மும்பையில் 2008-ம் ஆண்டு நடந்த தீவிரவாதத் தாக்குதலில் ஈடுபட்டதற்காக தேடப்பட்டு வருபவர் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி சஜித் மிர் (Sajjid Mir) . இந்நிலையில், சஜித் மிர்ரை சர்வதேச தீவிரவாதியாக அறிவித்து கறுப்புப் பட்டியலில் சேர்த்து, அவரது சொத்துகளை முடக்கி, பயணத் தடை மற்றும் ஆயுதத் தடைக்கு உட்படுத்த வேண்டும் என்று அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகள் ஒன்றாக சேர்ந்து ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் வலியுறுத்தியன. ஆனால், அமெரிக்கா மற்றும் இந்தியாவின் இந்த முடிவுக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், சீனாவின் இந்த நடவடிக்கைக்கு ஐ.நா சபையின் இந்திய பிரதிநிதி பிரகாஷ் குப்தா கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது குறித்து ஐ.நா சபையில்,”மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் சஜித் மிர். இந்தியா, அமெரிக்கா மற்றும் பல நாடுகளின் தேசிய சட்டங்களின் கீழ் தடைசெய்யப்பட்ட தீவிரவாதியாக சேர்க்கப்பட்டிருக்கிறார். ஆனால், சஜித் மிரை சர்வதேச தீவிரவாதியாக பட்டியலிடுவதற்கான முன்மொழிவு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் கறுப்பு பட்டியல்களுக்குள் வரவில்லை.
சஜித் மிரை ஒரு தீவிரவாதியாக அறிவிக்கவும், அவர் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கவும் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலிடம் (UNSC) இந்தியாவும் அமெரிக்காவும் முன்வைத்த கோரிக்கையை சீனா தடுத்திருப்பது கண்டனத்துக்குறியது. மும்பையின் தாஜ் ஹோட்டலில் வெளிநாட்டினரை கொல்ல எல்லைக்கு அப்பால் இருந்து தீவிரவாதிகளை மிர் இயக்கியது தொடர்பான ஆடியோவை சமர்பித்திருக்கிறோம்.

சஜித் மிர் இந்திய சட்டங்களின் கீழ் தடைசெய்யப்பட்ட தீவிரவாதியாக பட்டியலிடப்பட்டிருக்கிறார். மும்பை தீவிரவாதத் தாக்குதல் நடந்து 15 ஆண்டுகள் ஆன நிலையில், அதன் மூளையாகச் செயல்பட்டவர்கள் இன்னும் நீதியின் முன் நிறுத்தப்படவில்லை” எனத் தெரிவித்திருக்கிறார்.
from Tamilnadu News https://ift.tt/tOBk6Ds
