செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அ.தி.மு.க சார்பில் தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அந்த வகையில், தஞ்சாவூர் தெற்கு, வடக்கு மாவட்டங்களின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சரும், கட்சியின் செய்தித் தொடர்பாளருமான வைகைச்செல்வன் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “கன்னியாகுமரியில் தொடங்கி சென்னை வரை தமிழகத்தின் தலைநகரங்களில் ஒரே நேரத்தில் நடத்தப்படும் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், இலாகா இல்லாத அமைச்சரான செந்தில் பாலாஜிக்கு எதிராக நடத்தப்படுகிறது.

வேண்டாம் என நம்மால் கழற்றிவிடப்பட்ட செந்தில் பாலாஜி, இப்போது ஸ்டாலின் கழுத்தில் மின்னுகிறார். ஐந்து வருடங்களுக்கு முன்பு கரூருக்குச் சென்ற இதே முதலமைச்சர், `பணம் வாங்கிக் கொண்டு ஓட்டுநர், நடத்துனர்களை பணியில் அமர்த்தியிருக்கிறார் செந்தில் பாலாஜி. இவர் போன்ற ஊழல்வாதிகள் சிறையில் இருக்க வேண்டும். இவர் மட்டுமல்ல இவரின் தம்பி அசோக்கையும் சிறையில் தள்ள வேண்டும்’ என்றார்.
ஆனால் தற்போது பத்து ரூபாய் பாலாஜிக்காக வீடியோ வெளியிடுகிறார். தமிழகத்தில் 3,500 டாஸ்மாக் கடைகளில் அனுமதியில்லாமல், கலால் வரி செலுத்தாமல் பின்பக்கம் வழியாக மது விற்கின்றனர். இதில் மாதத்துக்கு 300 கோடி ரூபாயும், ஒரு வருடத்துக்கு 3,600 கோடி ரூபாயும், இரண்டு ஆண்டுகளில் 7,500 கோடி ரூபாயும் அவர்களுக்குக் கிடைத்திருக்கிறது.

அது போதாது என்று, கடை இல்லாத நேரங்களில் பின்பக்க கதவு வழியாக மது விற்ற ஒரே மாநிலம் தமிழகம்தான். இதற்கு திராவிட மாடல் அரசு காரணமாக இருந்தது வெட்ககேடானது. லஞ்சம் வாங்கியதிலிருந்து விடுதலையாவதற்கு லஞ்சம் கொடுத்த செந்தில் பாலாஜி, வழக்கை தவிடு பொடியாக்குவதற்கு ரூ.160 கோடி செலவு செய்திருக்கிறார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ரூ.400 கோடி செலவு செய்து காங்கிரஸ் கட்சி வேட்பாளரை வெற்றி பெறவைத்தார். அந்தப் பணம் எப்படி வந்தது என கேட்க வேண்டிய முதல்வர் ஸ்டாலின், மாறாக அவரை உற்சாகப்படுத்தினார். இரண்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து 24 பேர் உயிரிழந்தனர். ஆனால் தி.மு.க கூட்டணியிலுள்ள தலைவர்களான வைகோ, முத்தரசன், பாலகிருஷ்ணன், திருமாவளவன் உள்ளிட்டோர் ஆளுங்கட்சிக்கு எதிராகப் போராட்டம் நடத்தவில்லை.

தமிழகத்தில் தி.மு.க ஆட்சி நடைபெறும் இரண்டு ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் கள்ளச்சாராயம் பரவியிருக்கிறது. ஆனால் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் எங்கே போனார்கள் எனத் தெரியவில்லை. தி.மு.க-வுக்கு எதிராகப் பேசி வந்த வைகோ அறிவாலயத்தில் படுத்துக் கிடக்கிறார். செந்தில் பாலாஜி செய்தது தவறு என தி.மு.க தோழமை கட்சித் தலைவர்கள் சொல்லியிருக்க வேண்டும். திருமாவளவனவாது சொல்லியிருக்கலாமல்லவா… யாருமே சொல்லவில்லை.
அண்ணாவால் தொடங்கப்பட்ட தி.மு.க பத்து ரூபாய்க்கு அடிமையாகிவிட்டது. லஞ்ச லாவண்யத்தில் திளைத்திருக்கிறது. இதை நாங்கள் சொல்லவில்லை உங்களுடைய அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சொன்னார். கொள்ளையடித்த பணமான ரூ.30,000 கோடியை எங்கு வைப்பது எனத் தெரியாமல் அழைவதாகப் பேசியிருந்தார். அதனால் இந்தப் பிரச்னை அனல் விட்டுக் கிளம்பியது. செந்தில் பாலாஜியைக் கைதுசெய்ய வலியுறுத்திய ஸ்டாலின், தற்போது அவர் அப்ரூவராக மாறிவிடக்கூடாது என்பதற்காகத்தான் வக்காலத்து வாங்குவதுடன் ஓடோடிச் சென்று பார்க்கிறார்.

காவேரி மருத்துவமனை தி.மு.க-வினருடையது. அதனால் உள்ளேயே செந்தில் பாலாஜி வேலையை முடித்தாலும் முடித்துவிடுவார்கள். அடுத்த சாதிக்பாட்சா செந்தில் பாலாஜிதான். சாதிக் பாட்சாவின் மனைவியே இதை சொல்கிறார். வழக்கை சட்டப்படி சந்திப்பேன் எனக் கூறிய செந்தில் பாலாஜி, கண்ணீர்விட்டுக் கதறினார். பொய்வழக்கில் நீதியரசர் வழங்கிய தீர்ப்புக்குப் பிறகு காரில் இருக்கின்ற சைரனையும், தேசியக்கொடியையும் எடுத்து விடுங்கள் எனச் சொன்ன ஜெயலலிதா குற்றமற்றவர்.
கைது என்றதும் கதறியவர்கள் இரண்டே பேர்தான் ஒருவர் கருணாநிதி, மற்றொருவர் செந்தில் பாலாஜி. இப்படிப்பட்டவர்தான் இலாகா இல்லாத அமைச்சராகத் தொடர்கிறார். அவரது இலாகாவை இரண்டு அமைச்சர்களுக்குக் கொடுத்திருக்கிறது அரசு. குற்றவழக்கில் சம்பந்தப்பட்ட, குற்றவாளியாக இருக்கிற, நீதிமன்றத்தில் தடுப்புக் காவலில் இருக்கிற செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராகத் தொடரக்கூடாது என ஆளுநர் ரவி குறிப்பிட்டிருக்கிறார்.

முதலமைச்சர் ஸ்டாலின், `மத்திய அரசில் இருக்கக் கூடிய அமைச்சர்கள் குற்றவாளிகளாக இருக்கின்றனர். அதன் வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, அவர்கள் பதவியை தொடர்கிறார்களே?’ என அமித் ஷாவையெல்லாம் குறிப்பிட்டுக் கேட்கிறார். அமித் ஷாவைக் கைது செய்தபோது அவர் அழுதாரா, புரண்டாரா, கண்ணீர் விட்டாரா…. செந்தில் பாலாஜி போன்ற குற்றவாளிகளைத் தொடரவிட்டால் தமிழக அரசியல் பாழ்பட்டுப் போய்விடும், ஜனநாயகம் வீணாகிவிடும்” என்றார்.
from Tamilnadu News https://ift.tt/0SsN9aW
