறோம். எனவே அ.தி.மு.க-வின் தொண்டனைக் கூட உங்களால் ஒன்றும் செய்யமுடியாது. இந்த இயக்கத்தை யார் அழிக்க நினைத்தாலும், அவர்கள் தான் அழிந்துப் போவார்கள்” எனத் தெரிவித்திருக்கிறார்.
from Tamilnadu News https://ift.tt/wxGKpJc
