நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு எதிர்க்கட்சிகள் கூட்டம் பாட்னாவில் அண்மையில் நடைபெற்றது. அதில் 16 எதிர்க்கட்சிகள் கலந்துகொண்டன. இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள தெலங்கானா முதல்வர் கே.சி.ஆருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. எதிர்க்கட்சிகளின் இந்தக் கூட்டத்தையும், ராகுல் காந்தியையும் கடுமையாக விமர்சித்திருந்தார் கே.சி.ஆர். தெலங்கானாவில் டிசம்பர் மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

மல்லிகார்ஜுன கார்கே – ராகுல் காந்தி

இந்த நிலையில், தெலங்கானா மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுடன் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் டெல்லியில் ஆலோசனை மேற்கொண்டனர். இந்தக் கூட்டத்தில் தெலங்கானா காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அதைத் தொடர்ந்து தெலங்கானாவின் பாரத ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்) கட்சியின் 12-க்கும் மேற்பட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் காங்கிரஸில் தன்னை இணைத்துக் கொண்டனர்.

அவர்களில் முன்னாள் எம்.பி பொங்குலேடி ஸ்ரீனிவாஸ் ரெட்டி, முன்னாள் அமைச்சர் ஜூபல்லி கிருஷ்ணராவ், முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் பன்யம் வெங்கடேஸ்வரலு, கோரம் கனகய்யா, கோட்டா ராம் பாபு, பி.ஆர்.எஸ் எம்.எல்.சி நர்சா ரெட்டியின் மகன் ராகேஷ் ரெட்டி உள்ளிட்டோர் அடங்குவர். இதற்கு முன்னதாக தெலங்கானா முதல்வர் கே.சி.ஆர், “ஒரு கட்சியை அதிகாரத்திலிருந்து வெளியேற்றுவதில் அனைத்துக் கட்சிகளும் வெறிகொண்டிருக்கின்றன.

கே.சந்திரசேகர ராவ்

பா.ஜ.க-வுக்கு எதிரான போராட்டம் நாட்டின் முன் இருக்கும் அனைத்து முக்கியப் பிரச்னைகளிலும் இருக்க வேண்டும். தேர்தலில் ஆளும் பா.ஜ.க-வை அப்புறப்படுத்தி, அந்த இடத்தில் மற்றொரு கட்சியை வைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வெறித்தனமாகவும் கவலையுடனும் இருப்பதாகத் தெரிகிறது. அது வெறும் நிகழ்ச்சி நிரலாக மட்டும் இருக்கக் கூடாது. 2024 மக்களவைத் தேர்தலில் பி.ஆர்.எஸ் தனித்துப் போட்டியிடத் தயாராக இருக்கிறது” எனக் குறிப்பிட்டிருந்தார்.

from Tamilnadu News https://ift.tt/St9Fdfu