இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரர்கள், ஒலிம்பிக் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக் மற்றும் பஜ்ரங் புனியா, இரண்டு முறை உலக சாம்பியன்ஷிப் பதக்கம் வென்ற வினேஷ் போகட் உட்பட பல வீரர்கள், இந்திய மல்யுத்த சம்மேளத்தின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கை கைது செய்யக்கோரி ஏப்ரல் மாடம் முதல், டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். சுமார் இரண்டு மாதங்களுக்கும் மேலாக நீடித்த இந்தப் போராட்டம், தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

போராட்ட களத்தில் மல்யுத்த வீரர்கள்

ஜூன் 7-ம் தேதி மல்யுத்த வீரர்கள், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூரை சந்தித்தனர். அவர் ஜூன் 15-ம் தேதிக்குள் பிரிஜ் பூஷனுக்கு எதிரான விசாரணை முடிவடையும் என உறுதியளித்தார், இதனையடுத்து ஆறு பெண் மல்யுத்த வீரர்கள் பதிவு செய்த எஃப்.ஐ.ஆரின் அடிப்படையில் விசாரணையை முடித்து, டெல்லி காவல் துறை பிரிஜ் பூஷன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.

“இனி எங்களுக்கு நீதி கிடைக்கும் வரை இந்தப் போராட்டம் தெருக்களில் அல்ல, நீதிமன்றத்தில் தொடரும்” என்று அனைத்து முன்னணி வீரர்களும் ஒரே மாதிரியாக தங்கள் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.

இந்திய மல்யுத்த சம்மேளத்தின் புதிய தலைவர் மற்றும் செயற்குழுவை தேர்வு செய்தவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் மல்யுத்த வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

“ஜூலை 11-ம் தேதி தேர்தல்கள் நடைபெறவுள்ளன. மேலும் இது தொடர்பாக அரசின் உறுதிமொழிகளை செயல்படுத்த நாங்கள் காத்திருக்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

பிரிஜ் பூஷன் சரண் சிங்

தனக்கு எதிரான குற்றச்சாட்டு தவறானவை என்று பிரிஜ் பூஷன் கூறியிருந்தாலும் அவருக்கு எதிரான எஃப்.ஐ.ஆர் விவரங்கள் அவர் குறைந்தது 2 பெண் மல்யுத்த வீரர்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் 6 பெண்களை துன்புறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெருக்களில் மல்யுத்த வீரர்கள் நடத்திய போராட்டம் வாபஸ் பெறப்பட்டது பற்றி கருத்து தெரிவிக்க மறுத்த பிரிஜ் பூஷன், “என் மீதான குற்றச்சாட்டு, தற்போது நீதிமன்ற பரிசீலனையில் உள்ளது. வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் நீதிமன்றம் தனது கடமையை செய்யும்” என்று கூறியுள்ளார்.

from Tamilnadu News https://ift.tt/EoXOSFm