மும்பை மாநகராட்சி நிர்வாகத்தை கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிவசேனா ஆட்சி செய்து வருகிறது. மும்பை மாநகராட்சியில் கடந்த ஆண்டு 9 துறைகள் மூலம் 12 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 76 திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டன. இதில் முறைகேடுகள் நடந்திருப்பதாக மத்திய தணிக்கை குழு தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது. அதனடிப்படையில் இந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக்குழு அமைக்க முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உத்தரவிட்டிருக்கிறார்.
இந்த நிலையில் புதிய திருப்பமாக கொரோனா காலத்தில் கொரோனா முகாம்கள் அமைத்தது, தேவையான மருந்து, சிலிண்டர் உட்பட தேவையான உபகரணங்கள் வாங்கியதில் ஊழல் நடந்திருப்பதாக வந்த புகாரை தொடர்ந்து மத்திய அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் இன்று காலையில் 15 இடங்களில் அதிரடி ரெய்டு நடத்தி வருகின்றனர்.

மும்பை மாநகராட்சி அதிகாரிகள், சப்ளையர்கள், ஒப்பந்ததாரர்கள், ஐஏஎஸ் அதிகாரிகளின் வீடுகளில் இந்த ரெய்டு நடந்து வருகிறது. உத்தவ் தாக்கரே கட்சியினர் துரோகிகள் தினத்தை அனுசரித்ததை தொடர்ந்து இந்த ரெய்டு நடப்பதாக கூறப்படுகிறது. சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்துக்கு மிகவும் நெருக்கமான சுஜித் பட்கர் இல்லத்திலும் ரெய்டு நடத்தப்பட்டது. சுஜித் பட்கருக்கு நெருக்கமான 10 இடங்களில் ரெய்டு நடந்து வருகிறது.
இது தவிர உத்தவ் தாக்கரே மற்றும் அவரது மகன் ஆதித்ய தாக்கரேக்கு மிகவும் நெருக்கமானவர்களின் இல்லங்களிலும் இந்த ரெய்டு நடந்து வருகிறது. சிவசேனா (உத்தவ்) செயலாளர் சூரஜ் சவான் வீடு, மும்பை மாநகராட்சி கூடுதல் கமிஷனர் சஞ்சீவ் ஜெய்ஸ்வால் இல்லத்திலும் அதிகாரிகள் காலையில் இருந்தே சோதனை நடத்தி வருகின்றனர். சுஜித் பட்கருக்கு சொந்தமான லைஃப்லைன் ஹாஸ்பிட்டல் மேனேஜ்மெண்ட் சர்வீஸ் நிறுவனம் மோசடியாக கொரோனா காலத்தில் ஜம்போ கொரோனா சிகிச்சை முகாம் அமைக்க ஒப்பந்தம் பெற்றதாக ஏற்கெனவே புனேயில் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.

மும்பையில் கொரோனா காலத்தில் சிகிச்சைக்காக ஜம்போ சென்டர் அமைக்கப்பட்டதில் ஊழல் நடந்திருப்பதாக பா.ஜ.க முன்னாள் எம்.பி. கிரித் சோமையா ஆசாத் மைதானம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்திருந்தார். இது குறித்து போலீஸார் வழக்கு பதிவுசெய்து அதனை பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றினர். இவ்வழக்கின் அடிப்படையில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் ரெய்டு நடத்தியிருக்கின்றனர்.
from Tamilnadu News https://ift.tt/ovjHukc
