`கோடை வெயில் கொளுத்திக்கொண்டிருக்கிறது; பள்ளிகள் திறப்பு தள்ளிப்போனது’ அது போனவாரம். `வரலாறு காணாத மழை வெளுத்துவாங்கிக்கொண்டிருக்கிறது; பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது’ இது இந்தவாரம்! வங்கக் கடலில் உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்துகொண்டிருக்கிறது. குறிப்பாக, தலைநகர் சென்னையில் கடந்த 27 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஜூன் மாதத்தில் மழை அதிகமாகப் பெய்திருக்கிறது. அதிகபட்சமாக, சென்னை மீனம்பாக்கத்தில் 13 செ.மீ மழை பதிவாகியிருக்கிறது. மேலும், அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

சென்னை மழை

இந்தநிலையில், `ஓர்நாள் மழைக்கே சென்னை ஸ்தம்பித்து போய்விட்டதா? சென்னையில் மழையின் தாக்கம் என்ன? மக்கள் என்ன சொல்கிறார்கள்?’ என்பது குறித்து ஆராய கள ஆய்வுக்கு புறப்பட்டோம்.

ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி:

விட்டு விட்டுப் பெய்த மழைக்கு நடுவே, சென்னை ராயப்பேட்டையின் ஒயிட்ஸ் ரோட்டில் பாதாள சாக்கடைப் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. அங்குள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலின் முன்பக்கம் உள்ள உட்ஸ் சாலை குண்டும் குழியுமாகக் கடுமையாகப் பெயர்ந்த நிலையில் காட்சியளித்தது. அதில், அதிகப்படியான மழைநீர் தேங்கியிருந்ததால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகிக்கொண்டிருந்தனர். அதேபோல, அண்ணா சாலைக்கு செல்லும் உட்ஸ் சாலையிலும் மழைநீர் தேங்கி சாலையே தெரியாத அளவுக்கு காட்சியளித்தது.

எக்ஸ்பிரஸ் அவென்யூ மால், உட்ஸ் ரோடு

தொடர்ந்து திருவல்லிக்கேணி பாரதி சாலையில் பயணித்தோம். எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலிலிருந்து மெரினா பீச்சுக்கும் செல்லும் பாரதிசாலையின் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி நிற்பதாக குற்றம்சாட்டினார்கள் அப்பகுதி மக்கள். குறிப்பாக, “பல ஆண்டுகாலமாகவே மழை பெய்தால் பாரதி சாலையின் அம்மா உணவகம் முதல் அமீர் மஹால் வரைக்கும் 3-4 அடிக்கு மழைநீர் தேங்கி நிற்கும். தண்ணீர் வெளியேற வழியே இல்லை; கால்வாய்கள் தூர்வாரப்படாமல் உள்ளுக்குள்ளாக மண் அடைத்துநிற்கிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் கவுன்சிலர் அலுவலகமும் இங்குதான் இருக்கிறது!” என்றனர்.

உட்ஸ் சாலை

அதேபோல, அங்கிருக்கும் வாகன ஓட்டுநர்கள் சங்கத்தினர் சிலரிடம் பேசியபோது, “தேங்கும் மழைநீரால் எங்கள் வாகனங்கள் அனைத்தும் துருப்பிடித்து பிரேக் ஃபெயிலியர் ஆவதும், என்ஜின் கெட்டுப்போவதும்தான் நிகழ்கிறது!” என வேதனை தெரிவித்தனர். இதேபோல பாரதி சாலையின் ரத்னா கபே அருகிலுள்ள பூக்கடை மற்றும் பஜார் பகுதிகள், சோமு தெரு, எல்லீஸ் ரோடு எனப் பல்வேறு இடங்களில் பரவலாக மழைநீர் தேங்கியிருந்தது.

அதேபோல, திருவல்லிக்கேணி காயிதே மில்லத் பிரதான சாலையையொட்டி பார்த்தசாரதி கோவிலுக்கு செல்லும் பி.வி.நாயக் தெருவில் குப்பையும் மழைநீரும் கலந்து நீண்ட தூரத்துக்கு மழைநீர் தேங்கியிருந்தது.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலுக்கு செல்லும் பி.வி.நாயக் தெரு

புதுப்பேட்டை, சென்ட்ரல்:

கூவம் ஆற்றின் ஓரமாக செல்லும் புதுப்பேட்டை லேங்ஸ் கார்டன் சாலையின் நடுப்பகுதியிலும், முடிவடையும் ஜங்ஷன் பகுதியிலும் குளம்போல மழைநீர் தேங்கியிருந்தது. அதைத்தொடர்ந்து சென்ட்ரல் நோக்கி பயணித்தோம்.

புதுப்பேட்டை லேங்ஸ் கார்டன் சாலை

சரியாக, சென்ட்ரல் மெட்ரோ பேருந்து நிறுத்தத்திலும் மழைநீர் செல்ல வழியில்லாமல் தேங்கியிருந்தது. பேருந்துக்கு காத்திருக்கும் பயணிகள் மழைநீரில் சிரமத்துடன் நடந்துகொண்டிருந்தனர்.

