தெலங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை செளந்தரராஜன் தூத்துக்குடி, திருநெல்வேலியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். பல்வேறு கோயில்களில் சாமி தரிசனமும் செய்தார். அப்போது பேசிய அவர், “பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டுப் பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அந்நாட்டு அரசாங்கத்தின் தனி விருந்தினராக அழைக்கப்பட்டு, பிரதமர் அங்கு சென்றிருந்தார். உலகில் மிக சில தலைவர்களுக்கே கிடைத்த மரியாதை நமது பிரதமருக்குக் கிடைத்திருக்கிறது.

தமிழிசை செளந்தரராஜன்

இந்தப் பயணத்தின் ஒவ்வொரு நிமிடமும் நமது நாட்டின் வளர்ச்சியை உலகுக்கு தெளிவுபடுத்தியிருக்கிறார். உலகில் மிகவும் பிரபலமான தலைவர் என்ற பெருமையையும் பிரதமர் மோடி பெற்றிருக்கிறார். முன்பெல்லாம் எந்தப் பிரச்னைக்குத் தீர்வானாலும் இந்தியா வேறு நாடுகளைச் சார்ந்து இருந்தது. ஆனால், இன்று எதற்கு தீர்வு வேண்டும் என்றாலும் மற்ற நாடுகள் இந்தியாவை நோக்கி பார்வையைத் திருப்புவது, நமது பிரதமரின் மிகப்பெரிய சாதனை என்றே சொல்ல வேண்டும்.

தமிழக முதல்வர் வெளிநாட்டுக்குப் பயணம் சென்றால் அதை சாதனை என்று சொல்கிறார்கள். ஆனால், பிரதமர் வெளிநாட்டுக்குப் பயணம் செய்தால், விமர்சனம் செய்கிறார்கள். வெளிநாடுகளுக்குச் சென்று முதலீடுகளை ஈர்ப்பது மட்டுமல்ல, எந்தளவுக்கு அந்த நாடுகளின் துணை நமக்குக் கிடைத்திருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம் என்பது எனது கருத்து. கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு 25-வது வந்தே பாரத் ரயில் பெட்டி, நமது பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

தமிழிசை செளந்தரராஜன்

இதற்கு முன்பெல்லாம் இதுபோன்ற ரயில் பெட்டிகள் இறக்குமதிதான் செய்யப்பட்டன. ஆனால், இப்போது நமது நாட்டில் தயாரிக்கப்படும் ரயில் பெட்டிகள் நமது நாட்டில் மட்டும் பயன்படுத்தப்படாமல், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த தொழில்நுட்பம் முதலிலேயே இருந்தது. ஆனால், அப்போது ஆட்சியில் இருந்த அரசுகள் அதைப் பயன்படுத்தவில்லை.

பிரதமர் நரேந்திர மோடி சுயசார்பு இந்தியா திட்டத்தின்கீழ் நம் நாட்டிலேயே எல்லாம் தயாரிக்க வேண்டும் என ஊக்கப்படுத்தி வருகிறார். அதன் மூலம் வந்தே பாரத் ரயில்களை நாமே தயாரிக்கிறோம். வந்தே பாரத் ரயில் இந்தியா முழுவதும் நகரங்களை இணைக்கிறது. அதில் தமிழகத்தின் பங்கும் இருக்கிறது என்பது நமக்குப் பெருமை. மேலும், வந்தே பாரத் ரயில் நமது தென் பகுதிகளையும் இணைக்க வேண்டும் என்பது எனது விருப்பம்.

தமிழிசை செளந்தரராஜன்

இது தொடர்பாக மத்திய ரயில்வே அமைச்சரிடம் கோரிக்கை வைப்போம், வெற்றியும் பெறுவோம். குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் எவுதளம் அமைக்கப்படுகிறது. இது தென் பகுதிக்கான மிகப்பெரிய வாய்ப்பாக அமையும். இதன் மூலம் 10,000 முதல் 15,000 இளைஞர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும். மேலும் தூத்துக்குடி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக மாறுவதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது” என்றார்.

from Tamilnadu News https://ift.tt/tdKUO8k