கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துடன் தலைமை தகவல் அதிகாரி ராஜகோபால் பதவிக்காலம் முடிந்தது. அதன்பிறகு அந்தப் பொறுப்புக்கு புதிய அதிகாரியை நியமிக்க தேடுதல் குழுவும் நியமிக்கப்பட்டது. அப்போது தலைமைச் செயலக வட்டாரங்களில் விசாரிக்கும்போது, தலைமைச் செயலாளர் இறையன்பு அந்தப் பொறுப்புக்கு வருவார் என சொல்லப்பட்டது. அதனால் கடந்த 6 மாதங்களாகப் புதிய அதிகாரி நியமிக்கப்படாமல் இருப்பதாகவும் சொல்லப்பட்டது. ஆனால், கடந்த சில வாரங்களாகப் புது தகவலாக தலைமைச் செயலாளர் பதவிக்காலம் நீடிக்க அரசு முடிவு செய்திருப்பதாக சொல்லப்பட்டது. இதனால், மற்றொரு தலைமை தகவல் அதிகாரி நியமிக்கப்படுவார் எனவும் சொல்லப்பட்டது. ஆனால் உடல்நலத்தைக் காரணம் காட்டி அதை இறையன்பு மறுத்ததாகவும் தகவல் வந்தது. இதனால் மீண்டும் அவருக்கு தலைமை தகவல் அதிகாரி பொறுப்பு வழங்கப்படும் என மீண்டும் தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

தலைமைச் செயலாளர் இறையன்பு

இந்த நிலையில், இந்தப் பதவிகளுக்கு 500-க்கும் அதிகமான விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றன. அதில் புதிய ஆணையராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஷகில் அக்தர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஷகில் அக்தர் மாநில தலைமை தகவல் ஆணையராகப் பதவியேற்றுள்ளார். அவருடன் தாமரைக் கண்ணன், பிரியகுமார், செல்வராஜ், திருமலைமுத்து ஆகியோர் மாநில தகவல் ஆணையர்களாக ஆளுநர் மாளிகையில் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

யார் இந்த ஷகில் அக்தர்?

பிகாரைச் சேர்ந்த இவர், 1989-ம் ஆண்டு தமிழகப் பிரிவு ஐ.பி.எஸ் அதிகாரியாகப் பணியில் சேர்ந்தவர். கடந்த ஆண்டு அக்டோபரில் ஓய்வு பெற்றார். இந்த நிலையில், தலைமை தகவல் ஆணையாளர் பதவிக்கு அவர் விண்ணப்பம் செய்திருந்தார். அவரின் தேர்வுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இத்துடன் காலியாகவுள்ள நான்கு தகவல் ஆணையாளர்கள் பதவியிடங்களுக்கும் ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி பி.தாமரைக்கண்ணன், ஆர்.பிரியகுமார், கே.திருமலைமுத்து, பேராசிரியர் எம்.செல்வராஜ் ஆகியோர் தகவல் ஆணையர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

ஷகில் அக்தர்

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த தாமரைக்கண்ணன், 1987-ம் ஆண்டு ஐ.பி.எஸ்., பணியில் இணைந்தார். சட்டம்-ஒழுங்கு, சென்னை காவல் துறை போக்குவரத்து, நுண்ணறிவு கூடுதல் காவல் ஆணையர் உட்பட பல்வேறு முக்கிய பொறுப்புகளில் பணியாற்றியிருக்கிறார். கடந்த ஆண்டு நவம்பர் 30-ம் தேதி ஓய்வு பெற்றார்.

மற்றொரு தகவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள, ஆர்.பிரியகுமார், வழக்குரைஞர் ஆவார். ஏற்கெனவே தகவல் ஆணையராக இருந்து வயது மூப்பு காரணமாக ஓய்வு பெற்ற ஆர்.பிரதாப்குமாரின் தம்பி தான் பிரியகுமார் .

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தகவல் ஆணையரான கே.திருமலைமுத்து, திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலுவின் தனி உதவியாளராக இருந்தவர்.

இதேபோன்று, பேராசிரியர் எம்.செல்வராஜ், சென்னையில் உள்ள குருநானக் கல்லூரியின் முதல்வராக இருந்தவர். அண்மையில் அவர் ஓய்வு பெற்றார். முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு தலைவர்களிடம் தனிப்பட்ட முறையில் அன்பைப் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆளுநருடன் புதிதாக நியமிக்கப்பட்ட தகவல் ஆணையத்தின் அதிகாரிகள்

இது நியமனங்கள் குறித்து ஆர்டிஐ செயல்பாட்டாளர்கள் சிலர், “கடந்த 5 ஆண்டுகளாக தகவல் ஆணையத்தின் செயல்பாடுகள் மிகவும் மோசமாகயிருந்தது. இந்த நிலையில் பல மனுக்கள் தேக்கமாகயிருக்கிறது. 7 மாதங்களுக்குப் பின் புதிய ஆணையர்கள் பொறுப்பேற்றுயுள்ளனர். ஆனால், காவல்துறையில் இருந்து வருபவர்கள் அரசுக்கு இணக்கமாக மட்டுமே நடந்துகொள்வார்கள். அவர் மக்களின் தேவைகளை விரைந்து முடிப்பார்களா என்னும் கேள்வி எழுகிறது. இவரின் செயல்பாடு எப்படி இருக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” என்கிறார்கள்.

from Tamilnadu News https://ift.tt/QnpJI8m