சென்ட்ரல் மெட்ரோ பேருந்து நிறுத்தம்

வால் டாக்ஸ் ரோடு:

சென்னை வால் டாக்ஸ் (Wall tax road)சாலையின் இருபுறங்களிலும் தொடங்கும் பல்வேறு சிறிய தெருக்களில் மழைநீர் தேங்கிய நிலையில் இருந்தன. குறிப்பாக, பேசின் தண்ணீர் தொட்டித் தெரு (Basin Water Works Street) முழுவதும் சாலை வசதியின்றி சேறும் சகதியுமாக மழைநீர் சூழ்ந்திருந்தது. முழங்கால் அளவு சேற்றுநீரில் மோட்டார் பொருத்தப்படாத மீன்பாடி வண்டி தொழிலாளர்கள் பாரங்களை ஏற்றிக்கொண்டு கடும் சிரமத்திற்கிடையே பயணித்துக்கொண்டிருந்தனர்.

அவர்களிடம் பேசியபோது, “மழை பெய்யும்போதெல்லாம் எப்போதுமே இந்தப் பகுதியில் மட்டும் குளம்போலத் தண்ணீர் தேங்கி நிற்கும். அப்போதுமட்டும் சில அதிகாரிகள் வந்து மண்ணைத் தோண்டி, மழை வடிவதற்கு வழிசெய்வார்கள். ஆனால், நிரந்தரத் தீர்வுகாண இப்போது வரையில் எந்த முயற்சியும் எடுக்கவில்லை!” என குற்றம்சாட்டினர்.

பேசின் தண்ணீர் தொட்டித் தெரு

சென்னை வள்ளலார் நகர் பேருந்துநிலையத்திலும் மழைநீர் தேங்கியிருந்தன. பேருந்து நிலையத்துக்கு அருகிலுள்ள பழைய சிறைசாலை ரோடு மட்டுமல்லாமல் பேருந்து நிலையத்திற்குள்ளாகவும் மழைநீர் தேங்கியிருந்ததால் பொதுமக்களும் பயணிகளும் மிகுந்த சிரமத்துக்காளாகினர்.

சென்னை வள்ளலார் நகர் பேருந்துநிலையம்

அதேபோல, அரசு ஸ்டான்லி மருத்துக்கல்லூரி மருத்துவமனையின் முகப்பின் இருபுறங்களிலும் பரவலாக மழைநீர் தேங்கியிருந்தது. மருத்துவம் பார்க்க வரும் நோயாளிகளுக்கு இடையூறாக இருந்ததைக் காணமுடிந்தது.

அரசு ஸ்டான்லி மருத்துக்கல்லூரி மருத்துவமனை

பழைய வண்ணாரப்பேட்டை, ராயபுரம்:

பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் துணிக்கடைகள் வரிசைகட்டி அமைந்திருக்கும் எம்.சி. ரோடு சாலை நெடுக பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியிருந்தது. வாகனங்கள் வரும் வேகத்தில் சாலையில் தேங்கியிருக்கும் மழைநீர் இருபக்கங்களிலும் இருக்கும் துணிக்கடைகளை பதம்பார்த்துவிடுகிறது.

இதுகுறித்து துணிக்கடையில் பணியாற்றும் பெண் ஊழியர்களிடம் பேசியபோது, “மழை பெய்தால் போதும், எம்.சி. ரோடே பாழாகிவிடும். பள்ளம் இருக்கு பகுதிகளிலெல்லாம் வெள்ளம்தான்! பாதசாரிகள் கூட்டம் ஒருபக்கமென்றால், ஆட்டோ, கார்கள் போன்ற வாகனங்களும் இந்த குறுகிய சாலையில் அதிகமாகப் பயணிப்பதால் சாலையில் தேங்கியிருக்கும் மழைநீர் கடைக்குள்ளாகவும் அடித்துக்கொண்டு வருகின்றன.

பழைய வண்ணாரப்பேட்டை, எம்.சி ரோடு

இப்படித்தேங்கும் மழைநீர் இரண்டு நாட்களானாலும் முழுவதுமாக வடிவதில்லை!” என குமுறினர். அதேபோல, பழைய வண்ணாரப்பேட்டையின் ஜி.ஏ. சாலையிலும் இதேநிலைதான்!

பழைய வண்ணாரப்பேட்டை ஜி.ஏ. சாலை

ராயபுரத்தைப் பொறுத்தவரையில், சூரியநாராயண சாலையில் உள்ள அரசினர் குழந்தைகள் இல்லத்தின் எதிர்புறம் உள்ள சாலையில் மழைநீர் சேரும் சகதியுமாக தேங்கியிருந்தது. மற்ற பகுதி மக்களைப்போலவே இந்தப் பகுதி மக்களும் `மழை பெய்தால் இதுதான் நிலை!’ என கடந்துசென்றனர்.

