விழுப்புரம் மாவட்டம், மேல்பாதி கிராமத்திலுள்ள திரெளபதி அம்மன் கோயிலில், குறிப்பிட்ட பிரிவினரை அனுமதிக்கவில்லை எனக் கூறி சட்டம்-ஒழுங்குப் பிரச்னையைக் காரணம்காட்டி, ஜூன் 7-ம் தேதி அந்தக் கோயிலுக்கு சீல் வைக்கப்பட்டது.
இதை எதிர்த்தும், கோயிலை மீண்டும் திறக்க அரசுக்கு உத்தரவிடக் கோரியும், விழுப்புரம் மாவட்டம், கரிபாளையத்தைச் சேர்ந்த சுதா சர்வேஷ் குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த மனுவில், கோயிலில் குறிப்பிட்ட சமுதாயத்தினர் நுழைய அனுமதி மறுக்கப்படவில்லை எனவும், தீண்டாமை பின்பற்றப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கொரோனா ஊரடங்கு காலத்தில்கூட பொதுமக்கள் இல்லாமல் கோயிலில் பூஜைகள் நடத்தப்பட்ட நிலையில், தற்போது கோயிலில் தினசரி பூஜைகள், அபிஷேகங்கள் செய்யப்பட வேண்டும் என்ற ஆகம விதியை மீறும் வகையில், கோயிலுக்கு சீல் வைக்கப்பட்டிருப்பதாகவும் மனுவில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
கோயிலுக்கு சீல் வைப்பதைத் தவிர்த்து, பொதுமக்களை அனுமதிக்காமல் பூஜைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கியிருக்க வேண்டும் எனவும், சட்டம்-ஒழுங்கைக் காரணம்காட்டி, கோயிலுக்கு சீல் வைக்க அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை எனவும் தன்னுடைய மனுவில் தெரிவித்திருந்தார் சுதா சர்வேஷ் குமார்.
இன்று இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கபுர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கோயில் திருவிழாவில் குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவருக்கு வழிபாடு நடத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் ஏற்பட்ட பிரச்னையில் ஒருவர் தாக்கப்பட்டதாகவும், அறநிலையத்துறை கோயிலுக்கு தக்காரை நியமித்தபோதும், அவரால் பொறுப்பேற்க முடியவில்லை என்றும் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடந்துவருவதாகவும் குறிப்பிட்டார். இதையடுத்து, பிரச்னை தொடர்பாக விசாரணை நடந்துவருவதால், கோயில் விவகாரத்தில் அறநிலையத்துறைதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதிகள், இது சம்பந்தமாக அறநிலையத்துறையை அணுகும்படி மனுதாரருக்கு அறிவுறுத்தினர்.
மேலும், மனுதாரரின் விண்ணப்பத்தை சட்டப்படி பரிசீலிக்கும்படி அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்தனர்.
from Tamilnadu News https://ift.tt/icpzyMa
