2024-ல் வரும் லோக் சபா தேர்தலில் பா.ஜ.க-வை வீழ்த்த வியூகம் அமைக்கும் விதமாக, கடந்த வெள்ளிக்கிழமையன்று பாட்னாவில், பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் 16 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் ஒன்றுகூடி ஆலோசனை நடத்தினர். இந்தக் கூட்டத்தில் மற்ற கட்சிகளைத் தவிர ஆம் ஆத்மி மட்டும், `டெல்லியில் மத்திய அரசின் அவசரச் சட்டத்தை காங்கிரஸ் எதிர்த்தால் மட்டுமே இதில் கலந்துகொள்வோம்’ என நிபந்தனையோடு உள்ளே நுழைந்தது.

பொது சிவில் சட்டம்

இப்படியான சூழலில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்த்துவரும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தப்பட வேண்டும் என பிரதமர் மோடி நேற்று கூறியிருந்தார். மேலும், `பொது சிவில் சட்டத்தை எதிர்க்கும் விதமாக இஸ்லாமியர்களை எதிர்க்கட்சிகள் தூண்டிவிடுகின்றன’ என்றும் மோடி கூறியிருந்தார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்து கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின. இப்படியான பரபரப்பான சூழலில், கொள்கைரீதியாக பொது சிவில் சட்டத்தை ஆதரிப்பதாக ஆம் ஆத்மி தெரிவித்திருக்கிறது.

இது குறித்து ஊடகத்திடம் பேசிய ஆம் ஆத்மியின் தேசிய பொதுச்செயலாளர் சந்தீப் பதக், “பொது சிவில் சட்டத்தை ஆம் ஆத்மி கொள்கைரீதியாக ஆதரிக்கிறது. இந்திய அரசியலமைப்பின் பிரிவு 44-ம் பொது சிவில் சட்டத்தை ஆதரிக்கிறது. ஆனால், பொது சிவில் சட்டம் குறித்து அனைத்து தரப்பினரிடமும் ஒருமித்தக் கருத்து ஏற்பட்டால் மட்டுமே, அரசு அதைக் கொண்டுவர வேண்டும். ஏனெனில், இதுபோன்ற விஷயங்களில் அனைவரும் ஒருமித்தக் கருத்துடன் செல்ல வேண்டும் என்று நங்கள் நம்புகிறோம்” என்றார்.

சந்தீப் பதக் – ஆம் ஆத்மி

டெல்லியில் மத்திய அரசின் அவசரச் சட்டத்தை அனைத்து எதிர்க்கட்சிகளும் எதிர்க்க வேண்டும் என கெஜ்ரிவால் கூறும் வேளையில், எதிர்க்கட்சிகள் எதிர்க்கும் பொது சிவில் சட்டத்துக்கு ஆம் ஆத்மி ஆதரவு தெரிவித்திருப்பது, 2024-ல் எதிர்க்கட்சிகளின் கூட்டணி குறித்துப் பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது. எதிர்க்கட்சிகள் எதிர்க்கும் சட்டங்களை ஆம் ஆத்மி ஆதரிப்பது ஒன்றும் இது முதன் முறையல்ல. ஏற்கெனவே 2019-ல் ஜம்மு காஷ்மீரில் பிரிவு 370-ஐ பா.ஜ.க அரசு நீக்கியபோது பல்வேறு எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால், கெஜ்ரிவால் பா.ஜ.க-வின் முடிவை சரியென்று ஆதரித்தார்.

from Tamilnadu News https://ift.tt/LjCcFhQ