உத்தரகாண்ட் மாநிலத்தில் இருக்கிறது, இந்துக்களின் புனிதத் தலங்களில் ஒன்றான கேதார்நாத் கோயில். இந்தக் கோயிலுக்கு ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சென்றுவருவது வழக்கம். இந்த நிலையில், மும்பையைச் சேர்ந்த பெயர்கூற விரும்பாத தொழிலதிபர் ஒருவர் கொடுத்த நன்கொடையின் மூலம், கேதார்நாத் கோயிலின் கருவறைக்கு சுமார் 23,777.800 கிராம் தங்கம் பயன்படுத்தி தங்க முலாம் பூசப்பட்டது.

இந்த நிலையில், கேதார்நாத் கோயிலின் தீர்த்த புரோகித் மற்றும் சார்தாம் மகாபஞ்சாயத்தின் துணைத் தலைவரான சந்தோஷ் திரிவேதி, “கருவறையின் சுவர்களில் தங்கம் தற்போது பித்தளையாக மாறியிருக்கிறது. தங்க முலாம் பூசுவதற்கு பதிலாக, பித்தளை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதனால் சுமார் ரூ.125 கோடி மோசடி நடந்திருக்கிறது” என வீடியோ வெளியிட்டிருந்தார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதைத் தொடர்ந்து, உத்தரகாண்ட் மாநில சுற்றுலா, மதம் மற்றும் கலாசாரத்துறை அமைச்சர் சத்பால் மகராஜ், “பத்ரிநாத்-கேதார்நாத் கோயில் கமிட்டி சட்டம், 1939-ன் விதிகளின்படியே நன்கொடை ஏற்றுக்கொள்ளப்பட்டது. கேதார்நாத் கோயிலின் கருவறையில் தங்க முலாம் பூசுவதற்கு மாநில அரசிடமிருந்து அனுமதி பெறப்பட்டது. ஆனால், தற்போது கேதார்நாத் கோயிலில் மோசடி நடந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக விசாரிக்க கர்வால் கமிஷனர் தலைமையில் உயர்மட்ட விசாரணைக் குழுவை அமைக்குமாறும், விசாரணைக் குழுவில் தொழில்நுட்ப வல்லுநர்கள், பொற்கொல்லர்களையும் சேர்க்குமாறு கலாசார மற்றும் மத விவகாரங்கள் செயலர் ஹரிச்சந்திர செம்வாலுக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் மாநில அரசு அதிக உணர்வுடன் செயல்படுகிறது.
தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்திய தொல்லியல் துறையின் நிபுணர்களின் மேற்பார்வையின் கீழ் தங்க முலாம் பூசப்பட்டது, ஒரு நன்கொடையாளர் தங்கத்தை வாங்கி கருவறையின் சுவர்களில் பதித்திருக்கிறார், கோயில் கமிட்டிக்கு இதில் நேரடி பங்கு இல்லை. இந்த விவகாரத்துக்குத் தேவையற்ற முக்கியத்துவம் கொடுத்து சர்தாம் யாத்திரைக்கு இடையூறு ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் முயற்சி செய்கின்றன” எனத் தெரிவித்திருக்கிறார்.
from Tamilnadu News https://ift.tt/pHvE1Ay
