பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான 9 ஆண்டுக்கால பா.ஜ.க ஆட்சியின் சாதனை விளக்கக் கூட்டம் நீலகிரி மாவட்டம், குன்னூரில் இன்று நடைபெற்றது. மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தலைமையேற்று, பா.ஜ.க-வின் சாதனைகளைத் தொண்டர்களிடம் விளக்கிப் பேசினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய எல்.முருகன், “உலகின் வளர்ந்த நாடுகளின் பட்டியலில் ஐந்தாவது இடத்துக்கு உயர்ந்திருக்கிறது. இன்னும் சில ஆண்டுகளில் மூன்றாவது இடத்தை நோக்கி உயரும். பிரதமர் மோடியின் ‘கதி சக்தி’ திட்டத்தின்கீழ் அசுர வேகத்தில் உள்கட்டமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2047- ல் உலகின் வழிகாட்டியாக இந்தியா விளங்கும்.
ஊழலுக்கு எதிராக நாட்டின் ரட்சகனாக பிரதமர் மோடி அவர்கள் திகழ்ந்து வருகிறார். தமிழ் மரபின் பெருமைகளை உலகறியச் செய்து வருகிறார் நமது பிரதமர். ஏழை எளிய மக்களுக்கு தூய்மையான குடிநீர், இலவச காஸ் சிலிண்டர், அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம் , இலவசக் கழிவறை என பல்வேறு திட்டங்களை வழங்கி வருகிறது. தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கைகளை அரசு எடுக்கும்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வுக்கு எதிராக அரசியல் கட்சிகள் பல கூடின. ஆனால், எந்த மாற்றமும் நிகழவில்லை. தற்போதும் எதிர்க்கட்சிகள் பாட்னாவில் கூடியிருக்கின்றன.
பா.ஜ.க-வை எந்தக் கொம்பனாலும் வீழத்த முடியாது. 400 தொகுதிகளுக்கும் மேல் வெற்றிப் பெற்று பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பார்” என்றார்.
from Tamilnadu News https://ift.tt/ICnD5uV
