சமீபத்தில் தமிழ்நாடு வந்த மத்திய அமைச்சர் அமித் ஷா, நாடாளுமன்றத் தேர்தலில் 25 தொகுதிகளில் பாஜக வெல்லும் என்று பேசி இருந்தார். அதேபோல, கடந்த வாரம் சேலத்துக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின், அதிமுகவை அடிமைக்கட்சி என்று விமர்சனம் செய்திருந்தார். இதுகுறித்து சேலம் ஆத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடியிடம் கேள்வி எழுப்பட்டது. இதற்கு பதிலளித்த எடப்பாடி, “தமிழ்நாடு – புதுவையில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் அ.தி.மு.க வெல்லும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இதுதான் அ.தி.மு.க-வினர் மனநிலையாக உள்ளது.

அமித்ஷா.

25 தொகுதிகளில் பா.ஜ.க வெல்லுவோம் என்பது அமித் ஷாவின் தனிப்பட்ட கருத்து. அ.தி.மு.க-வுக்கென்று தனிக் கொள்கை இருக்கிறது. அந்த கொள்கையின் அடிப்படையில்தான் கூட்டணி அமைக்கிறோம். அதிமுக என்பது யாருக்கும் அடிமை கிடையாது’ என்று ஓப்பனாக பேசி இருக்கிறார்.

கடந்த மே மாதம் டெல்லி சென்று அமித் ஷா-வை சந்தித்த எடப்பாடி, பாஜகவுடன் கூட்டணியில் இருப்பதாக வெளிப்படையாக அறிவித்திருந்தார்.

ஆனால், தற்போது, `தனிக் கொள்கை, அதன்படிதான் கூட்டணி, 40 தொகுதியிலும் வெற்றி, நாங்கள் அடிமை இல்லை’ என்று பேசி இருப்பது கூட்டணிக்குள் புது புகைச்சலை கிளப்பி இருக்கிறது.

இதுதொடர்பாக கொங்கு மண்டலத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் ஒருவரிடம் பேசினோம். “அ.தி.மு.க-வின் தொண்டர்களின் மனநிலையில் இருந்து பொதுச் செயலாளர் எடப்பாடி பேசி இருக்கிறார். அம்மா குறித்தும் அ.தி.மு.க குறித்தும் பா.ஜ.க-வினர் தொடர்ந்து பேசிக் கொண்டே இருக்கிறார்கள். இதுகுறித்து கடந்த மே மாதம் டெல்லியில் அமித் ஷாவை சந்தித்து தெளிவுப்படுத்தி இருந்தோம். அதன்படிதான், இருதரப்புக்கும் சமாதானம் செய்யப்பட்டது. ஆனாலும், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அம்மா குறித்து அவதூறாக பேசி இருக்கிறார்.

அண்ணாமலை – எடப்பாடி பழனிசாமி

இதையும் பொறுத்துக் கொண்டு தலைமையிடம் புகார் அனுப்ப இந்த முறை எங்களுக்கு மனது வரவில்லை. அதனால், சீனியர்களை வைத்து பதிலடி கொடுத்ததோடு, அண்ணாமலைக்கு எதிராக மா.செ.க்கள் கூட்டத்தில் கண்டன தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. பின்னர், தனிப்பட்ட முறையில் எனது கருத்து திரிக்கப்பட்டுவிட்டது என்று அண்ணாமலை எடப்பாடியிடம் விளக்கமும் கொடுத்தார். ஆனாலும், பாஜகவினர் பேச்சை தலைமை கண்டிக்கவில்லை. இந்நிலையில்தான், அமித் ஷா 25 தொகுதியில் பாஜக வெல்லும் என்று பேசி இருக்கிறார். அவருடன் கருத்துக்கு எதிர்க்கருத்து கொடுக்கும் விதமாகவும், தொண்டர்களை உற்சாகப்படுத்தும் விதமாகவும் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று பேசி இருக்கிறார்.

அதேபோல, நாங்கள் யாருக்கும் அடிமை இல்லை என்பதையும் தெளிவுப்படுத்தி இருக்கிறார். எது எப்படி இருந்தாலும், நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி உறுதி செய்வது எடப்பாடி தலைமையிலான அதிமுகதான். இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை” என்றார் உறுதியாக…

எடப்பாடி – அமித்ஷா

இதுதொடர்பாக பா.ஜ.க-வின் துணைத் தலைவர் ஒருவரிடம் பேசினோம். பெயரை வெளியிட வேண்டாம் என்ற நிபந்தனையுடன் நம்மிடம் பேசிய அவர், ” வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணியை இறுதி செய்யும் வலிமை பா.ஜ.க-வுக்குதான் இருக்கிறது. அது அ.தி.மு.க தலைவர்களுக்கும் நன்றாக தெரியும். அரசியலுக்காகவும் முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவும்தான் எடப்பாடி பேசியிருக்கிறாரே தவிர, இதை பா.ஜ.க-வுக்கு எதிரானது என்று எடுத்து கொள்ளக்கூடாது. இன்று ஏதாவது பேசிவிட்டால், டெல்லியில் இருந்து போன் வரும் என்று அவர்களுக்கு தெரியும்…” என்றார் சுருக்கமாக…

பா.ஜ.க-வுடனான கூட்டணி நிலைப்பாடு குறித்து டெல்லி செல்வதற்கு முன், டெல்லி சென்று திரும்பிய பின் என அ.தி.மு.க தலைவர்களின் கருத்து இரு வேறாக இருந்திருக்கிறது. இந்த விவகாரத்தில் என்ன நடக்கிறதென்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.!

from Tamilnadu News https://ift.tt/HKOxhGt