அமலாக்கத்துறையால் கைதுசெய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி, அ.தி.மு.க சார்பில் தமிழகம் முழுக்க ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த நிலையில், செந்தில் பாலாஜியின் சொந்த மாவட்டமான கரூரில், அந்த மாவட்ட அ.தி.மு.க நிர்வாகிகளோ, “கரூரில் ஆர்ப்பாட்டம் நடத்த அ.தி.மு.க-வை அனுமதிக்கவில்லை. இங்கே, இன்னமும் செந்தில் பாலாஜி ஆட்சிதான் நடக்கிறது!” என்று வெடிக்கிறார்கள்.

இது குறித்து, கரூர் அ.தி.மு.க மாவட்ட நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். “கரூரில் வழக்கமாக நாங்க ஆர்ப்பாட்டங்களை நடத்தும் தாலுகா அலுவலகம் அல்லது பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டு, கரூர் நகர காவல் நிலைய ஆய்வாளர் விதுன்குமார், டி.எஸ்.பி சரவணன் ஆகியோருக்கு நேரில் கடிதம் கொடுத்தோம். அதோடு, கரூர் மாவட்ட எஸ்.பி சுந்தரவதனத்துக்குப் பதிவு தபால் மூலம் அனுமதி கேட்டு கடிதம் அனுப்பினோம். ஆனால், காவல்துறையில், `மாநகராட்சி எல்லைக்குள் இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்த மாநகராட்சி நிர்வாகத்திடம் அனுமதி வாங்க வேண்டும் என்று மாநகராட்சியில் தீர்மானம் போட்டிருக்காங்க. அதனால், நீங்க மாநகராட்சியில் முதலில் அனுமதி வாங்குங்க’ என்று இதுவரை இல்லாத ஒரு நடைமுறையைச் சொன்னாங்க. `இது என்ன புது ரூலாக இருக்கே’ என்று குழம்பிப்போன நாங்க, மாநகராட்சி கமிஷனருக்கும் கடிதம் அனுப்பி, அனுமதி கேட்டோம். ஆனால், மாநகராட்சி தரப்பில், ‘எங்களிடம் அனுமதி கேட்கவேண்டியதில்லை’ என்று சொல்லிட்டாங்க.

எம்.ஆர்.விஜயபாஸ்கர் (கரூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளர்)

`அனுமதி தராமல் போலீஸார் இழுத்தடிக்கிறார்கள்’ என்று புரிந்துகொண்ட நாங்க, மறுபடியும் காவல் ஆய்வாளர் விதுன்குமார்கிட்ட போய் கேட்டதுக்கு, ‘அங்கே கேட்கணும், இங்கே கேட்கணும்’ என்று இழுத்தடித்தார். டி.எஸ்.பி-யோ, ‘நீங்கள் கேட்கும் இடங்களில் அனுமதி தரமுடியாது. வேலுச்சாமிபுரம், போஸ்ட் ஆபீஸ் அல்லது பழைய திண்டுக்கல் சாலை… இவற்றில் ஏதாவது ஓர் இடத்தில் வேண்டுமானால் அனுமதி தருகிறோம்’ என்று சொன்னார். ரொம்ப இன்டீரியரான இடங்கள் அவை. அப்படி என்றால், தி.மு.க சார்பில் அடிக்கடி நிகழ்ச்சிகள் நடத்தப்படும், வெங்கமேடு பகுதியிலுள்ள காமராஜ், அண்ணா சிலைகள் அமைந்திருக்கும் இடத்தில் அனுமதி கேட்டோம். அதற்கும் மறுத்துவிட்டார்கள். அதனால், ஆர்ப்பாட்டம் கேன்சலாகிவிட்டது. இன்னும் கரூரில் செந்தில் பாலாஜி ஆட்சிதான் நடக்கிறது. அவரது ஆட்கள் இன்னமும் காவல்துறையைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, அவர்களைத் தங்கள் இஷ்டம்போல் ஆட்டுவிக்கிறார்கள். இன்னும் புரிகிற மாதிரி சொல்ல வேண்டும் என்றால், காவல்துறை அவருக்காக மகுடிக்கு மயங்கும் பாம்பாக கட்டுப்பட்டுக் கிடக்கிறது. இதற்கும் சேர்த்தே விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்துவோம்” என்றனர்.

இந்த விவகாரம் குறித்து, கரூர் அ.தி.மு.க மாவட்ட அவைத்தலைவர் திரு.வி.க நம்மிடம், “ஆளுங்கட்சி உள்ளிட்ட எல்லா அமைப்புகளும், கட்சிகளும் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்துற இடங்களில்தான் நாங்க ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டோம். ஆனால், மறுப்பு தெரிவித்துவிட்டனர். நேற்று முன்தினத்திலிருந்து நேரிலும் பலமுறை ஆய்வாளர், டி.எஸ்.பி-யைச் சந்தித்து அனுமதி கேட்டோம். ‘சொல்கிறோம், சொல்கிறோம்’ என்று இழுத்தடித்தார்களே தவிர, கடைசிவரை அனுமதி தரவே இல்லை. அதேபோல், கரூர் மாவட்டச் செயலாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அண்ணன், போன் மூலம் எஸ்.பி சுந்தரவதனத்துக்கிட்ட பேசுனப்ப, ‘நான் திருவாரூரில் முதல்வர் நிகழ்ச்சியில் இருக்கிறேன். என்னவென்று பார்க்கிறேன்’ என்று சொல்லிவிட்டு, போனை வைத்துவிட்டார். அனுமதி தரவேயில்லை. நாங்கள் அனுமதி கேட்கும் இடங்களில் எல்லாம் தி.மு.க சார்பில் பல நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. ஆனால், எங்களுக்கு மட்டும் அனுமதி தர மறுக்கிறார்கள். இப்போது என்றில்லை. தி.மு.க ஆட்சிக்கு வந்தபிறகு கரூர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் நடத்த முயன்ற பத்துக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளுக்கு கரூர் காவல்துறை அனுமதி தராமல் ஓரவஞ்சகம் செய்தது. நாங்கள் ஒவ்வொருமுறையும் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளைக்குச் சென்று அனுமதி வாங்கி வந்து நிகழ்ச்சிகளை நடத்துவோம். ஆனால், அப்படியும் ‘இப்படி நடத்தக்கூடாது, இவ்வளவு பேரைக் கூட்டக்கூடாது’ என்று காவல்துறை எங்களுக்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை விதிக்கும்.