சூரியநாராயண சாலை, ராயபுரம்

இதுதவிர, ராயபுரம் எம்.எஸ் கோவில் ரோட்டின் நடுவே திடீரென மரம் ஒன்று முறிந்து விழுந்தது. சாலையோரம் நடந்து சென்ற ஒருவர் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் தப்பினார். சிறிதுநேரம் போக்குவரத்து முற்றிலுமாகத் தடைபட்டது.

அந்தநேரம் சம்பவ இடத்துக்கு வந்த போக்குவரத்து காவலர்கள், பொதுமக்கள், பேருந்து ஓட்டுநர்கள் சிறிதும் தாமதிக்காமல் துரிதமாகச் செயல்பட்டு முறிந்துவிழுந்த மரத்தை கைகளாலே அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீர்செய்தனர்.

சாலையில் முறிந்து விழுந்த மரம், ராயபுரம்

மழைநீர் தேங்கியிருப்பதாக நாம் குறிப்பிட்ட இடங்கள் தவிர பல்வேறு இடங்களுக்கும் பயணித்தோம். கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசு மேற்கொண்ட மழைநீர் வடிகால் பணிகளால், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மழையில் பெரும்பாலும் மழைநீர் தேங்கி நிற்கவில்லை என பொதுமக்கள் தெரிவித்தனர்.

சென்னை

இருந்தபோதிலும், அதற்கு நிகரான பல இடங்களில் மழைக்காலத்தின்போது மழைநீர் தேங்கிநிற்பது வாடிக்கையாக இருந்துவருவதை கள ஆய்வின்போது தெரிந்துகொண்டோம்.

குற்றச்சாட்டும் விளக்கமும்:

இந்தநிலையில், கோவை தெற்கு தொகுதி பா.ஜ.க எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன்,“ஒரு நாள் மழைக்கே தண்ணீர் தேங்கி நிற்கும் சாலைகள், நீரில் மூழ்கிய வாகனங்கள், அஸ்தமித்த தலைநகரம். இரண்டு ஆண்டு திராவிட ஆட்சியில் வடிகால் வாரியத்தின் செயல்பாடு இது தானா? விடியல் ஆட்சி என பெருமை பேசும் முதல்வர் பதில் சொல்வாரா?” என தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

வானதி சீனிவாசன்

இந்தக் குற்றச்சாட்டு, மக்களின் புகார்கள் குறித்து எழும்பூர் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ ஐ.பரந்தாமனிடம் விளக்கம் கேட்டோம்! “வானதி சீனிவாசன் சொல்வதைப்போல சென்னை ஒன்றும் ஸ்தம்பித்து போயெல்லாம் நிற்கவில்லை. சென்னை இயல்பு நிலையில்தான் இருக்கிறது! மழை பெய்யும் பொழுது போக்குவரத்து சிக்கல் ஏற்படுவதும், சாலைகளில் மழைநீர் தேங்கி ஓடுவதும் இயற்கையானதுதான்! தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, மேற்கொள்ளப்பட்ட மழைநீர் வடிகால் பணிகளால், கடந்த ஆண்டு சென்னையில் மழைநீர் தேங்கிநின்ற 90% இடங்களில், இந்த ஆண்டு எந்த இடத்திலும் மழைநீர் தேங்கி நிற்கவில்லை! மீதமுள்ள 10% கூட மழைபெய்யும் போது சாலையில் ஓடிக்கொண்டிருக்கும் நீர்தான்! அது வடிவதற்கான இயற்கையான ஒரு நேரத்தை கொடுக்க வேண்டும்.

பரந்தாமன் எம்.எல்.ஏ

இந்த பொதுவான புரிதல் நன்கு படித்த, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ சகோதரி வானதி சீனிவாசனுக்கு நிச்சயமாகத் தெரிந்திருக்கும். இருந்தாலும் அவர் அரசியலுக்காக இப்படி பேசிக்கொண்டிருக்கிறார். எங்களின் திராவிட மாடல் ஆட்சியை குறைசொல்வதற்கு முன்பாக அவர் பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநிலங்களில் நிர்வாகமும், நீர் மேலாண்மையும் எந்த அளவுக்கு இருக்கிறது என பார்த்துவிட்டு பேசவேண்டும். மழை பூமிக்குள் விழுவதற்குள் அதை அப்சர்வ் செய்து ஆவியாக்கிவிடும் டெக்னாலஜி கடந்த பத்தாண்டு கால பா.ஜ.க ஆட்சியில் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. அப்படி ஒரு ஏதாவது ஒரு டெக்னாலஜியை, இயந்திரத்தை மோடி கண்டுபிடித்திருக்கிறார் என்றால் சொல்லுங்கள். நாங்கள் அதை முயற்சி செய்து பார்க்கிறோம்!” என விமர்சனமாகப் பதிலளித்தார்.

சென்னையின் பிற பகுதிகளில் மழை நீர் தேங்கியதா… ஸ்பாட் விசிட் ரிப்போர்ட் கீழே

from Tamilnadu News https://ift.tt/DyiPqY2