​செந்தில் பாலாஜியை ​அமைச்சர் ​பதவி​யிலிருந்து நீக்க வலியுறுத்தி திண்டுக்கல், மணிக்கூண்டு அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.​ அ.தி.மு.க​ பொருளாளரும், திண்டுக்கல் மேற்கு மாவட்ட​ச்​ செயலாளரு​மான திண்டுக்கல் சீனிவாசன், துணை​ப்​ பொது​ச்செயலாளரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட​ச்​ செயலாளருமான ​​நத்தம் விஸ்வநாதன் ​உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினர். 

ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டத்தில் பேசிய ​நத்தம் விஸ்வநாதன்,​ “ஊழல் செய்ததால் கையும் களவுமாக அமலாக்கத்துறை அதிகாரிகளால் செந்தில் பாலாஜி கைதுசெய்யப்பட்டது தமிழகத்துக்கு தலைகுனிவை ஏற்படுத்தியிருக்கிறது. அவர் உடல்நலம் சரியில்லை என உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். கைதுசெய்யப்பட்ட செந்தில் பாலாஜியை அமைச்சரவை பதவியிலிருந்து நீக்காமல் இருப்பது தமிழகத்துக்குப் பெரும் கரும்புள்ளியாக இருக்கிறது. ஏனெனில், டெல்லியில் கெஜ்ரிவால் தலைமையிலான அமைச்சரவையில் ஊழல் செய்ததாக துணை முதல்வர் சிசோடியா கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். உடனே அவர் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டார். இதேபோன்று மேற்கு வங்கத்திலும் ஊழல் செய்தற்காக ஓர் அமைச்சர் கைதுசெய்யப்பட்டார்.

உடனே, அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கம் செய்தனர். அதேபோன்று மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் ஊழல் செய்தற்காக கைதுசெய்யப்பட்டதால், அவர் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டார். ஆனால் ஸ்டாலின் அரசாங்கம் மட்டும் செந்தில் பாலாஜியைக் காப்பாற்றத் துடிக்கிறது. இதன் ரகசியம், மர்மம் மட்டும் புரியவில்லை. அவரை பதவியிலிருந்து நீக்க மறுப்பது ஏன்?”​ எனக் கேள்வி எழுப்பினார். ​

தொடர்ந்து பேசிய அவர், ​“தி.மு.க-வின் கருவூலமாக இருப்பது செந்தில் பாலாஜி தான். அவரை நிதி சேர்க்கும் ஆயுதமாக பயன்படுத்தி வருகின்றனர். அவரை விசாரித்தால் பல உண்மைகளை உளறிக் கொட்டிவிடுவார் என தி.மு.க-வினர் பயந்து போயிருக்கின்றனர். முன்னாள் மத்திய அமைச்சர்கள் ராசா, கனிமொழி ஆகியோர் கைதுசெய்து திகார் ஜெயலில் அடைக்கப்பட்டபோது ஒரு நாள்கூட தி.மு.க-வினர் நேரில் சென்று பார்க்கவில்லை. ஆனால், செந்தில் பாலாஜியைக் கைதுசெய்தவுடன் பதற்றமடைகின்றனர், துடிதுடிக்கின்றனர். அதுவும் முதல்வர் ஸ்டாலின், தான் வகிக்கின்ற முதல்வர் பதவியை மறந்து மூன்றாம் தர பேச்சாளர்போல் பேசுகிறார். எச்சரிக்கை விடுகிறார். `தொட்டுப்பார்…’ என சவால் விடுகிறார். அமலாக்கத்துறை தொட்டுப் பார்த்ததால்தானே செந்தில் பாலாஜி சிக்கியிருக்கிறார்.

அதிமுக ஆர்ப்பாட்டம்

​இதில் என்ன சவால்விட வேண்டியிருக்கிறது… இந்த சவால் எல்லாம் மக்கள் மத்தியில் எடுபடாது. அவர் முதல்வராக இருந்த போதிலும் துடிக்கின்ற காரணத்தையும் துடிப்பாகப் பேசுவதையும் பார்த்தால், இதில் ஏதோ சந்தேகம் இருக்கிறது என தமிழக மக்கள் அனைவரும் கூறுகின்றனர். இதனை அமலாக்கத்துறை முறையாக விசாரித்தால், பல்வேறு விஷயங்கள் பூதகரமாக வெளிப்படும்.

இதற்கிடையே ​​​அமைச்சர் பொன்முடி​யும், அவர்​ ​மகனும் ​மண் கடத்தல் விவாரத்தில் சிக்கியிருக்கின்றனர். ​இந்த வழக்குக்கு தடையாணை கேட்டதற்கு உச்ச நீதிமன்றமே மறுத்துவிட்டது. அடுத்த விக்கெட் பொன்​முடிதான். அவரும் ​அமைச்சர் பதவியை ​ராஜினாமா செய்ய வேண்டும். குற்றவாளிகளின் ஒட்டுமொத்த கூடாரமாக தி.மு.க இருக்கிறது. அதற்கு உதாரணம் இந்த இரண்டு தி.மு.க அமைச்சர்கள்தான். இது தமிழக அரசுக்கும் தமிழக மக்களுக்கும் ஏற்பட்ட மிக அவமானம்.​ எனவே ​உடனடியாக முதல்வர் ஸ்டாலின் செந்தில் பாலாஜியைப் பதவியை விட்டு நீக்க வேண்டும்”​ என்றார். 

ஆர்ப்பாட்டம்

இவரைத் தொடர்ந்து பேசிய திண்டுக்கல் சீனிவாசன், “தமிழகத்திலுள்ள 5,500 டாஸ்மாக் கடைகளில் தினமும் ஒரு கோடி மதுபானங்கள் விற்பனையாகின்றன. பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக விற்கின்றனர். இதனால் தினந்தோறும் ரூ.10 கோடி வீதம் ஒரு வருடத்துக்கு 3,500​​ கோடி ​ரூபாய் ​கொள்ளை அடிப்பதற்கு வழி வகுத்தவர்தான் செந்தில் பாலாஜி. `அரசுக்குப் போக வேண்டிய பணம், செந்தில் பாலாஜி மூலம் ஸ்டாலின் குடும்பத்துக்குச் செல்கிறது’ என அமைச்சர் பி​.​டி​.​ஆர்.பழனிவேல் ராஜ​னே​​ தெரிவித்திருக்கிறார்” என்றார்.

from Tamilnadu News https://ift.tt/ruwJvoy