திரு.வி.க

அவற்றைக் கடைப்பிடித்து நிகழ்ச்சிகளை நடத்தினாலும், ‘இத்தனை பேர் கூடினீர்கள், வாகனங்களை நிறுத்தி, போக்குவரத்துக்கு இடைஞ்சல் செய்தீர்கள்’ என்று எங்கள்மீது காவல்துறை வழக்குப் போடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறது. இந்தமுறையும் அப்படி அனுமதி மறுத்துவிட்டார்கள். கரூரில் தி.மு.க ஆட்டம் கண்டுவிட்டது. அதை மறைக்கவே இப்படி செய்கிறார்கள். அமலாக்கத்துறையைக் கண்டித்து, தி.மு.க கூட்டணிக் கட்சிகள் நடத்திய கண்டனப் பொதுக்கூட்டத்தை கரூரில் நடத்தாமல், ஏன் கோவையில் நடத்தினார்கள்… இங்கே நடத்தினால், கரூரில் மக்கள் கூடமாட்டார்கள் என்ற பயத்தில், கோவையில் நடத்தியிருக்கிறார்கள். இப்போது, எங்களுக்கு ஆர்ப்பாட்டம் நடத்தவும் அனுதிக்க மறுப்பு சொல்ல வைத்துவிட்டார்கள். ஆனால், இந்தமுறையும் செந்தில் பாலாஜியைப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி, ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டு, நீதிமன்றப் படியை ஏறியிருக்கிறோம். அனுமதி வந்ததும், மற்றொரு நாளில் ஆர்ப்பாட்டம் நடத்தவிருக்கிறோம். அதற்கும் காவல்துறை பிரச்னை செய்தால், எங்கள் பொதுச்செயலாளரின் அனுமதியோடு, கண்டனப் பொதுக்கூட்டம் நடத்தவிருக்கிறோம்” என்றார்.

இது குறித்து, கரூர் மாவட்ட எஸ்.பி சுந்தரவதனத்திடம் பேசினோம். “அ.தி.மு.க தரப்பில் அனுமதி கேட்கும் அத்தனை இடங்களிலும் மீட்டிங் நடத்ததான் அனுமதி. ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி இல்லை. ஏற்கெனவே பலதடவை அனுமதி கொடுத்திருக்கிறோம். அப்போது 2,000 பேருக்கும் அதிகமாகத் திரட்டி, போக்குவரத்தைத் தடுத்தார்கள். அதற்கு எங்களிடம் வீடியோ ஆதாரம் இருக்கிறது. அதனால், போக்குவரத்துக்குச் சிக்கல் இல்லாத இடங்களில் வேண்டுமானால் அனுமதி தருகிறோம் என்று எங்கள் தரப்பில் சொன்னதற்கு, அவர்கள் மறுத்துவிட்டார்கள். மற்றபடி, நாங்கள் யாருக்கு சார்பாகவும் இந்த விவகாரத்தில் நடக்கவில்லை. அவர்கள், அரசியலுக்காக என்ன வேண்டுமானாலும் சொல்வார்கள். நாங்கள் ரூல்ஸ்படி அனுமதி தர மறுத்தோமே தவிர, இதில் வேறு எந்த உள்நோக்கமோ, அரசியல் காரணங்களோ இல்லை” என்றார்.

சுந்தரவதனம் (கரூர் மாவட்ட எஸ்.பி)

மேலும், இந்த விவகாரம் குறித்து, அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் பேசினோம். “அண்ணன்மீது அமலாக்கத்துறை கடுமை காட்டி வருகிறது. இதனால், அவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டு, இதயத்தில் பிரச்னை ஏற்பட்டு, அவருக்கு பைபாஸ் சர்ஜரி செய்திருக்கின்றனர். இந்த நிலையில், எங்களின் முழுநேர வேண்டுதல் என்னவென்றால், அவர் பூரணமாக நலம் பெற வேண்டும், அவர்மீது போடப்பட்ட வழக்கிலிருந்து அவர் விரைவில் வெளியே வர வேண்டும் என்பதுதான். இதைத்தவிர, எங்களுக்கு வேறெந்த சிந்தனையும் இல்லை. இந்த நிலையில், நாங்கள் காவல்துறையைக் கட்டுப்படுத்துகிறோம் என்று சொல்வது, அபாண்டமான குற்றச்சாட்டு” என்றனர்.

from Tamilnadu News https://ift.tt/VZp8jeu